You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியக் கலாசாரம் குறித்து ஆராயக் குழு: தென் இந்தியர் இடம்பெறாதது ஏன்?
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
கடந்த 12 ஆயிரம் வருட இந்தியக் கலாசாரம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட மத்திய அரசின் குழுவில் தென்னிந்தியரோ, சிறுபான்மையினரோ, ஒடுக்கப்பட்டவர்களோ இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திங்கட்கிழமையன்று நாடாளுமன்றத்தில் ஒரு கேள்விக்கு எழுத்து மூலம் அளிக்கப்பட்ட பதிலில், இந்தியக் கலாசாரத்தின் துவக்கம் மற்றும் பரிணாமம் பற்றி ஆராய அமைக்கப்பட்ட ஒரு குழு குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டன.
மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறையின் ராஜாங்க அமைச்சர் பிரஹலாத் சிங் படேல் எழுத்து மூலம் இந்த பதிலை அளித்திருந்தார். அதில், தற்காலத்திலிருந்து 12,000 வருடங்களுக்கு முன்பு வரையிலான இந்தியக் கலாசாரம் குறித்தும் அதன் துவக்கம் குறித்தும் ஆராய ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
16 பேரைக் கொண்ட அந்த நிபுணர் குழுவில், இந்தியத் தொல்லியல் துறையின் முன்னாள் இணை இயக்குநர் ஜெனரல்கள் கே.என். தீக்ஷித், ஆர்.எஸ். பிஷ்ட், தொல்லியல் துறையின் முன்னாள் துணை இயக்குநர் ஜெனரல்கள் பி.ஆர். மாணி, ஜவஹர்லால் பல்கலைக்கழகப் பேராசிரியர் சந்தோஷ் சுக்லா, லால் பகதூர் சாஸ்திரி, தேசிய சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ரமேஷ் குமார் பாண்டே, அதே பல்கலைக்கழகத்தின் வேந்தர் முகுந்த்கம் ஷர்மா, விவேகானந்தா இன்டர்நேஷனல் ஃபவுண்டேஷனைச் சேர்ந்த மக்கன்லால், இந்தியப் புவியியல் சர்வேயின் முன்னாள் கூடுதல் இயக்குனர் ஜெனரல், ஜி.என். ஸ்ரீவத்ஸவா, தேசிய சமஸ்கிருத சன்ஸ்தானின் துணை வேந்தர் பி.என். சாஸ்திரி, தில்லி பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையின் தலைவர் பி.சி. சர்மா, ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் மானுடவியல் துறையின் டீன் கே.கே. மிஸ்ரா, தில்லி பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருதத் துறையைச் சேர்ந்த பல்ராம் சுக்லா, கனடாவைச் சேர்ந்த ஆசாத் கௌசிக், உலக பிராமணர் ஃபெடரேஷனின் தலைவர் எம்.ஆர். ஷர்மா, கலாசாரத் துறையின் பிரதிநிதி, ஆர்க்கியாலஜிகல் சர்வேயின் பிரதிநிதி என மொத்தம் 16 பேர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இந்தக் குழு குறித்த தகவல்கள் வெளியானதும் தி.மு.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, குழு அமைக்கப்பட்ட விதம் குறித்து ஆட்சேபம் தெரிவித்தார்.
"இந்திய கலாச்சாரம் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு நியமித்துள்ள குழுவில் ஏன் ஒரு சிறுபான்மையினர் கூட இடம்பெறவில்லை? சிறுபான்மையினரோ, தலித்துகளோ, இந்திய கலாசாரம் குறித்து பேசக்கூடாதா அல்லது அவர்கள் தகுதியற்றவர்களா?" எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதற்குப் பிறகு, கர்நாடகத்தின் முன்னாள் முதல்வர் குமாரசாமி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோரும் இந்தக் குழு குறித்து எதிர்ப்புத் தெரிவித்தனர்.
"அக்குழுவில் இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்தவர்களில் ஒருவர்கூட இடம்பெறவில்லை. இத்தோடு, மதச் சிறுபான்மையினர்களோ, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களோ, பெண் ஆய்வறிஞர்களோ இடம்பெறவில்லை. நிபுணர் குழுவில் இடம்பெற்றுள்ள 16 பேரில் 3 ஷர்மாக்கள், 2 சுக்லாக்கள், 1 சாஸ்திரி, 1 தீட்சித் மற்றும் 1 பாண்டே என இடம்பெற்றுள்ளனர் எனும்போதே பாஜக அரசின் உள்நோக்கமும், சதிச்செயலும் தெளிவுபட விளங்குகிறது" எனக் குற்றம்சாட்டியுள்ளார் சீமான்.
கலாசாரம், வரலாறு குறித்து ஒரு சார்பான பார்வை கொண்டவர்களே இந்தக் குழுவில் இடம்பெற்றிருப்பதால், இந்தக் குழுவின் நோக்கம் குறித்தே சந்தேகம் எழுவதாகவும் முழுவதும் வட இந்தியர்களே நிறைந்திருப்பதால் புதிய குழுவை அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாகவும் கர்நாடக முன்னாள் முதல்வர் எச்.டி. குமாரசாமி கோரியிருக்கிறார்.
இந்தக் குழு கடந்த 2014 - 19 ஆட்சியின்போது அமைக்கப்பட்ட குழு என்பதைச் சுட்டிக்காட்டும் சி.பி.எம்மின் மதுரைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான சு. வெங்கடேசன், சிந்துவெளி நாகரீகத்திற்கு முன்பே இந்தியாவில் நாகரீகம் இருந்தது எனக் காண்பிப்பதுதான் நோக்கம் என்கிறார்.
"இந்தக் குழு 2016ஆம் ஆண்டே அமைக்கப்பட்டுவிட்டது. ஆனால், இது குறித்து அந்த சமயத்தில் யாரும் பெரிதாகப் பேசவில்லை. கடந்த ஆண்டில் பா.ஜ.கவின் எம்.பியான தேஜஸ்வி நாடாளுமன்றத்தில் ஒரு கேள்வியை எழுப்பினார். 'இந்தியக் கலாச்சாரம் குறித்து எழுதுவதற்கு அமைக்கப்பட்ட குழு தன் அறிக்கையை சமர்ப்பித்துவிட்டதா, அவை நம் பாடப்புத்தகங்களில் இணைக்கப்பட்டுவிட்டனவா' என அவர் கேட்டிருந்தார். அந்தக் கேள்விக்கு பதிலளித்த அமைச்சகம், குழு இன்னும் அறிக்கையை தாக்கல் செய்யவில்லை என்று பதிலளித்தது. இதற்குப் பிறகு தற்போது 6 பா.ஜ.க. எம்.பிக்கள் இதே கேள்வியை எழுப்பியுள்ளனர். அதற்குப் பதிலளிக்கும்போதுதான் இந்தக் குழுவில் இடம்பெற்றவர்கள் குறித்த விவரங்களை வெளியிட்டு, இன்னும் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை எனக் கூறியிருக்கிறது அமைச்சகம்" என்கிறார் சு. வெங்கடேசன்.
பா.ஜ.க. சொல்கிற இந்துத்துவ கலாசாரம்தான் இந்தியக் கலாசாரம் என நிறுவவே இந்த குழு அமைக்கப்பட்டிருக்கிறது; இந்த 12 பேரிலும் வரலாற்று ஆசிரியர்களே இல்லாமல், தொல்லியல் துறையைச் சேர்ந்தவர்களே இடம்பெற்றிருப்பது எதற்காக எனக் கேள்வியெழுப்புகிறார் அவர்.
இந்தக் குழுவில் இடம்பெற்றிருப்பவர்கள் அவ்வப்போது தெரிவிக்கும் கருத்துகள், அவர்கள் வரலாற்றை அறிவியலுக்குப் புறம்பான முறையில் அணுகுவார்கள் என்பதைக் காட்டுகிறது. இது மிகவும் கவலைக்குரியது என்கிறார் Early Indians நூலின் ஆசிரியரான டோனி ஜோசப்.
"இந்தக் குழுவில் இடம்பெற்றிருக்கும் ஒருவர், இந்தியாவின் கலாசாரம் லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தையது என்றெல்லாம் சொல்கிறார். நவீன மனிதனின் எலும்புக்கூடுகளைப் பொறுத்தவரை, இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே மிக பழமையான எலும்புக்கூடே மூன்று லட்சம் வருடங்கள் பழையது" என்கிறார் டோனி ஜோசப்.
வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் நடந்த பல்வேறு மனித இடப்பெயர்வுகளால்தான் நாம் ஒரு தனித்துவமிக்க நாகரீகத்தை உருவாக்கியிருக்கிறோம்; சமீபகாலத்தில் மேற்கொள்ளப்பட்ட மரபணு ஆய்வுகள் இதனை உறுதி செய்திருக்கின்றன. நம்முடைய நாகரீகத்தை ஒற்றைத் தன்மை உடையதாக மாற்ற முயலும் எந்த ஒரு நடவடிக்கையும் இழப்பாகவும் துயரமாகவும்தான் முடியும் என்கிறார் அவர்.
இந்தக் குழுவைப் பொறுத்தவரை இந்தியாவின் 12 ஆயிரம் வருட கலாசாரத்தையும் அதன் துவக்கத்தையும் ஆராய அமைக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. 12 ஆயிரம் வருடங்களுக்கு முன்பாக இந்தியா எப்படி இருந்தது?
12,000 வருடங்களுக்கு முன்பிருந்து வரலாற்றுக் காலம்வரை
"முதலாவது இந்தியர்கள் (First Indians) அல்லது ஆஃப்ரிக்காவிலிருந்து வெளியேறியவர்கள் (Out of Africa) 65,000 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவை வந்தடைந்தார்கள். இதற்குப் பிறகு கடந்த 12,000 ஆண்டுகளில் மூன்று மிகப் பெரிய மனித இடப் பெயர்வுகள் நிகழ்ந்தன. 12,000 ஆண்டுகளுக்கு முன்பாக இரானின் ஆரம்ப கால விவசாயிகளைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்தடைந்தார்கள். இவர்கள் முதலாம் இந்தியர்களோடு கலந்து, இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் விவசாயப் புரட்சியைச் செய்தார்கள். இது நடந்தது ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக. இதுதான் ஹரப்பா நாகரீகமாக உருப்பெற்றது.
இதற்குப் பிறகு 4,000 வருடங்களுக்கு முன்பாக கிழக்காசியாவிலிருந்து ஒரு இடப்பெயர்வு நடந்தது. அதன் மூலம் ஆஸ்ட்ரோ - ஏசியாடிக் மொழிகளான காஷி, முண்டாரி போன்ற மொழிகள் இந்தியாவிற்குள் வந்தன.
இதற்கு அடுத்தபடியாக நடந்த மூன்றாவது மிகப் பெரிய இடப்பெயர்வில் மத்திய ஆசிய ஸ்டெப்பி புல்வெளிகள், அதாவது தற்போதைய கஜகஸ்தானைச் சேர்ந்தவர்கள் இந்தியாவிற்குள் வந்தார்கள், இவர்கள் மூலம் இந்தோ - ஆரிய மொழிகள் இந்தியாவிற்குள் வந்தன.
இந்திய மக்களை உருவாக்கிய இந்த நான்கு பெரும் இடப்பெயர்வுகளுமே நாம் இப்போது காணும் கலாசாரத்தை வடிவமைத்தவர்கள். தற்போதுள்ள இந்தியர்களில் எல்லோருமே இந்த மூதாதையர்களின் மரபணுவைக் கொண்டவர்கள். முடிவாகப் பார்த்தால், நாம் எல்லோருமே இடம்பெயர்ந்து வந்தவர்கள்தான். எல்லோருமே ஒன்றோடொன்றாகக் கலந்தவர்கள்" என விவரிக்கிறார் டோனி ஜோசப்.
ஒரு பழைய விவகாரத்தை எடுத்துக்கொண்டு எதிர்க்கட்சியினர் அரசியல் செய்வதாகக் குற்றம்சாட்டுகிறார் பா.ஜ.கவின் செய்தித் தொடர்பாளரான நாராயணன் திருப்பதி.
"இந்த விவகாரத்தை ஜாதி ரீதியாக அணுகுவதே தவறு. இந்தக் குழு எதற்காக அமைக்கப்பட்டதோ அதற்கேற்ற நிபுணர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். 2016லேயே இந்தக் குழு அமைக்கப்பட்டுவிட்டது. அப்போதிலிருந்து இப்போதுவரை என்ன செய்தார்கள்?" எனக் கேள்வியெழுப்புகிறார் நாராயணன்.
குழுவில் தென்னிந்தியர்கள் யாரும் இடம்பெறாதது குறித்துக் கேட்டபோது, "இந்த விவகாரம் குறித்து மத்திய அமைச்சர் பிரஹலாத் சிங்கிடம் பேசினேன். அப்படி ஒரு கருத்து இருக்குமானால், குழுவை மாற்றியமைக்கலாம் என்று என்னிடம் தெரிவித்தார். தொல்லியல் துறையில் யாருக்கு அனுபவம் இருக்கிறதோ அவர்கள் இதில் இடம்பெறுவார்கள். இதில் ஜாதி - மதத்தை வைத்து அரசியல் செய்யக்கூடாது" என்று தெரிவித்தார் நாராயணன்.
பிற செய்திகள்:
- தூங்கிக் கொண்டே மணிக்கு 150 கி.மீ வேகத்தில் கார் ஓட்டிய நபர் மீது வழக்கு
- ஹர்சிம்ரத் கெளர் பாதல் ராஜிநாமா - மோதி அமைச்சரவையில் இருந்து விலகும் முதல் பெண் அமைச்சர்
- இந்தியா Vs சீனா: "தலை வணங்கவும் மாட்டோம் தலை எடுக்கவும் மாட்டோம்" - ராஜ்நாத் சிங் மீண்டும் திட்டவட்டம்
- நரேந்திர மோதியின் 70வது பிறந்த நாள்: உலக தலைவராக உருப்பெற காத்திருக்கும் சவால்கள் என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :