You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"இலங்கை குண்டு வெடிப்பை தலைமை தாங்கி நடத்திய சஹ்ரான் ஹாசிம் பலி" - ராணுவ உளவு இயக்குநர்
இலங்கையில் ஏப்ரல் 21-ம் தேதி ஈஸ்டர் தினத்தில் நடந்த தொடர் குண்டு வெடிப்புத் தாக்குதலைத் திட்டமிட்டு நடத்திய தேசிய தௌஹீத் ஜமாத் தலைவர் சஹ்ரான் ஹாசிம் ஷாங்ரி லா விடுதியில் நிகழ்த்திய குண்டுவெடிப்பில் இறந்துவிட்டார் என்று இலங்கை ராணுவ உளவுப் பிரிவு இயக்குநரை மேற்கோள் காட்டி பிபிசி சிங்கள சேவை செய்தியாளர் அஸாம் அமீன் ட்வீட் செய்துள்ளார்.
முக்கிய ஊடகவியலாளர்களுடன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று வெள்ளிக்கிழமை நடத்திவிரும் சந்திப்பில் ராணுவ உளவுப் பிரிவு இயக்குநர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய 140 பேர் இருப்பதாகவும், அவர்கள் அனைவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் சிறிசேன தெரிவித்தார். இன்னும் 24 மணி நேரத்தில் சிறப்பு அலுவலகம் ஒன்று அமைக்கப்பட்டு தேசிய தௌஹீத் ஜமாத் போன்ற தீவிரவாதத்துடன் தொடர்புடைய அமைப்புகளைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
போதை மருந்துகள் மீதான நடவடிக்கைக்கு தொடர்பு
இலங்கை குண்டுவெடிப்புகளுக்கும் போதை மருந்துகளுக்கு எதிராக தாம் எடுத்த நடவடிக்கைக்கும் தொடர்பு இருக்கும் என்று ஜனாதிபதி தெரிவித்தார். பயங்கரவாதமும், போதை மருந்து மாஃபியாக்களும் கைகோர்த்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இத்தகவலை பிபிசி சிங்கள சேவையின் அஸாம் அமீன் தமது டிவிட்டர் பதிவின் மூலம் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களை முடக்குவது தொடர்பாக ஆலோசனை
ஊடகவியலாளர் சந்திப்பில் சமூக ஊடகங்கள் மீதான கட்டுப்பாட்டைப் பற்றிப் பேசிய ஜனாதிபதி, அந்த கட்டுப்பாடுகளை அகற்றுவதற்கு திட்டமிட்டு வருவதாகத் தெரிவித்தார்.
அதே நேரம், நேற்று சமூக ஊடகங்களில் பல தவறான செய்திகள் பகிரப்பட்டு வந்ததாகவும் எனவே அது குறித்துப் பரிசீலிப்பதாகவும் அவர் கூறினார். சமூக ஊடகத் தளங்களின் தலைவர்களைத் தாம் இன்று சந்திக்கவுள்ளதாகவும், தவறான தகவல்களை பகிரும் போக்கு கட்டுப்படாவிட்டால் அவற்றை முற்றாகத் தடை செய்யக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பள்ளிவாசல்களை தாக்க திட்டம் - தொழுகைக்கு செல்வதை தவிர்க்க இலங்கை போலீசார் கோரிக்கை
இலங்கையில் இஸ்லாமிய பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கான திட்டமொன்று காணப்படுவதாக பிரதி போலீஸ் மாஅதிபர் பியந்த ஜயகொடியின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இனவாத கருத்துக்களை கொண்ட மொஹமட் காசிம் சஹரானினால் நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்களின் ஒரு கட்டமாகவே பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தவும் திட்டமிடப்பட்டது குறித்து நம்பகரமான தகவல்கள் கிடைத்துள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குப்பு பள்ளிவாசல் என்றழைக்கப்படும் பள்ளிவாசலின் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிர் நீத்த இஸ்லாமிய தலைவர்களை நினைவு கூறும் வகையிலான இந்த பள்ளிவாசலின் மீது தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தி, பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் போலீசாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,வெள்ளிக்கிழமையன்று ஜும்மா தொழுகைகளில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலிம், முஸ்லிம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக ஏப்ரல் 21ஆம் தேதி நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் 253 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து நாட்டில் பதற்றம் நிலவி வருகிறது.
இந்த தொடர் குண்டு வெடிப்புகளுக்குப் பிறகு இலங்கையில் பல இடங்களில் தாங்கள் தாக்கப்படலாம் என்ற அச்சத்தில் முஸ்லிம்கள் உள்ளதாக சில செய்திகள் தெரிவித்தன.
நீர்கொழும்பு பகுதியில் வசிக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த அஹமதியா முஸ்லிம்கள் அச்சத்தின் காரணமாக அங்குள்ள மசூதி ஒன்றில் தஞ்சமடைந்து வருகின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்