You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நீட் தேர்வு: தருமபுரி மாணவர் ஆதித்யா, நாமக்கல் மோதிலால் தற்கொலை
நீட் தேர்வு நாடு முழுவதும் நாளை நடக்க இருக்கும் நிலையில், அச்சம் காரணமாக தமிழகத்தில் இன்று (12.09.20) மட்டும் இரண்டு பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
தருமபுரியை சேர்ந்த 20 வயதான ஆதித்யா, மற்றும் மதுரையை சேர்ந்த ஜோதி துர்கா ஆகியோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்நிலையில் நாளை நீட் தேர்வு எழுத இருந்த மாணவர் மோதிலால் என்பவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் மோதிலால், மூன்றாவது முறையாக நாளை நீட் தேர்வு எழுத இருந்த நிலையில், தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஆனால், இவர் தற்கொலை செய்து கொண்டதற்கு நீட் தேர்வுதான் காரணம் என காவல்துறை தரப்பில் இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை.
தற்கொலை செய்துகொண்ட மோதிலால் இல்லத்தில் திருச்செங்கோடு துணை கண்காணிப்பாளர் அசோக்குமார் மற்றும் ஊரக காவல் நிலைய ஆய்வாளர் ஜெகநாதன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.மாணவனின் உடல் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக எடுத்துச் செல்லப்பட உள்ளது.
முன்னதாக நீட் தேர்வுக்காக தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்த, இலக்கியம்பட்டி பகுதியை சேர்ந்த மணிவண்ணன் மற்றும் சித்ரா தம்பதியினரின் மகனான 20 வயதுடைய ஆதித்யா, இன்று மாலை தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார்.
இந்த வாரத்தில் மட்டும் தமிழகத்தில் நான்கு பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
ஏற்கனவே இதே காரணத்தால் மதுரையை சேர்ந்த ஜோதி ஸ்ரீதுர்கா என்ற மாணவி இன்று காலை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த வாரம் அரியலூர் மாவட்டத்தில் நீட் தேர்வுக்குத் தயாராகிவந்த மாணவர் ஒருவர் கிணற்றில் குதித்துத் தற்கொலைசெய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்தது.
ஜோதி ஸ்ரீதுர்கா மரணம்
மருத்துவ படிப்பிற்கான கட்டாய நுழைவு தேர்வான நீட் தேர்வில் மருத்துவ சீட் கிடைக்காவிட்டால் குடும்பத்தார் ஏமாற்றம் அடைவார்கள் என்ற அச்சத்தால் மதுரையைச் சேர்ந்த ஜோதி துர்கா இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்
அந்த மாணவி சாகும் முன் தனது பெற்றோருக்கு உருக்கமான கடிதம் ஒன்றையும் எழுதியதாக கூறப்படுகிறது.
அந்த கடிதமானது சமூக ஊடகங்களிலும் அதிகமாக பகிரப்பட்டது.
அதில், தன் மீது தனது குடும்பம் அதிக நம்பிக்கை வைத்திருந்ததாகவும், தனக்கு கல்லூரி சீட் கிடைக்கவில்லை என்றால், அவர்கள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணாகிவிடும் என்பதால் தற்கொலை முடிவை எடுத்ததாக அந்த மாணவி எழுதியிருந்தார்.
இறுதியில் "I am sorry. Am tired" என்று கூறி முடித்து இருந்தார்.
அந்த அதிர்ச்சியில் இருந்தே பலர் மீளாத நிலையில், தற்போது ஆதித்யாவின் மரணம் பலருக்கும் துயர செய்தியாக வந்திருக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: