You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழக உள்ளாட்சித் தேர்தல் வழக்கு: "9 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் தேர்தலை நடத்தலாம்"
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
9 மாவட்டங்களில் தொகுதி மறுவரையறை செய்து 4 மாதங்களுக்குள் தேர்தலை அறிவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகியவை இந்த ஒன்பது மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம்.
தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், தலைமை நீதிபதி ஷரத் அரவிந்த் போப்தே, நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதி சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்தத் தீர்ப்பை அளித்தது.
திமுக சார்பில் வழக்கு
தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் டிசம்பர் 27 - டிசம்பர் 30 என இரு கட்டங்களாக நடக்குமென தமிழகத் தேர்தல் ஆணையம் டிசம்பர் 2ஆம் தேதி அறிவித்தது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் டிசம்பர் ஆறாம் தேதி துவங்கவிருக்கிறது.
தமிழ்நாட்டில் ஏற்கனவே தேர்வுசெய்யப்பட்டிருந்த உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் 2016ல் முடிவடைந்தது. அதற்குப் பிறகு தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, முறையாக இட ஒதுக்கீடு செய்யப்படவில்லையென தி.மு.க. வழக்குத் தொடர்ந்தது. சரியான முறையில் இட ஒதுக்கீடு செய்த பிறகு, தேர்தலை அறிவிக்க வேண்டுமென நீதிமன்றம் கூறியிருந்தது.
ஆனால், அதற்குப் பிறகு தேர்தல் நடத்தப்படாத நிலையில், உள்ளாட்சித் தேர்தலை நடத்தக்கோரி வழக்குகள் தொடரப்பட்டன. அந்த வழக்கில் டிசம்பர் 13ஆம் தேதிக்கு முன்பாக தேர்தலை அறிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில்தான் டிசம்பர் 2ஆம் தேதியன்று ஊரகப் பகுதிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடக்குமென தமிழகத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த அறிவிப்பை தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. ஊரகப் பகுதிகளுக்கு மட்டுமல்லாமல், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிப் பகுதிகளுக்கும் சேர்த்து தேர்தலை அறிவிக்க வேண்டுமென கூறினர்.
தி.மு.கவின் சார்பில் இந்த அறிவிப்பை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. தமிழ்நாட்டில் புதிதாக ஐந்து மாவட்டங்கள் உருவாக்கப்பட்டிருப்பதால், 9 மாவட்டங்களின் எல்லைகள் மாறியிருக்கின்றன. அந்த மாவட்டங்களில் உள்ள தொகுதிகளை மறுவரையறை செய்ய வேண்டும். மேலும், ஊரகப் பகுதிகளுக்கு மட்டும் தேர்தலை நடத்தாமல் மாநிலம் முழுவதும் தேர்தலை நடத்த வேண்டும் எனக் கோரப்பட்டது.
இது தொடர்பாக டிசம்பர் 2ஆம் தேதியே உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணைகள் டிசம்பர் ஐந்தாம் தேதி முடிவடைந்த நிலையில், தீர்ப்பு வெள்ளிக்கிழமை காலைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை காலையில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் ஒன்பது மாவட்டங்களைத் தவிர பிற 27 மாவட்டங்களில் உள்ள ஊரகப் பகுதிகளில் தேர்தலை நடத்திக்கொள்ளலாம் என உத்தரவிட்டுள்ளது.
இந்த ஒன்பது மாவட்டங்களிலும் 4 மாதங்களுக்குள் மறுவரையறைப் பணிகளை நிறைவுசெய்து, தேர்தலை நடத்த வேண்டுமெனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதற்கிடையில், செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி, "தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு அதனை எதிர்கொள்ள வேண்டியதுதான் ஜனநாயகக் கடமை. தி.மு.க. தோல்வி பயத்தில் உள்ளது. 2016ல் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, நீதிமன்றத்திற்குச் சென்று, அதை நிறுத்தினார்கள். இப்போதும் அதை முயற்சித்தார்கள். ஆனால், உச்ச நீதிமன்றம் அதற்கு மறுத்துவிட்டது. இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. பெரும் வெற்றிபெறும்" என்று கூறினார்.
தி.மு.க. இதுவரை இந்த விவகாரம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கவில்லை.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருந்ததால், உள்ளாட்சித் தேர்தலுக்காக இன்று துவங்க இருந்த வேட்புமனுத் தாக்கல் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
பிற செய்திகள்:
- ஹைதராபாத் பாலியல் வல்லுறவு: குற்றம்சாட்டப்பட்ட 4 நபர்கள் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொலை
- டிரம்ப் மீதான பதவி நீக்க தீர்மான நடவடிக்கைகள் தொடங்குகின்றன - நான்சி பெலோசி
- உணவுத் தேடி கிராமத்திற்குள் நுழைந்த 56 பனிக்கரடிகள் - பொது நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து
- மேற்கு வங்கத்தில் பூட்டப்பட்ட சட்டமன்ற கதவுகள் - காக்க வைக்கப்பட்ட ஆளுநர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: