நரேந்திர மோதியைப் பிரதமர் பதவியில் இருந்து இறக்குவாரா ராகுல் காந்தி?

இந்தியாவின் பிரதான எதிர்க் கட்சியின் தலைவரான ராகுல் காந்தியின் நிலைமை கிட்டத்தட்ட அவ்வளவுதான் என்று சென்ற தேர்தலின் தோல்வியின்போது பேசப்பட்டது.

ஆனால், தடுமாறும் காங்கிரஸ் கட்சிக்குப் புத்துயிர் ஊட்டியதோடல்லாமல் அவர் தனது தெளிவான எதிர்ப் பிரசாரங்களின்மூலம் ஒரு செயல்திட்டத்தையும் முன்வைத்திருக்கிறார்.

பிபிசியின் கீதா பாண்டே அவரது தொகுதிக்கு நேரில் சென்று அவரால் பிரதமரை வீழ்த்த முடியுமா என்று ஆராய்கிறார்.

சென்ற வாரம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய ராகுல் காந்தி வந்தபோது அமேதியின் முக்கிய சாலைகளில் எல்லாம் ஆதரவாளர்கள் நிரம்பியிருந்தனர்.

திறந்த ஒரு வாகனத்தில் தனது சகோதரி பிரியங்காவுடன் வந்த ராகுல் காந்தி புன்னகையோடு மக்களுக்குக் கைகாட்டியபடியே ஊர்வலம் சென்றார்.

மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்துக்குப் போகும் 3 கி.மீ நீளமுள்ள பாதை முழுவதும் அவரது கட்சித் தொண்டர்கள் அவரை வாழ்த்தியபடியே இருந்தார்கள்.

கொடிகளை அசைத்தும், புகைப்படம் இருந்த பதாகைகளைத் தாங்கியபடியும் இருந்த பல ஊர் மக்கள் ரோஜாப் பூக்களைத் தூவி வரவேற்றார்கள்.

குதிரை வேடமணிந்த ஒருவரின் நடனம், பேண்ட் வாத்தியக்காரர்களின் இசை, கூடவே ஓடிவந்த ஆதரவாளர்களின் வெற்றி முழக்கம் ஆகியவற்றோடு அவருக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது.

தனது 12 வயது மகனோடு கிட்டத்தட்ட 125 கிலோமீட்டர் பயணித்து, ராகுல் காந்தியை காணவந்த முஸ்தாக்விம் அகமது "நரேந்திர மோதியின் நாட்கள் எண்ணப்படுகின்றன," என்று தெரிவித்தார்.

அமேதியில் வசிப்பவரான அனோகெலால் திவாரி, "பொறுத்திருந்து பாருங்கள். மே 23 அன்று வாக்குகள் எண்ணப்படும்போது நரேந்திர மோதிஜி இந்தியாவின் முன்னாள் பிரதமராக அறியப்படுவார். காங்கிரஸ் அடுத்த ஆட்சியை அமைக்கும். ராகுல் அடுத்த பிரதமராவார்," என்றார்.

அமேதியில் இருக்கும் ராகுல் ஆதரவாளர்களின் நீண்ட நாள் கனவு இது. இன்னும் சொல்லப்போனால் அவர் 15 வருடங்களுக்கு முன்பு அரசியலுக்கு வந்ததிலிருந்து அவர்களின் கனவு இதுதான்.

48 வயதாகும் ராகுல் காந்தி மேற்கு உத்தரப்பிரதேசத்தின் இந்தத் தொகுதியிலிருந்து மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கபட்டுள்ளார். தற்போது நான்காவது முறையாகப் போட்டியிடுகிறார்.

கேரள மாநிலத்தில் இருக்கும் வயநாடு மக்களவைத் தொகுதியிலும் அவர் போட்டியிடுகிறார். இதை சுட்டிக்காட்டும் பாஜக, 2014 இவருக்குக் கடும் நெருக்கடியைத் தந்த தங்களது வேட்பாளர் ஸ்ம்ரிதி இரானியிடம் தோற்றுவிடுவோம் என்ற பயத்தினாலேயே இவர் இப்படி செய்கிறார் என்று குற்றம் சாட்டியிருக்கிறது.

காங்கிரஸ் தரப்போ, தென்னிந்தியாவில் பரவலாகக் கால் பதிக்கவே இப்படி செய்திருக்கிறோம் என்று தெரிவித்துள்ளது.

2004, 2009 மற்றும் 2014 நான் இவரது பிரசாரத்தைப் பின் தொடர்ந்தோம். ஒவ்வொரு முறையும் அவரது ஆதரவாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினரை அல்ல, ஒரு பிரதமரையே தேர்ந்தெடுக்கிறோம் என்றே தெரிவித்தனர்.

இதே மனநிலை இப்போது வயநாட்டிலும் எதிரொலிப்பதாக பிபிசி இந்திக்காக வயநாட்டில் உள்ள செய்தித் தொடர்பாளர் இம்ரான் குரேஷி தெரிவிக்கிறார்.

இதற்கு ஒரு முக்கியக் காரணம் ராகுல் காந்தியின் குடும்பம். இந்திய அரசியல் ராஜபரம்பரையின் வாரிசு அவர். இவரது கொள்ளுத் தாத்தா ஜவஹர்லால் நேரு இந்தியா விடுதலை அடைந்தபோது முதல் பிரதமராக இருந்தார்.

இவரது பாட்டியும் அப்பாவும் பிரதமர்கள். இத்தாலியில் பிறந்த இவரது அம்மா சோனியா காந்தி தனது காங்கிரஸ் தலைவர் பதவியை உடல் நலக்குறைவு காரணமாக 16 மாதங்களுக்கு முன்பு ராகுல் காந்தியிடம் வழங்கினார்.

இதற்கெல்லாம் முன்னதாகவே ராகுல் காந்தி இந்த பதவிக்காகவே தயார் செய்யப்பட்டார் என்பதில் சந்தேகமில்லை. 2013ம் ஆண்டு இவர் கட்சியின் இரண்டாவது மிக உயரிய பதவியில் இருந்தார். 2014 தேர்தலின்போது விரிவான பிரசாரங்களில் ஈடுபட்டார்.

அந்த வருடம் நாடாளுமன்றத்திலிருக்கும் 545 இடங்களில் காங்கிரசுக்கு வெறும் 44 இடங்களே கிடைத்தன. அவரது அரசியல் வாழ்க்கை பெரும் வீழ்ச்சியை சந்தித்தது.

அதன்பிறகு சிறிது காலத்துக்குக் காங்கிரசுக்கோ அவருக்கோ எதுவும் சரியாக அமையவில்லை. பல மாநிலத் தேர்தல்களில் காங்கிரஸ் பின்னடைவை சந்தித்தது. விமர்சகர்களும் அரசியல் எதிரிகளும் அவரை ஒன்றும் புரியாத, உளறுகிற ஒரு தலைவர் என்று சமூக ஊடகங்களில் கிண்டலடித்தார்கள்.

சாதாரண குடும்பப் பின்னணியிலிருந்து வந்த நரேந்திர மோதி, தனது சொந்த உழைப்பாலன்றி நேரு-காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே ராகுல் காந்தி மேலே வந்துவிட்டார் என்று திரும்பத் திரும்ப விமர்சித்தார்.

ஆனால், காட்சிகள் மாறத் தொடங்கின. நிழலில் இருந்து வெளிச்சத்திற்கு வரத் தொடங்கினார் ராகுல் காந்தி. அவரது சமூக ஊடகப் பிரசாரங்கள் புத்திசாலித்தனமாக மாறின.

சர்ச்சைக்குரிய பணமதிப்பு நீக்கம், வேலைவாய்ப்பின்மை, நாட்டில் சகிப்புத்தன்மை குறைவது, பொருளாதார மந்தநிலை ஆகியவை பற்றி அனைவரும் ஏற்றுக்கொள்ளும் விதமாக ராகுல் காந்தி விவாதிக்கத் தொடங்கினார்.

எல்லாவற்றுக்கும் மகுடம் சூட்டியதுபோல ராஜஸ்தான், சத்திஸ்கார் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் முக்கியமான சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.

ஒரு நாளுக்கு ஐந்து பிரசாரக் கூட்டம் வீதம் பேசிவரும் ராகுல் காந்தி இந்தியாவின் மூலை முடுக்குகளிலும் பயணிக்கிறார். அவரது தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது.

ராகுல் காந்தியைப் பற்றி 2012 நூலொன்றை எழுதியிருக்கும் மூத்த பத்திரிக்கையாளர் ஆர்த்தி ராமச்சந்திரன், நரேந்திர மோதிக்கு எதிரான நிலைப்பாட்டைத் தொடர்ந்து எடுப்பதன்மூலம் பிரசாரத்தளங்களில் பெரியதோர் ஆளுமைப்பண்பை ராகுல் காந்தி வெளிக்காட்டியுள்ளார் என்றும், ரஃபேல் ஊழலில் குற்றஞ்சாட்டப்பட்ட ஊழலுக்கான பதில்களை அரசிடம் கேட்பது, பணமதிப்பு நீக்கம் மக்களின் வாழ்வை எப்படிக் குலைத்தது என்று காரசாரமாக விவாதிப்பது ஆகியவற்றின் மூலம் இதை சாதித்திருக்கிறார் என்றும் கூறுகிறார்.

"அவர் இப்போது காட்டிவரும் அரசியல் புத்திசாலித்தனம் முன்பு அந்த அளவுக்கு இல்லை. அவரது பேச்சுத்திறனும் அதிகரித்துள்ளது. பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளும் இளைஞர்களை சந்தித்து, என்ன வேண்டுமானாலும் கேட்கச் சொல்கிறார்."

"அவர்களோடு அவரால் கலந்து பேச முடிகிறது. நாடாளுமன்றத்திலும் எழுதி வைத்துப் படிக்காமல் தன்னம்பிக்கையோடு அவரால் உரையாற்ற முடிகிறது. கொஞ்சம் கொஞ்சமாகத் தனது தனித்திறன்களை வளர்த்துக்கொண்டு அவர் தானாக இந்த நிலையை அடைந்துள்ளார்," என்கிறார்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 5 கோடிக்கும் மேலான ஏழைக் குடும்பங்களுக்குப் பணம் தரக்கூடிய குறைந்தபட்ச வருமான உத்தரவாதத் திட்டத்தைப் பற்றிய பல்வேறு விவாதங்கள் தொடங்கியுள்ளன. ஓர் அரசியல் விமர்சகர், காங்கிரஸ் கட்சியின் பிரசாரத்தை மேம்படுத்தும் சிறப்பான முயற்சி இது என்கிறார்.

பாகிஸ்தான் மீதான இந்திய விமானப்படையின் தாக்குதல் பாஜகவின் வெற்றிக்குத் துணைபோகும் என்று பேச்சுக்கள் எழுந்தபோது சரியான நேரத்தில் அறிவிக்கப்பட்ட திட்டம் இது.

வறுமை, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றைப் பற்றிய விவாதங்களை இந்தத் திட்டம் மீண்டும் முன்னெடுத்தது பாஜகவை மிகவும் தர்ம சங்கடத்துக்கு உள்ளாக்கியது.

ஆனால் 2019ல் இது ஒரு பெரிய மாற்றத்தைத் தந்துவிடாது என்று CSDS(Centre for the Study of Developing societies) ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் சஞ்சய் குமார் கூறுகிறார்.

"மிகத் தாமதமாக வந்த அறிவிப்பு இது. அதுபோக இந்த அறிவிப்பைப் பெரும்பான்மையான மக்களிடம் எடுத்துச் செல்வதற்கான தகவல் தொடர்புக்கான திறன்களோ வளங்களோ காங்கிரசிடம் இல்லை," என்கிறார்.

காங்கிரஸ் கட்சிக்குப் பல சிக்கல்கள் இருக்கின்றன என்றும் அவர் கூறுகிறார்.

"பல காங்கிரஸ் தலைவர்களுக்கு பேச்சுத் திறமை இல்லை. பெரும்பான்மை சமூகங்கள் பலவும் காங்கிரஸ் கட்சி சிறுபான்மையினருக்கே ஆதரவாக இருக்கிறது என்று நினைக்கின்றன. காங்கிரஸ் மீதே பல ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதால் இப்போதைய அரசின்மீது ஊழல் / நேர்மை சார்ந்த புகார்களை காங்கிரஸ் வைக்கும்போது மக்கள் நிறைய பேர் நம்ப மறுக்கிறார்கள்.காங்கிரஸுக்கு இருக்கிற மிகப்பெரிய சிக்கல் ஆதரவாளர்கள் குறைந்தது மட்டுமல்ல, தேர்தலில் வேலை செய்யத் தொண்டர்கள் குறைந்ததுதான்," என்கிறார்.

"காங்கிரஸ் வெற்றியின்மீது எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால் காங்கிரஸுக்கு எதிர்காலமே இல்லை என்று சொல்ல முடியாது. ஒன்றிரண்டு தேர்தல்களில் தோற்றுவிட்டால் ஒரு கட்சிக்கே எதிர்காலம் இல்லை என்று ஆகிவிடுமா? 1984 தேர்தலில் பாஜகவுக்கு வெறும் இரண்டு தொகுதிகள் கிடைத்தது நினைவிருக்கிறதா? சென்ற தேர்தலில் அது 282 ஆக மாறியதே," என்கிறார்.

2019 தேர்தல் வாழ்வா சாவா போராட்டம் இல்லை என்றும் 2024 என்பதே நிஜமான லட்சியம் என்றும் காங்கிரஸ் தலைவர்களே சூசகமாகத் தெரிவித்திருக்கிறார்கள்.

அமேதியில் பிரசாரம் செய்துகொண்டிருந்தார் ராகுல் காந்தி. 2004ல் அவர் அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்திருந்த நேரம் அது. அவரது வெற்றி வாய்ப்பு பற்றி அவரிடம் கேட்டேன்.

"சில வெற்றிகள்... சில தோல்விகளை நீங்கள் பெறலாம். ஒருவேளை நான் வெல்லக்கூடும், வெல்லாமலும் இருக்கக்கூடும்," என்றார்.

தோற்றுவிட்டால் என்ன செய்வீர்கள் என்று அவரைக் கேட்டேன்.

"ஒரு போரில் தோற்றுவிட்டேன் என்பதற்காக எல்லாவற்றையும் இழுத்து மூடிவிட்டு என்னால் எதுவும் முடியாது என்று போக முடியுமா? மூட்டைமுடிச்செல்லாம் கட்டி ஒரு தேர்தல் தோல்விக்காக வீட்டுக்குப் போக முடியுமா? இல்லை.. இல்லை."

அவரது வார்த்தைகளிலேயே சொல்வதென்றால், அவர் எப்போதைக்குமான ஒரு பணியில் இருக்கிறார். அதற்குள் அவரது கதையை நாம் எழுதி முடித்துவிட முடியாது.

பிற செய்திகள்: