அமெரிக்காவிடம் 2 மில்லியன் டாலர்கள் கேட்கும் வட கொரியா - காரணம் என்ன? மற்றும் பிற செய்திகள்

நீண்ட காலம் கோமாவில் இருந்து பின்னர் உயிரிழந்த அமெரிக்க மாணவர் ஓட்டோ வார்ம்பியரின் மருத்துவ செலவுகளுக்கு அமெரிக்காவிடம், வட கொரியா இரண்டு மில்லியன் அமெரிக்க டாலர்களை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

2015ஆம் ஆண்டு டிசம்பரில் சுற்றுலாவிற்காக சென்ற வார்ம்பியர், வட கொரியாவில் சிறையில் அடைக்கப்பட்டார். 17 மாதங்கள் காவலில் வைக்கப்பட்டு கோமா நிலையில் அமெரிக்கா திரும்பிய அவர் அங்கு உயிரிழந்தார்.

வார்ம்பியரை அவரது நாட்டிற்கு அனுப்பும் முன்னரே அவரின் மருத்துவ செலவுகளை அமெரிக்கா ஏற்க வேண்டும் என்று, வட கொரியா கேட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவிக்க வெள்ளை மாளிகை மறுத்துவிட்டது.

இலங்கை குண்டுவெடிப்பு- இறந்தவர்கள் எண்ணிக்கையில் திருத்தம்

ஏப்ரல் 21ஆம் தேதி இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் இறந்தவர்கள் எண்ணிக்கையை திருத்தம் செய்து வெளியிட்டுள்ளது இலங்கை அரசு.

இறந்தவர்களின் எண்ணிக்கையை நூற்றுக்கும் அதிகமான எண்ணிக்கையில் குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது இலங்கை சுகாதார அமைச்சகம்.

கணக்கீட்டு பிழை என இதற்கு காரணம் கூறுகிறது இலங்கை அரசு.

தற்போதய நிலவரப்படி இறந்தவர்களின் எண்ணிக்கை 253 என்கிறது இலங்கை சுகாதார அமைச்சகம். முன்னதாக 359 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டது.

அச்ச உணர்வில் வாழும் காத்தான்குடி முஸ்லிம்கள்

இலங்கையின் கடலோர நகரமான காத்தான்குடியில் வாழும் இரண்டு குழந்தைகளுக்கு தாயான முகமது காசிம் மதானியா நம்பிக்கையின்றி காணப்படுகிறார்.

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின்போது, தேவாலயங்கள் உள்பட 8 இடங்களில் நிகழ்ந்த தொடர் தற்கொலை குண்டு தாக்குதல்களில் இதுவரை 253 பேர் கொல்லப்பட்ட நிலையில் தற்கொலை குண்டுதாரிகள் குழுவின் தலைவராக தனது சகோதரர் சஹ்ரான் காசிம் கூறப்படுவது இவருக்கு தெரிய வந்துள்ளது.

நடந்தவை பற்றி கோபமடைந்துள்ள அவர், அடுத்து என்ன நடக்கும் என்று அச்சப்படுகிறார். காவல்துறையால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட அவர், சந்தேக நபராக நடத்தப்படவில்லை.

பெருஞ்செல்வந்தரின் இரண்டு மகன்கள் உள்பட பல தற்கொலை குண்டுதாரிகளை வழிநடத்தியதாக குற்றஞ்சாட்டப்படும் காசிம் உயிரோடு இருக்கிறாரா அல்லது இறந்து விட்டாரா என்பது தெளிவாக தெரியவில்லை.

வடகொரியாவுக்கு சர்வதேச உத்தரவாதங்கள் தேவை - புதின்

அணு ஆயுத திட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னுக்கு சர்வதேச பாதுகாப்பு உத்தரவாதங்கள் தேவைப்படுகிறது என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்திருக்கிறார்.

சர்வதேச கட்டமைப்புக்குள் இந்த உத்தரவாதங்கள் அளிக்கப்பட வேண்டும் என்றும் கிம் ஜாங்-உன்னுடன் நிகழ்ந்த முதல் உச்சிமாநாட்டில் புதின் தெரிவித்துள்ளார்.

அணு ஆயுத ஒழிப்பு தொடர்பான அமெரிக்க அணுகுமுறையை விமர்சித்துள்ள புதின், "அச்சுறுத்தல்களுக்கு பதிலாக நம்பிக்கையும் மரியாதையையுமே தேவைப்படுகிறது" என புதின் தெரிவித்துள்ளார்.

விளாடிமிர் புதினுடன் நடைபெற்ற உச்சிமாநாட்டை மிகவும் அர்த்தமுள்ளதொரு சந்திப்பு கிம் ஜாங்-உன் பாராட்டியுள்ளார்.

ஜெயலலிதாவுக்கு சொந்தமான நான்கு வீடுகள் முடக்கம்

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம், ஹைதராபாத்தில் உள்ள வீடு உள்ளிட்ட அவரின் நான்கு வீடுகள் முடக்கப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை அதிகாரிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

ஜெயலலிதாவின் இறப்புக்கு பின்னர் அவரின் சொத்துகளை நிர்வகிக்க ஒரு நிர்வாகியை நியமிக்கக் கோரும் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த விசாரணையில், கடந்த ஜனவரி மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் வாய்வழிச் செய்தியாக கூறிய விவரங்களை ஆவணங்களாக சமர்ப்பித்தனர் என மனுதாரர் புகழேந்தியின் வழக்கறிஞர் நந்தகுமார் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :