You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழக உள்ளாட்சி தேர்தல் வழக்கு: ’இது வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு’ - ஸ்டாலின்
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியிருப்பதாகவும் அதனை தி.மு.க. வரவேற்பதாகவும் அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
தீர்ப்பு வெளியான பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின், "ஜனநாயகத்தை காக்கக்கூடிய வகையில் இந்தத் தீர்ப்பு அமைந்திருக்கிறது. இதனைத் தி.மு.க. வரவேற்கிறது. உள்ளாட்சித் தேர்தலை நிறுத்துவதற்காக நாங்கள் நீதிமன்றத்தை நாடவில்லை. தொகுதி வரையறை, இட ஒதுக்கீடு சரியாக இல்லை என்பதால்தான் நீதிமன்றத்தை நாடினோம். 2016லிருந்து தி.மு.க. அதனை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
தி.மு.கவின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை புரிந்துகொண்டு நீதிமன்றம் தமிழக அரசையும் தேர்தல் ஆணையத்தையும் கேள்விகேட்டிருக்கிறார்கள். குறிப்பாக, புதிய மாவட்டங்களில் வார்டு மறுவரையறை சரியாக செய்யப்பட்டிருக்கிறதா, புதிய மாவட்டங்களை இப்போது பிரித்தது ஏன் என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது" என்று குறிப்பிட்டார்.
தேர்தலை நிறுத்துவதற்காகத்தான் தி.மு.க. நீதிமன்றத்தை நாடுவதாக ஊடகங்களில் சிலரே குற்றம்சாட்டுவதாகவும் மு.க. ஸ்டாலின் சுட்டிக்காட்டினார். "உள்ளாட்சித் தேர்தலை முறையாக நடத்துங்கள் என்று சொன்னால், தேர்தலை நிறுத்துவதற்காகத்தான் தி.மு.க. நீதிமன்றத்தை நாடுகிறது என சொல்கிறார்கள். இப்படி அரசியல்வாதிகள் சொன்னால்கூட ஏற்கலாம்.
ஆனால், ஊடகத்தில் சிலரும் அதைச் சொல்கிறீர்கள். புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டிருப்பதால், 9 மாவட்டங்களில் வார்டு உறுப்பினர்கள், பஞ்சாயத்து உறுப்பினர்கள் எப்படித் தேர்வுசெய்யப்படுவார்கள் என்று தொடர்ந்து இந்தப் பிரச்சனையை எழுப்பிவருகிறோம். அதுதான் உச்ச நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, தேர்தல் ஆணையம் அதனை ஏற்றுக்கொண்டிருக்கிறது." என்றார் மு.க. ஸ்டாலின்.
இன்று கிடைத்திருப்பது தி.மு.கவுக்கு மிகப் பெரிய வெற்றி என்று குறிப்பிட்ட மு.க. ஸ்டாலின், ஏற்கனவே உள்ள தேர்தல் அறிவிப்பாணை ரத்துசெய்யப்பட்டிருப்பதாகவும் 9 மாவட்டங்களில் வார்டு மறுவரையறை சரியாக செய்யப்பட்ட பின்பே தேர்தலை நடத்த வேண்டுமென தி.மு.க வைத்த கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டிருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டி, மீதமுள்ள 27 மாவட்டங்களிலும் இட ஒதுக்கீடு விதி (6)ஐப் பின்பற்றி தேர்தலை நடத்த வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது என்று குறிப்பிட்டார்.
தமிழக அரசோடு தேர்தல் ஆணையம் கூட்டணி வைத்திருப்பதாகவும் இந்தத் தீர்ப்பை இருவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.
தேர்தலை நடத்துவது மாநில தேர்தல் ஆணையம்தான், அதில் அரசுக்கு எந்தப் பங்கும் இல்லையென முதல்வர் கூறியிருப்பது குறித்து கேட்டபோது, "தேர்தலைத்தான் தேர்தல் ஆணையம் நடத்தும். ஆனால், இட ஒதுக்கீட்டை மாநில அரசுதான் செய்ய வேண்டும். அதை முறையாகச் செய்யவில்லை. அதனால்தான் இவ்வளவு குழப்பமும்" என்றார்.
9 மாவட்டங்களை விட்டுவிட்டுத் தேர்தல் நடத்துவதால் குழப்பம் ஏற்படுமா எனக் கேட்டபோது, "நிச்சயம் ஏற்படும். தேர்தலை நிறுத்த தி.மு.க. முயற்சிக்கிறது என ஒரு தவறான குற்றச்சாட்டை அவர்கள் சொல்லி வருகிறார்கள். அதற்கு நீங்களும் துணை நிற்பது வேதனையாக இருக்கிறது. தேர்தலை நிறுத்துவதற்கான எல்லா பிரச்சனைகளையும் செய்துவிட்டு, யாராவது வழக்குப் போட்டு தேர்தலை நிறுத்த மாட்டார்களா என இருக்கிறார்கள்" என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
பிற செய்திகள்:
- ஹைதராபாத் பாலியல் வல்லுறவு: குற்றம்சாட்டப்பட்ட 4 நபர்கள் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொலை
- சுவரால் இறந்த என் குழந்தைகளின் கண்களை தானம் செய்தது ஏன்? - ஒரு தந்தையின் உருக்கம்
- ஆர்பிஐ-யின் அறிவிப்புகள் நாட்டின் வளர்ச்சிக்கு எப்படி உதவும்?
- பொருளாதாரத்தை மீட்கும் திறன் இந்த அரசிடம் இல்லை: ப.சிதம்பரம் பேட்டி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: