மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறது சிவசேனை; அவகாசம் வழங்க மறுத்த ஆளுநர்

பட மூலாதாரம், Getty Images
மகாராஷ்டிராவில் பா.ஜ.க ஆட்சி அமைக்க முடியாது என்று தெரிவித்துவிட்டதை தொடர்ந்து, அம்மாநிலத்தில் சிவசேனை அரசாங்கம் அமையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
"காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இரண்டாவது பெரிய கட்சி என்ற அடிப்படையில், எங்களுக்கு ஆட்சி அமைக்கக் கோருவதற்கு உரிமை உள்ளது. ஆட்சி அமைக்க விருப்பம் தெரிவித்துள்ளோம். குறைந்தது இரண்டு நாட்கள் அவகாசம் கேட்டோம். ஆனால், எங்களுக்கு கால அவகாசம் தரப்படவில்லை. ஆட்சி அமைக்க எங்களால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்வோம்" என்று ஆதித்ய தாக்கரே தெரிவித்துள்ளார்.
உத்தவ் தாக்கரேவின் மகனும், சட்டமன்ற உறுபிப்பினருமான ஆதித்ய தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே மற்றும் பிற சிவசேனை தலைவர்கள், ஆளுநரை நேரில் சென்று சந்தித்தனர்.

பட மூலாதாரம், ANI
சிவசேனை ஆட்சி அமைக்க, இன்று மாலை 7:30 மணி வரை கால அவகாசம் வழங்கியிருந்தார் மகாராஷ்டிர ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி.
இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, மற்றும் சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே இருவரும் தொலைபேசி உரையாடல் நடத்தியதாக செய்திகள் வெளியாகின.
அதனைத்தொடர்ந்து, காங்கிரஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தேசியவாத காங்கிரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக கூறப்பட்டிருக்கிறது.
"காங்கிரஸ் காரிய கமிட்டி இன்று காலை சந்தித்து மகாராஷ்டிரா அரசியல் சூழல் தொடர்பாக பேசியது. மேலும், அம்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்களுடனும் ஆலோசிக்கப்பட்டது. காங்கிரஸ் தலைவர், தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஷரத் பவாருடன் பேசினார். மேலும், இந்த பேச்சுவார்த்தை தொடரும் " என்று அனைத்து இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
பாஜக-வுக்கு பின்னடைவு
மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு பாஜக-வுக்கும் அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனைக்கும் இடையே நிலவி வந்த இழுபறியில் பாஜக-வுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
பாஜக தம்மால் ஆட்சி அமைக்க முடியாது என்று அறிவித்துவிட்ட நிலையில், சிவசேனையை ஆட்சியமைக்க வருமாறு அழைப்பு விடுத்திருந்தார் மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகியவற்றின் ஆதரவுடன் சிவசேனை ஆட்சியமைக்கும் என்று கருதப்பட்டது .
மகாராஷ்டிரத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி 2 வாரங்களுக்கு மேல் ஆகிறது. இந்த மாநிலத்தில், பாஜக-சிவசேனைக் கூட்டணி வெற்றி பெற்றிருந்தாலும், எந்த ஒரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை இல்லை. எனவே, எந்தக் கட்சி முதல்வர் பதவியை எடுத்துக் கொள்வது என்பது தொடர்பாக பாஜக-வுக்கும், சிவசேனைக்கும் இடையே போட்டி தொடங்கியது.

பட மூலாதாரம், Getty Images
இரண்டு கட்சியுமே விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லாத நிலையில், தனிப்பெரும் கட்சியான பாஜகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். ஆனால், சிவசேனை தன்னுடன் இல்லாத நிலையில், தங்களால் ஆட்சியமைக்க முடியாது என்று பாஜக தெரிவித்துவிட்டது.
விலகும் சிவசேனை மத்திய அமைச்சர்- முடிவுக்கு வருகிறதா பாஜக உறவு?
இதனிடையே மத்திய பாஜக தலைமையிலான அரசில் கனரகத் தொழில் துறை அமைச்சராகப் பதவி வகிக்கும், மக்களவை சிவசேனைக் குழுத் தலைவரான அரவிந்த் சாவந்த் அமைச்சர் பதவியில் இருந்து விலகுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
இது பாஜக- சிவசேனை உறவு முடிவுக்கு வந்ததாகக் காட்டுகிறது.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தலைமையில் அந்தக் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. அது போல காங்கிரஸ் கட்சியும் முக்கிய கூட்டம் ஒன்றை டெல்லியில் நடத்துகிறது. மல்லிகார்ஜுன கார்கே, அகமது பட்டேல் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகியவற்றோடு எங்களுக்கு கருத்து மாறுபாடு உண்டு. ஆனால், அவை துரோகிகள் அல்ல என்று தெரிவித்துள்ளார் சிவசேனைத் தலைவர் சஞ்சய் ராவத். காஷ்மீரில் மெகபூபா முஃப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் பாஜக கூட்டணி அமைத்திருப்பதை சுட்டிக்காட்டிய அவர், தாங்கள் காங்கிரசுடன் குறைந்தபட்ச பொதுத் திட்டம் ஒன்றின் கீழ் கைகோர்க்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதனிடையே சிவசேனையில் யார் முதல்வராவார்கள் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. மறைந்த பால் தாக்கரேவின் மகன் உத்தவ் தாக்கரே, அவரது மகன் ஆதித்ய தாக்கரே, சுபாஷ் தேசாய், தற்போது சிவசேனை சட்டமன்றக் குழுத் தலைவராக உள்ள ஏக்நாத் ஷிண்டே ஆகிய நால்வரில் ஒருவர் முதல்வராக வாய்ப்புள்ளது.
பல்வேறு கட்சிகளும் தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களை வெவ்வேறு ஓட்டல்களில் தங்கவைத்துள்ளன. ஆட்சியமைப்பதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முக்கியப் பங்கு வகிப்பார் என்று தெரிகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












