"தாக்குதலின் வலி எப்படி இருக்கும்?" - குமுறும் புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்கள்

    • எழுதியவர், சாய்ராம் ஜெயராமன்,
    • பதவி, பிபிசி தமிழ்

கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் இலங்கை மட்டுமின்றி இந்தியா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த 253 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறையின் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக இறந்தவர்களின் எண்ணிக்கை 359 என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கண்ணெதிரே மூன்று குழந்தைகளை பறிகொடுத்த பிரிட்டன் தொழிலதிபர், சில நிமிடங்கள் தாமதமாக சாப்பிட சென்றதால் உயிர்பிழைத்த ஒருவரின் அனுபவம் என்பது போன்று இந்த சமீபத்திய குண்டுவெடிப்பில் உயிர் இழந்தவர்கள் மற்றும் உயிர் தப்பியவர்களின் கதைகளை கடந்த சில நாட்களாக அறிந்து வருகிறோம்.

ஆனால், 1983ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை சுமார் 26 ஆண்டுகள் இலங்கை அரசுப்படைகளுக்கும், விடுதலை புலிகள் அமைப்பினருக்கும் இடையே நடந்த உள்நாட்டு போரில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கானோரின் குடும்பத்தினரிடம் எத்தனை கதைகள் நீங்கா நினைவுகளாக அவர்களை துரத்தி வருகிறது என்பதை யாராலும் கணக்கிட முடியாது.

இலங்கையில் உள்நாட்டுப் போர் தொடங்கியதிலிருந்து நிறைவடைந்தது வரையிலான காலகட்டத்தில் உயிர் பிழைத்தால் போதும் என்ற எண்ணத்தில் சட்டவிரோதமாக கப்பல்களிலும், அகதிகளாக காத்திருந்தும் இந்தியா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ் போன்ற பல்வேறு நாடுகளுக்கு குடிபெயர்ந்த இலங்கை தமிழர்களின் எண்ணிக்கை லட்சத்திற்கும் மேல்.

இலங்கையில் உள்நாட்டுப் போர் நிறைவடைந்து பத்தாண்டுக்காலம் நிறைவடைய உள்ள நிலையில் நடைபெற்ற இந்த தாக்குதல் சம்பவத்தை இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் தமிழர்கள் எந்த கோணத்தில் அணுகுகிறார்கள் என்பது குறித்து அவர்களிடம் கேட்டோம்.

ரோஷிணி ரமேஷ் - பிரிட்டன்

"கண் முன்னே சுட்டு கொல்லப்படும் உறவினர்கள், பாலியல் தாக்குதலுக்கு உட்படுத்தப்படும் பெண்கள், வாழ்க்கையை துவங்கும் முன்னே தாயின் கருவறையிலேயே பிணமாகும் பிஞ்சுகள், வெடிக்கும் தேவாலயங்கள், குண்டு பொழிவுகளால் இரவே வராத நாட்கள்" இவையெல்லாம் தனது வாழ்க்கையின் முதல் 22 ஆண்டுகளை இலங்கையில் வாழ்ந்தபோது சந்தித்தவை என்று கூறுகிறார் பிரிட்டனில் வசிக்கும் ரோஷிணி ரமேஷ்.

இலங்கையில் போர் நிறைவுற்றதாக அறிவிக்கப்பட்ட 2009ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட ரோஷிணி, அந்த ஆண்டே இலங்கையிலிருந்து பிரிட்டனுக்கு மேற்கல்விக்காக சென்று, கடந்த ஏழு ஆண்டுகளில் ஒரேயொரு முறை மட்டும்தான் இலங்கை சென்றதாக கூறுகிறார்.

"2012ஆம் ஆண்டு உறவினர்களை பார்ப்பது உள்ளிட்ட சில முக்கியமான காரணங்களுக்காக மனதை தேற்றிக்கொண்டு இலங்கைக்கு சென்றேன். ஆனால், சென்ற தினமே மீண்டும் எப்போது பிரிட்டனுக்கு திரும்புவோம் உணர்வு ஏற்பட்டதுடன், அடுத்தடுத்த தினங்களில் நடந்த சம்பவங்களால் மன உளைச்சல் ஏற்பட்டதுடன், உயிர் பிழைத்தால் போதும் என்ற எண்ணத்தில் நாடு திரும்பினேன்."

ரோஷிணியை மீண்டும் ஒரே நாளில் பிரிட்டன் திரும்பும் அளவுக்கு யோசிக்க வைத்த விடயங்கள் என்னவென்று அவரிடம் கேட்டபோது, "நான் 2012ஆம் ஆண்டு இலங்கை சென்றிருந்தபோது, போர் முடிந்து மூன்றாண்டுகாலம் ஆகியிருந்தது. இருப்பினும், எமது உறவினர்களும், தமிழ் மக்களும், தங்களது சொந்த நிலம் திரும்ப கிடைக்காமல், வேலைவாய்ப்பு இல்லாமல், அடிப்படை வசதிகள் இன்றி, தொடர்ந்து அழுத்தத்திற்குட்பட்ட சூழ்நிலையில் வாழ்ந்தது என்னை பெரிதும் பாதித்தது. நான் இங்கிருந்து உயிருடன் திரும்புவேனா என்ற பயத்தை ஏற்படுத்தியது" என்று விவரிக்கிறார்.

இந்நிலையில், தற்போது மூன்று வயதாகும் தனது குழந்தையை தாய்நாட்டிற்கு அழைத்துச்செல்லும் திட்டத்தை இந்த சமீபத்திய தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பவங்கள் அடியோடு மாற்றியுள்ளதாக அவர் மேலும் கூறுகிறார்.

"எனது வாழ்க்கையின் முதல் 22 ஆண்டுகளை கழித்த இடங்களையும், எனது குடும்பத்தினரையும் நேரில் பார்க்க முடியாத நிலையில் நாங்கள் பிரிட்டனில் இருக்கிறோம். எனது குழந்தை தனது பாட்டியிடம் காணொளி அழைப்பில் பேசும்போது, 'பாட்டி, அந்த மாட்டை காட்டுங்கள், ஆட்டை காட்டுங்கள், கோழியை காட்டுங்கள்' என்று பேசும்போது என்னால் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே, அடுத்தாண்டு இலங்கைக்கு செல்லலாமா என்ற எண்ணம் தோன்றிய நிலையில் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல், இனி அங்கு செல்லவே முடியாதா என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது" என்று லண்டனில் தொழில்முனைவராக இருக்கும் 32 வயதான ரோஷிணி கூறுகிறார்.

உள்நாட்டின் போது கண்முன்னே நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பதை பார்த்த நினைவுகள் இன்னுமும் மறையாத நிலையில், சமீபத்திய தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள், எஞ்சியிருக்கும் உறவினர்களின் நிலை என்னவாகும் என்று எந்நேரமும் நினைத்து கொண்டிருப்பதால் இரவு சரியாக தூங்கக் கூட முடியவில்லை என்று அவர் மேலும் கூறுகிறார்.

நௌஷாட் காதர் - அமெரிக்கா

கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் நடந்த தாக்குதல்கள் பெரும்பாலும் தேவாலயங்களையே குறிவைத்து நடத்தப்பட்டன.

அதாவது, மொத்தம் எட்டு இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் நீர்கொழும்புவில் உள்ள புனித செபாஸ்டியன் தேவாலயம், தமிழர்கள் அதிகம் வசிக்கும் மட்டக்களப்பு நகரில் உள்ள சியான் தேவாலயம், கொழும்பு நகரில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயம் உள்ளிட்டவைகளில் அதிகளவிலான உயிரிழப்புகள் நிகழ்ந்தன.

ஈஸ்டர் திருநாளை அனுசரித்து கொண்டிருந்த கிறித்தவர்கள் மீது தொடுக்கப்பட்ட இந்த தாக்குதல் சம்பவம் குறித்த கண்டனங்களை பார்க்கும்போது, மத வழிபாட்டு தலங்கள் மீது இலங்கையில் தாக்குதல் நடத்தப்படுவது இதுவே முதல் முறை என்பது போன்ற தவறான கருத்து ஏற்படுத்தப்படுவதாக கூறுகிறார் கடந்த 2003ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்த நௌஷாட் காதர்.

