You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் திரண்ட தமிழர்கள் - இலங்கை போர் முடிந்த பத்தாம் ஆண்டு அஞ்சலி நிகழ்வு
இலங்கை போர் முடிந்த பத்தாம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
இன்று காலை 10.30 மணிக்கு நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டு முதலில் உயிரிழந்த அனைத்து உறவுகளின் ஆத்மா சாந்தியடைய இரண்டு நிமிட அக வணக்கம் செலுத்தப்பட்டது.
பின்னர் 10.32 மணிக்கு இறுதிப் போரின்போது முள்ளிவாய்க்காலில் தாயை பறிகொடுத்த நிலையில் தனது ஒரு கையினையும் இழந்த சிறுமி ஒருவர் பிரதான ஈகை சுடரினை ஏற்றி நினைவேந்தலை ஆரம்பித்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இருந்த சுடர்கள் ஒவ்வொன்றின் முன் நின்றவர்கள் உறவுகளை நினைந்து சுடர்களை ஏற்றி அஞ்சலித்தனர். இந்த நிகழ்வில் மதத் தலைவர்கள்,அரசியல் பிரமுகர்கள், சிவில் சமூக ஆர்வலர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த நிகழ்வில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு (வடக்கு-கிழக்கு) குழுவினரால் மே 18 பிரகடனம் வெளியிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் மலர் அஞ்சலி செலுத்தியதோடு நிகழ்வுகள் நிறைவு பெற்றன.
மே 18 பிரகடனம்
"முள்ளிவாய்க்கால் ஆயுத மௌனிப்பின் பின் தமிழர் போராட்ட வடிவங்கள் வெவ்வேறு வழிகளில் முன்னெடுக்கப்பட்டன. பின் முள்ளிவாய்க்கால் தசாப்தத்தில் வரலாற்றில் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான நீதி வேண்டிய கோரிக்கை வலுப்பெற்றது. தமிழர்கள் ஓர் இன அடையாளத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக கொல்லப்பட்டார்கள், சித்திரவதை செய்யப்பட்டார்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டார்கள், வன்புணரப்பட்டார்கள். பூர்வீக வாழ்விடங்களிலிருந்து விரட்டி அடிக்கப்பட்டார்கள்," என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு (வடக்கு-கிழக்கு) வெளியிட்டுள்ள மே 18 பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளது.
"தமிழினத்தின் மீது நடந்தேறும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை ஐ.நாவும் சர்வதேச சமூகமும் வெறுமனே அவதானித்துக் கொண்டிருப்பது கவலைக்குரியதானது. பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான நீதிவேண்டி தமிழர்கள் ஒரு தசாப்த காலமாக ஐ.நாவின், சர்வதேச சமூகத்தின் உதவியை நாடியுள்ளார்கள். நடந்தேறிய அநீதிகளையும், உரிமை மீறல்களையும் விசாரிப்பதற்கான சர்வதேச நீதி விசாரணை இன்னும் ஆரம்பித்தாகத் தெரியவில்லை," என்கிறது அந்தப் பிரகடனம்.
பின் முள்ளிவாய்க்கால் வரலாற்றுத் தசாப்தத்தில் ஒன்று கூடியுள்ள தமிழ் மக்களாகிய நாங்கள் நினைவுகூரலை அணி திரட்டலாக மாற்ற வேண்டிய வரலாற்றுக் கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளோம். அன்னிய மீட்பர்களை விடுத்து மக்கள் சக்தியில் நம்பிக்கை வைத்து, நினைவு கூரலை சமூக இயக்கமாக மாற்றி சபதம் செய்வோம். எங்கள் உறவுகளின் கல்லறைகளின் மீது சத்தியம் செய்வோம் என மே 18 பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளது.
மே 18 இன்றைய நாளை இன அழிப்புக்கு எதிரான தமிழ் தேச எழுச்சி நாளாகவும் 2019ம் ஆண்டை இன அழிப்புக்கு எதிரானதும் அரசியல் நீதிக்கான சர்வதேச வலுச்சேர்க்கும் ஆண்டாகவும் பிரகடனம் செய்கிறோம் என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு (வடக்கு-கிழக்கு) அறிவித்துள்ளது.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்