"தமிழர்களுடன் பொங்கல் சாப்பிட்ட சிறிசேன, தமிழர்களுக்கு எதிராகவே மாறினார்" - அருட்தந்தை சக்திவேல்

சிறிசேன

பட மூலாதாரம், Getty Images

இலங்கையில் 2005ஆம் ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ஸ்வீடன் நாட்டை ச் சேர்ந்த பெண் ஒருவரின் கொலை வழக்கின் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட பின்னணியில், அவருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கி விடுவித்தது, தமிழர்கள் மத்தியில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் இந்த சமயத்தில் தமிழர்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற தவறியுள்ளதாக தமிழர்கள் குற்றஞ்சுமத்தி வருகின்றனர்.

இலங்கையில் இடம்பெற்ற 30 வருட உள்நாட்டு போரின் போது கைது செய்யப்பட்டு பல தசாப்தங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின்போது தமிழர்களுக்கு உறுதிமொழி வழங்கியிருந்தார்.

எனினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலம் இன்னும் ஒரு வாரத்தில் நிறைவடையவுள்ள பின்னணியில், சுவீடன் நாட்டு பெண்ணை கொலை செய்த வழக்கின் பிரதான குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவருக்கு கடந்த சனிக்கிழமை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்திருந்தார்.

தமிழர்களின் பெரும்பான்மை வாக்குகளினால் வெற்றிபெற்று ஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்த மைத்திரிபால சிறிசேன, இறுதித் தருணத்திலாவது தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வார் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்த தங்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதாக தமிழர்கள் கூறுகின்றனர்.

Presentational grey line
Presentational grey line

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதில்

ஜனாதிபதியால் கொலை குற்றவாளியொருவரை விடுதலை செய்ய முடியுமாயின், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பல வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை ஏன் விடுதலை செய்ய முடியாது போனது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், புளோட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் இந்த கேள்வியை எழுப்பினார்.

கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிக்கு எந்தவித காரணங்களும் இன்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Presentational grey line

தமிழர் கனவில்கூட இலங்கை அதிபராக முடியாது - தமிழ் அதிபர் வேட்பாளர் Sivajilingam Interview

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

Presentational grey line

வழக்குகள் எதுவும் தொடுக்கப்படாது, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழர்கள் பலர் இன்றும் சிறைகளில் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறு எந்தவித குற்றச்சாட்டுக்களுமின்றி சிறைவாசம் அனுபவிக்கும் தமிழர்கள் பலர் சிறைச்சாலைகளில் இருக்கின்ற தருணத்தில், கொலை குற்றவாளி என அடையாளம் காணப்பட்ட ஒருவரை விடுதலை செய்தது ஏன் என்ற கேள்வி பலர் மத்தியில் எழுந்துள்ளதாகவும் தர்மலிங்கம் சித்தார்த்தன் கூறுகின்றார்.

இவோன் ஜோன்சனின் கொலையுடன் தொடர்புடைய குற்றவாளி விடுதலை செய்யப்பட்டமை மற்றும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படாமை ஆகிய இரண்டு விடயங்களையும் தாம் வன்மையாக கண்டிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் குறிப்பிடுகின்றார்.

ஜனாதிபதியொரு தேச, சமூக மற்றும் நாகரீக துரோகி - அருட்தந்தை சக்திவேல் தெரிவிப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேச, சமூக மற்றும் நாகரீக துரோகியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளார் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கம் தெரிவிக்கின்றது.

இவோன் ஜோன்சனின் கொலையுடன் தொடர்புடைய குற்றவாளிக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டமை தொடர்பில், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல் கருத்து வெளியிடும் போதே இதனைக் குறிப்பிட்டார்.

சக்திவேல்
படக்குறிப்பு, சக்திவேல்

தமிழர்களுக்கு எதிராக செயற்பட்ட பௌத்த பிக்குவான கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு நீதிமன்றம் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த பின்னணியில், அவரை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த காலங்களில் நடவடிக்கை எடுத்திருந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதேபோன்று சமூக விரோதமாகவும், நாகரீகமற்ற முறையில் நடந்துக் கொண்டு, யுவதியொருவரை கொலை செய்த குற்றவாளிக்கு இன்று பொதுமன்னிப்பு வழங்கியுள்ளமையானது பாரதூரமான விடயம் என அவர் கூறுகின்றார்.

மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த போது, அவருடன் இரவு வேளையில் அப்பம் சாப்பிட்டு, அடுத்த நாள் எதிர் தரப்பில் அமர்ந்ததை போன்று, 2015ஆம் ஆண்டு தமிழர்களுடன் அமர்ந்து பொங்கல் உட்கொண்ட மைத்திரிபால சிறிசேன தமிழர்களுக்கு எதிராக திரும்பியிருந்ததாகவும் அருட்தந்தை சக்திவேல் கூறுகின்றார்.

ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தமிழ் மக்களுக்கு வழங்கிய எந்தவொரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், சமூக விரோதியொருவரை பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யும் அளவிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலில் கீழ் இறங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

நல்லாட்சி என்ற போர்வையில் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி, தனது ஆட்சியின் இறுதித் தருணத்தில் அதனை முழுமையாக இல்லாதொழித்து விட்டதாகவும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவிக்கின்றார்.

ஜனாதிபதி இறுதித் தருணத்தில் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்க வேண்டும்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது ஆட்சியின் இறுதித் தருணத்தில் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் அமைப்பின் பணிப்பாளர் நாயகமும், பௌத்த பிக்குவுமான மோதர சந்தே சுமன தேரர் தெரிவிக்கின்றார்.

மோதர சந்தே சுமன தேரர்
படக்குறிப்பு, மோதர சந்தே சுமன தேரர்

பிபிசி தமிழுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஒருவருக்கு ஒரு விதமாகவும், மற்றொருவருக்கு வேறொரு விதமாகவும் ஜனாதிபதி பாகுபாடு காட்டியிருக்கக்கூடாது என அவர் கூறுகின்றார்.

பல வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு இன்று வரை எந்தவொரு மன்னிப்பும் வழங்கப்படவில்லை என அவர் கவலை வெளியிடுகின்றார்.

ஜனாதிபதித் தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ள பின்னணியில் அவசரமாக இந்த குற்றவாளிக்கு பொதுமன்னிப்பு வழங்கியதன் ஊடாக ஜனாதிபதி எதனை இலக்காகக் கொண்டார் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இந்த நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆட்சிக்கு வந்தால் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்வதாக உறுதி வழங்கியுள்ள பின்னணியில், அதற்கான ஆரம்பத்தை ஏற்படுத்தியதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூற முயற்சிப்பார் என மோதர சந்தே சுமன தேரர் தெரிவிக்கின்றார்.

இதன்படி, ஜனாதிபதி என்ற விதத்தில் சிறையிலுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய இறுதித் தருணத்திலேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் அமைப்பின் பணிப்பாளர் நாயகமும், பௌத்த பிக்குவுமான மோதர சந்தே சுமன தேரர் கோரிக்கை விடுக்கின்றார்.

இந்நிலையில், இவோன் ஜோன்சனின் கொலையுடன் தொடர்புடைய குற்றவாளியை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்தமைக்கான காரணங்களை தெளிவூட்டி ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட நபரை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறு சமயத் தலைவர்கள், முன்னாள் நீதியரசர்கள், சட்டத்தரணிகள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் இளைஞர் அமைப்புக்கள் உள்ளிட்ட தரப்பினர் விடுத்த கோரிக்கைக்கு அமையவே விடுதலை செய்யப்பட்டதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் தண்டனை பெற்ற நபர், சிறைச்சாலையில் நன்னடத்தையுடன், தனது பட்டப்படிப்பினை நிறைவு செய்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த இளைஞன் சிறந்த கல்வியாளன் என தென்பட்டமையினால், இது தொடர்பில் ஆராய்ந்து ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.

குறித்த நபர் சிறந்த பிரஜையாகவும், புத்திஜீவியாகவும் எதிர்காலத்தில் செயற்படுவார் என வழங்கப்பட்ட உறுதிமொழியை அடுத்தே பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறுகின்றது.

உலகின் ஏனைய நாடுகளிலும் சிறைக் கைதிகள் தொடர்பில் மனிதாபிமான ரீதியில் இவ்வாறான தீர்மானங்கள் எட்டப்படும் என்ற விடயம் பதிவாகியுள்ள பின்னணியில், ஜுட் ஷரமந்த ஜெயமஹா தொடர்பில் ஆராய்ந்து ஜனாதிபதி பொதுமன்னிப்பை வழங்க தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :