You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சூர்யா: "நீட் எனும் மனுநீதி தேர்வு மாணவர்களின் உயிரை பறிக்கிறது"
”நீட் போன்ற ’மனுநீதி’ தேர்வுகள் மாணவர்களின் வாய்ப்புகளை மட்டுமின்றி உயிர்களையும் பறிக்கிறது என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து நீட் தேர்வுக்கு தனது எதிர்ப்பை தெரிவித்து வரும் நடிகர் சூர்யா, தற்போது தமிழகத்தில் நீட் அச்சத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கொரோனா தொற்று போன்ற உயிர் அச்சம் மிகுந்த பேரிடர் காலத்தில்கூட மாணவர்கள் தேர்வெழுதி தங்கள் தகுதியை நிரூபிக்க நிர்பந்திக்கப்படுவது வேதனை அளிக்கிறது.
அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டிய அரசாங்கம் ஏற்றத்தாழ்வை உருவாக்குகிற கல்வி முறையை சட்டமாக கொண்டு வருகிறது. ஏழை எளிய மாணவர்களின் நிதர்சனம் அறியாதவர்கள் கல்விக் கொள்கைகளை வகுக்கிறார்கள்.
தேர்வு பயத்தில் மாணவர் தற்கொலை என்ற செய்தி அதிகபட்சம் ஊடகங்களில் அன்றைக்கான விவாத பொருளாக மாறுகிறது. இறந்துபோன மாணவர்களின் மரண வாக்குமூலத்தில்கூட எழுத்துப் பிழைகளை கண்டுபிடிக்கும் சாணக்கியர்கள், அனல் பறக்க விவாதிப்பார்கள்.
அநீதியான தேர்வு முறைகளுக்கு தங்கள் பிள்ளைகளை வாரிக்கொடுத்துவிட்டு வாயிலும் வயிற்றிலும் அடித்து கொள்கிற பெற்றோர்களுக்கு இது வாழ்நாள் தண்டையாக மாறுகிறது.
நமது பிள்ளைகளின் தகுதியையும், திறனையும் வெறும் தேர்வுகள் தீர்மானிக்க அனுமதிக்கக்கூடாது.
மகாபாரத காலத்து துரோணர்கள் ஏகலைவன்களிடம் கட்டை விரலை மட்டுமே காணிக்கையாக கேட்டார்கள். நவீனகால துரோணர்கள் முன்னெச்சரிக்கையுடன் ஆறாம் வகுப்பு குழந்தைகூட தேர்வெழுதி தனது தகுதியை நிரூபிக்க வேண்டும் என்று கேட்கிறார்கள். இதையெல்லாம் கடந்து படித்து முன்னேறுகிறவர்களை ’பலியிட ‘ நீட் போன்ற வலிமையான ஆயுதங்களை வைத்திருக்கிறார்கள்.” என சூர்யா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட் இன்று நடைபெற்றது. இந்நிலையில் நீட் எழுத விருந்த தமிழக மாணவர்கள் மூன்று பேர் நேற்று ஒரே நாளில் தற்கொலை செய்து கொண்டனர்.
இது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், நீட் தேர்வுக்கு எதிரான வாதமும் வலுத்தது. பல அரசியல் கட்சி தலைவர்கள் நீட் தேர்வுக்கு எதிராக தங்கள் கருத்துகளை தெரிவித்திருந்தனர்.
நடிகர் சூர்யா புதிய கல்வி கொள்கை குறித்தும் எதிர்ப்பை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
- அமெரிக்காவை உலுக்கும் காட்டுத்தீ: 30க்கு மேற்பட்டோர் உயிரிழப்பு; ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் சேதம்
- சீனா விஷயத்தில் நேரு செய்த அதே தவறை பிரதமர் மோதியும் செய்கிறாரா?
- கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் தங்களை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும்?
- இஸ்ரேல் – பஹ்ரைனுக்கு இடையே உடன்படிக்கை - வரலாற்று முக்கியத்துவம் பெறுவது ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: