You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கையில் தேசிய தவ்ஹீத் ஜமாத் உள்ளிட்ட இரு அமைப்புகளுக்கு தடை
இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தின் பின்னர் தேசிய தவ்ஹீத் ஜமாத், ஜமியத்தே மில்லாது இப்ராஹிம் ஆகிய இரு அமைப்புகளுக்கும் அவசரகால சட்டத்தின் கீழ் ஜனாதிபதியால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அந்த அமைப்புகள் செயல்படத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றின் சொத்துகளும் முடக்கப்படுவதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையில் செயல்படும் பிற தீவிரவாத அமைப்புகளுக்கும் தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்குப் பின் கைதான அரசியல்வாதிகள்
தாக்குதலுக்குப் பின்னர் நடைபெற்ற விசாரணைகளின் அடிப்படையில், இதுவரை இரண்டு அரசியல்வாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் இந்த அரசியல்வாதிகள் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
இதன்படி, கொழும்பு - கொம்பனிவீதி பகுதியிலுள்ள பள்ளிவாசல் ஒன்றிலிருந்து 46 வாள்கள் நேற்றைய தினம் கைப்பற்றப்பட்டிருந்தன.
பாதுகாப்பு பிரிவினரால் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போதே, இந்த வாள்கள் கைப்பற்றப்பட்டதாக பாதுகாப்பு பிரிவினர் குறிப்பிட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பு மாநகர சபை உறுப்பினர் நூர்தீன் மொஹமட் தாஜுடீன் கைது செய்யப்பட்டார்.
கொம்பனி வீதி பள்ளிவாசலில் இருந்து கைப்பற்றப்பட்ட வாள்களை, குறித்த நகர சபை உறுப்பினரே அங்கு கொண்டு வந்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
இந்த வாள்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை, ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, நீர்கொழும்பு பிரதி மேயர் மொஹமட் அன்சார், இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு பிரதி மேயர் மொஹமட் அன்சாரிடமிருந்து, கூரிய ஆயுதங்கள், கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த பின்னணியிலேயே நீர்கொழும்பு பிரதி மேயர் மொஹமட் அன்சார் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிடுகின்றது. இதேவேளை, ஹட்டன் - மஸ்கெலிய பகுதியிலிருந்து 49 வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
களஞ்சிய சாலையொன்றிற்குள் இருந்து இந்த வாள்கள் கைப்பற்றப்பட்டதாக பாதுகாப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை, இலங்கைக்கு தாக்குதல் நடாத்தும் நான்கு திட்டங்களில், வாள்களை கொண்டு தாக்குதல் நடாத்தும் திட்டமும் உள்ளடக்கப்பட்டிருப்பதாக உளவுத்துறையினால் வெளியிட்டப்பட்ட அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
பிற செய்திகள்:
- இலங்கை கல்முனை குண்டுவெடிப்பு: 16 பேர் உயிரிழப்பு - 6 பேர் தற்கொலை குண்டுதாரிகள்
- "தாக்குதலின் வலி எப்படி இருக்கும்?" - குமுறும் புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்கள்
- "எனக்கு குஜராத்திலேயே நீதி கிடைத்திருந்தால் மகிழ்ந்திருப்பேன்" - பில்கிஸ் பானு
- ராமநாதபுரத்தில் பயங்கரவாதிகள் நுழைந்ததாக போலி தொலைப்பேசி அழைப்பு விடுத்தவர் கைது
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்