"இலங்கையில் உள்நாட்டுப் போர் நடைபெற்று கொண்டிருந்தபோது, விடுதலை புலிகள் - அரசு தரப்புக்கு இடையே சமாதானம் ஏற்படுத்தும் பணிகளில் கிறித்தவ தேவாலயங்கள் ஈடுபட்டு வந்தன. அதாவது, புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளில் இருக்கும் மக்கள், சமாதானத்தை விரும்பி அரசு தரப்பிடம் சரணடைய விரும்பினால் அதற்கான பணிகளை மேற்கொள்ளும் மையமாக தேவாலயங்கள் திகழ்ந்தன. அதை இரண்டு படைகளும் நன்கு அறிந்திருந்த நிலையிலும், தேவாலயங்கள் மீது நடத்தப்பட்ட விமானப்படை, பீரங்கி உள்ளிட்ட தாக்குதல்களில் எண்ணமற்ற மக்கள் மாண்டனர்" என்று அவர் கூறுகிறார்.

1990ஆம் ஆண்டு இலங்கையின் காத்தான்குடியில் முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது நடத்தப்பட்ட தாக்குதலில் 147 பேரும், 1995ஆம் ஆண்டு நவாலி தேவாலயம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 125 பேரும் உயிரிழந்தனர். இவ்வாறாக இலங்கையிலுள்ள பல்வேறு மத வழிபாட்டு தலங்கள் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளதாக நௌஷாட் நினைவுகூர்கிறார்.

இலங்கையில் நடத்தப்பட்டுள்ள சமீபத்திய தாக்குதல் புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்களின் எண்ணவோட்டத்தில் ஏற்படுத்தியுள்ள மாற்றம் குறித்து அவரிடம் கேட்டபோது, "உள்நாட்டுப் போர் நடந்து முடிந்த பத்தாண்டுகாலத்தில், போரை நேரடியாக பார்க்காத தலைமுறை உருவாகி, மற்றவர்கள் ஒற்றுமையையும், சமாதானத்தையும் நோக்கி சென்றுகொண்டிருக்கும் இந்த வேளையில் நடத்தப்பட்டுள்ள தாக்குதல், இலங்கை தமிழர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது" என்று அவர் மேலும் கூறுகிறார்.

இலங்கதாஸ் பத்மநாதன் - கனடா

இலங்கையில் உள்நாட்டுப் போர் நடந்தபோது இருந்ததை விட தற்போது உலகம் முழுவதும் பயங்கரவாத எதிர்ப்பு என்பது பலமாக உள்ளதாக கூறுகிறார் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து தற்போது கனடாவின் டொரோண்டோ நகரில் வசிக்கும் பத்மநாதன்.

"யாராக இருந்தாலும் உயிரின் மதிப்பு ஒன்றே. இருந்தபோதிலும், உள்நாட்டுப் போரில் மடிந்த உறவினர்களை கண்டு தமிழர்கள் கதறியபோது ஒருவரும் உதவிக்கு வரவில்லை. ஆனால், இந்த சமீபத்திய தாக்குதலுக்கு பல நாடுகளும் ஆதரவு கரம் நீட்டி வருகின்றன. இதற்கு சர்வதேச நாடுகளின் அழுத்தமே காரணம். உள்நாட்டுப் போரில் உறவுகளை இழந்தவர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. ஆனால், இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு எவ்வித பாகுபாடுமின்றி உதவிகள் கிடைப்பதை உலக நாடுகள் உறுதி செய்ய வேண்டும்" என்று பத்மநாதன் கோரிக்கை விடுகிறார்.

"நவாலி தேவாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் தமது பெற்றோரை இழந்தவர்கள் தொடங்கி, உள்நாட்டுப் போரால் பல விதங்களில் பாதிக்கப்பட்டவர்கள் கனடாவில் வாழ்ந்து வருகின்றனர். போரால் ஏற்பட்ட துயரங்களை மறக்க முடியாமல் தவிப்பவர்களுக்கு மென்மேலும் மன உளைச்சலையும், பயத்தையும் உண்டாக்கியுள்ள இந்த சம்பவம் குறித்து இனம், சமயம் உள்ளிட்ட எவ்வித வேறுபாடுமின்றி விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை உலக நாடுகள் உறுதி செய்ய வேண்டும்" என்றும் பத்மநாதன் வலியுறுத்துகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :