You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை கல்முனை குண்டுவெடிப்பு: 16 பேர் உயிரிழப்பு - இதில் 6 பேர் தற்கொலை குண்டுதாரிகள்
இலங்கை சாய்ந்தமருதுவில் நேற்று இரவு நிகழ்ந்த வெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 15 சடலங்களை கண்டெடுத்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் ஆறு பேர் தற்கொலை குண்டுதாரிகள் என போலீஸ் உடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த ஆறு பேரில், மூன்று பேர் தங்களது குடும்பத்துடன் இறந்துள்ளனர்.
மேலும் ஒரு 21 மதிக்கத்தக்க பெண் ஒருவர், அந்த வழியாக ஆட்டோவில் சென்று கொண்டிருந்தபோது துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்தில் கல்முனை போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட சாய்ந்தமருது பகுதியில் பாதுகாப்பு பிரிவின் மீது சில தரப்பினரால் நேற்று இரவு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. பாதுகாப்பு பிரிவினரும் பதில் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது.
நேற்று, சந்தேக நபர் ஒருவரை சோதனைக்கு உட்படுத்த முயற்சித்த சந்தர்ப்பத்தில், அவர் குண்டொன்றை வெடிக்கச் செய்து கொண்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டது.
அத்துடன், இந்த சந்தர்ப்பத்தில் மூன்று வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியதாகவும் பாதுகாப்பு பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கல்முனை, சாய்ந்தமருது மற்றும் சவலக்கடை பகுதிகளில் போலீஸ் ஊரடங்கு நிலைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேர சோதனைகளில் மேலும் 20 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாய்ந்தமருது மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் தற்போது பாரிய சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர்.
இந்நிலையில், வெடி சம்பவம் மற்றும் துப்பாக்கிச்சூடு நிகழ்ந்த இடத்துக்கு அருகே வசித்து வந்த மக்கள், தங்களது வீடுகளை விட்டு வெளியேறி அருகில் உள்ள பள்ளி ஒன்றில் தஞ்சம் அடைந்துள்ளனர். தற்போது அப்பள்ளியில் நூற்றுக்கணக்கான மக்கள் கூடியுள்ளனர்.
சாய்ந்தமருது பிரதேசத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அந்த மருத்துவமனை தரப்பில் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஞாயிறு பிரார்த்தனைகள் ரத்து
இலங்கை முழுவதும் ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறும் பிரார்த்தனைகள், மறு உத்தரவு வரும்வரை ரத்து செய்யப்படுவதாக கத்தோலிக்க திருச்சபை அறிவித்துள்ளது.
கொழும்புவின் பேராயர் மால்கோம் ரஞ்சித் கூறுகையில், மேலும் தாக்குதல் நடைபெறலாம் என்று எச்சரிக்கும் சில கசியவிடப்பட்ட ஆவணங்களை பார்த்ததாக தெரிவித்தார்.
தாக்குதல்கள் குறித்து முன்னரே எச்சரிக்காத அரசாங்கம், தங்களுக்கு துரோகம் இழைத்துவிட்டதாக நினைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் நேற்று நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது, பெருந்தொகையான ஆயுதங்கள், வெடிப் பொருட்களை தயாரிக்கும் வேதிப்பொருட்கள், வயர்கள், சுலோகங்களுடனான கொடிகளும் மீட்கப்பட்டுள்ளன.
சம்மாந்துறையிலுள்ள செந்நெல் கிராமம் எனும் பகுதிலுள்ள வீடொன்றிலிருந்தே, இந்தப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக சம்மாந்துறை போலீஸார் தெரிவித்தனர்.
சோதனை நடவடிக்கைகளின்போது ஐஎஸ் சின்னத்துடனான கறுப்பு திரை மற்றும் கறுப்பு உடை உள்ளிட்ட பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவர், வீட்டை வாடகைக்குப் பெற்றிருந்ததாகவும் போலீஸார் கூறினர். ஐ.எஸ் அமைப்பினரின் கொடியும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளது.
கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற தற்கொலைத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள சஹ்ரான் என்பவர் காத்தான்குடியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்