You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பருவநிலை மாற்றம்: உருகும் பனி - உணவுத் தேடி கிராமத்திற்குள் வந்த 56 பனிக்கரடிகள்
ரஷ்யாவின் வடக்கு பகுதியில் உள்ள கிராமத்திற்குள் 50க்கும் மேற்பட்ட பனிக்கரடிகள் நுழைந்துள்ளதால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சுகோட்கா பிராந்தியத்தில் உள்ள ரிர்காப்பி கிராமத்தில் அனைத்து பொது நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும் பொது இடங்கள் குடியிருப்பு வாசிகளைக் கரடிகள் தாக்காமல் இருக்க தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.
இதற்குப் பருவநிலை மாற்றம்தான் காரணம் என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். கடற்கரை பகுதியில் குறைந்த பனியே இருப்பதால் அவை கடலை விடுத்து உணவைத் தேடி கிராமத்திற்குள் வருகிறது என்கின்றனர் ஆர்வலர்கள்.
மேலும் சிலர், ரிர்காப்பி கிராமத்திற்கு பனிக்கரடிகள் வருவது தொடர்கதையான ஒன்று எனவே அங்குள்ள மக்கள் நிரந்தரமாக வெளியேற்றப்பட வேண்டும் என்கின்றனர்.
"அந்த கிராமத்துக்குள் சுமார் 56 கரடிகள் நுழைந்துள்ளன. பெரிய மற்றும் சிறிய கரடிகளும், பெண் கரடிகளும் அதன் குட்டிகளும் அதில் அடங்கும்," என ரிர்காப்பியில் கரடிகள் பாதுகாப்பு திட்டத்தின் தலைவராக இருக்கும் டட்யானா மினென்கோ தெரிவித்துள்ளார்.
மேலும் பெரும்பாலான கரடிகள் மிகவும் ஒல்லியாகக் காணப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
ரிர்காப்பி என்னும் இடத்திலிருந்து சுமார் 2.2கிமீ தூரத்தில் உள்ள கேப் என்ற இடத்தில் கரடிகள் வசிக்கின்றன ஆனால் அந்த இடம் வழக்கத்தைக் காட்டிலும் அதிக வெப்பமாக இருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
சர்ச்சையை உருவாக்கிய கன்சர்வேட்டிவ் கட்சியின் தேர்தல் அறிக்கை
பிரிட்டனின் பொதுத் தேர்தலுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், ஆளும் கன்சவேட்டிவ் கட்சி மற்றும் பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி ஆகியன வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகளில் இலங்கை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள விடயங்கள் தற்போது சர்ச்சையை தோற்றுவித்துள்ளன.
'பிரிட்டனின் நாடாளுமன்றத் தேர்தல் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்காக கன்சர்வேட்டிவ் கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை நவம்பர் மாதம் 25ஆம் தேதி வெளியிட்டது. இந்த தேர்தல் விஞ்ஞாபனத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தேர்தல் விஞ்ஞாபனத்தின் 53ஆவது பக்கத்தில் இலங்கையில் காணப்படுகின்ற பிரச்சினைக்கு தீர்வாக, இலங்கைக்குள் இரண்டு நாடுகள் உருவாக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது".
மேலும் படிக்க: இலங்கை குறித்து கூறியது என்ன? சர்ச்சையை உருவாக்கிய கன்சர்வேட்டிவ் கட்சியின் தேர்தல் அறிக்கை
இந்திய பொருளாதாரம் குறித்து விமர்சித்த பா.சிதம்பரம்
பொருளாதாரம் அதீத சரிவை கண்டு கொண்டிருக்கிறது ஆனால் இந்த அரசு அதை சரி செய்யும் திறன் பெற்றதாக இல்லை என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் 106 நாட்கள் சிறையில் இருந்துவிட்டு, பிணையில் வெளிவந்த ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து இவ்வாறு தெரிவித்தார்.
இந்திய பிரதமர் இந்திய பொருளாதாரம் குறித்து இயல்புக்கு மாறாக அமைதி காத்து வருகிறார். அவர் இம்மாதிரியான நெருக்கடி சூழ்நிலையில் தனது அமைச்சர்களிடம் அனைத்தையும் ஒப்படைத்துவிட்டு அமைதியாக இருக்கிறார். அதன் விளைவு பொருளாதார வல்லுநர்கள் சொல்லுவதுபோல அரசாங்கம் பொருளாதாரத்தின் திறமையற்ற நிர்வாகியாக உள்ளது.
அமித்ஷா முன்னிலையில் பாஜக ஆட்சியை விமர்சித்த தொழிலதிபர்
"தொழிலதிபர்கள் உங்களுக்கு அஞ்சுகின்றனர். ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சி இருந்தபோது அவர்களை விமர்சிக்க முடிந்தது. ஆனால் இப்போது உங்களை பொது வெளியில் விமர்சித்தால் நீங்கள் அதை விரும்புவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை" என்று இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இருந்த கூட்டத்திலேயே விமர்சித்து சமீபத்தில் பெருங்கவனத்தை ஈர்த்தார் பஜாஜ் குழுமத்தின் தலைவர் ராகுல் பஜாஜ்.
யார் இந்த ராகுல் பஜாஜ்?
ராகுல் பஜாஜ் 1938ம் ஆணடு ஜுன் மாதம் இந்தியாவின் முதலாவது பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு நெருக்கமான பிரபல தொழிலதிபர் குடும்பத்தில் பிறந்தார். ராகுல் பஜாஜின் தாத்தா ஜமனலால் பஜாஜ் 1920ல் 20 நிறுவனங்களைக் கொண்ட பஜாஜ் குழுமத்தை நிறுவினார்.
ஜமனலால் தன்னுடைய தொழிலை வர்தாவிலிருந்து தொடங்கி பிறகு உலகம் முழுதும் விரிவுபடுத்தினார். பின்னர் அவர் மகாத்மா காந்தியை தொடர்பு கொண்டார். அவருடைய ஆசிரமத்துக்கு தன்னுடைய நிலத்தை தானமாக கொடுத்தார்.
பஜாஜ் குடும்பத்திற்கு நெருக்கமானோர் ஜமனலால் பஜாஜ் காந்தியின் ஐந்தாம் மகன் என்று கூறுவர். அதனால்தான் நேருவும் அவரை மிகவும் மதித்தார்.
2014ல் பிரதமர் மோதி பதவியேற்றபோது ராகுல் பஜாஜ் அவரிடம் தங்களுக்கு நிறைய நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பு இருக்கிறது என கூறினார். ஆனால் இந்த ஐந்தாண்டுகளில் அவரிடம் நிறைய மாற்றம் தெரிகிறது.
மேட்டுப்பாளையம் விபத்து; இறந்தும் உலகை பார்க்கும் குழந்தைகள்
மேட்டுப்பாளையம் நடூர் பகுதியிலுள்ள ஆதிதிராவிடர் காலனியின் அருகே விதிமுறைகள் மீறி கட்டப்பட்டிருந்த கருங்கல் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில் 17 பேர் உயிரிழந்தனர். சுவர் இடிந்து விழுந்த விபத்தில் குடும்ப உறுப்பினர்களை இழந்த உறவினர்கள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்த மீளவில்லை.
''குழந்தைகளின் கண்கள் நல்ல நிலையில் இருப்பதால், யாருக்காவது தானம் செய்து உதவுங்கள் என மருத்துவ ஆலோசகர்களும், சொந்தங்களும் கூறினர். உயிரிழந்த பின்னர் என் பிள்ளைகள் மண்ணிலோ நெருப்பிலோ சென்றுவிடப்போகின்றன. எனவே, அவர்களின் கண்கள் யாருக்காவது உதவட்டும் என்ற எண்ணத்தில் கண்களை தானம் செய்தேன்'' என்கிறார் குழந்தைகளின் தந்தை செல்வராஜ்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்