You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை போரில் காணாமல் போனோர் பற்றி அறிய ஆர்.டி.ஐ. உதவுமா? அருணா ராய் பதில்
''நாட்டின் எந்தவொரு குடிமகனும் கேள்வி எழுப்பலாம். நெருக்கடி, சிக்கல்கள் நிறைந்த சூழ்நிலைகளில் கூட தகவல் அறியும் உரிமை சட்டம் (ஆர்டிஐ) மிகவும் உதவுகிறது. ஜனநாயகம் எவ்வளவு முக்கியமோ (ஆர்டிஐ) அவ்வளவு முக்கியமானது. கேள்வி கேட்கும் உரிமை மக்களுக்கு இருக்க வேண்டும்.'' என்று தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து உறுதியாக பேசினார் இந்திய அரசியல் சமூக செயற்பாட்டாளர் அருணா ராய்.
சர்வதேச தகவல் அறியும் உரிமை தினம் அக்டோபர் 28ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
அரச சேவை என்பது மக்களின் சேவையாக அறுதியிடப்படுகிறது. யார் வேண்டுமானாலும் கேள்வியை எழுப்பலாம். ஒட்டு மொத்த அரசாங்கமும் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாய நிலையை தகவல் அறியும் உரிமை சட்டம் உருவாக்குகிறது.
இலங்கையில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதி அமலுக்கு வந்தது.
சர்வதேச தகவல் அறியும் உரிமை தினத்தை முன்னிட்டு கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை சர்வதேச மாநாடொன்றும் நடத்தப்பட்டது. இந்த மாநாட்டின் ஆரம்ப நிகழ்வு கொழும்பில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் இந்தியாவின் அரசியல் சமூக செயற்பாட்டாளர் அருணா ராய் முக்கிய விருந்தினராக கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வின் பின்னர் பி.பி.சி. தமிழுடன் அருணா ராய்.
கேள்வி: ஆர்டிஐ எவ்வளவு முக்கியமானது?
பதில்: ''ஜனநாயகம் எவ்வளவு முக்கியமோ ஆர்டிஐ அவ்வளவு முக்கியமானது. கருத்துக்களை வெளியிடும் உரிமை இருக்க வேண்டும். கேள்வி கேட்கும் உரிமை இருக்க வேண்டும்.
இல்லையென்றால் பணத்தை என்ன செய்கிறார்கள், நிலத்தை என்ன செய்கிறார்கள், நாட்டை என்ன செய்கிறார்கள் என்று ஒன்றும் புரியாது.
தெற்காசிய நாடுகளை எடுத்துக்கொண்டால், யார் ஆட்சிக்கு வந்தாலும் லஞ்சம் வாங்காத கட்சி கிடையாது. ஊழல் இல்லாத கட்சி கிடையாது. நாட்டை நிர்வகிக்க அரசியல் முறையொன்று தேவைப்படுகிறது.
இந்த அரசியல் முறையில், வெளிப்படைத் தன்மையும், பொறுப்புக் கூறலும் மிகவும் முக்கியமாகிறது. இதற்கு கேள்வி கேட்கும் உரிமை மிக மிக அவசியமாகிறது.''
''இந்தியாவைப் பாருங்கள். இந்தியாவில், அரசியல் கட்சிகளுக்கு வெளிநாட்டுப் பணத்தைப் பெற முடியும். அது குறித்த தகவல்களை வெளியிடும் அவசியம் இல்லை. இது குறித்து நாம் கேட்டால், அதனை அவர்களால் நிராகரிக்க முடியும். இதற்கான விதி சட்டம் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு காப்ரேட் கம்பனிகள்தான் பணம் கொடுக்க வேண்டும். அதனால் அரசாங்கம் காப்ரேட் கம்பனிகளுக்காக செயல்படுகின்றது. நிலம் நம்முடையதல்ல, தண்ணீர் நம்முடையதல்ல.
கூடங்குளத்தில் என்ன ஆனது? கதிர்வீச்சுக்களை சுவாசித்தோமா இல்லையா என்பது கூட தெரியாது. இதுகுறித்து நாம் தெரிந்துகொள்ள வேண்டாமா? நம்ம ஊர், நம்ம நிலம், நம்ம உயிர்கள் இல்லையா இவை. இதுகுறித்த தகவல்களைத் தெரிந்துகொள்ளவது முக்கியமானது. அதனால் தான் கூறுகிறோம் ஆர்டிஐ மிகவும் முக்கியமானது.''
கேள்வி: இலங்கையில் போர் நடந்தது. போர் நடைபெற்ற போதும், இறுதிப் போரின் போதும் தமது உறவுகளைத் தொலைத்தவர்கள் என்ன நடந்தது என்று இன்னும் தேடிக் கொண்டிருக்கிறனர். இவர்களுக்கு ஆர்டிஐ உதவுமா?
பதில்: ''இந்தியாவில் காஷ்மீர், மணிப்பூர் ஆகிய பிரதேசங்கள் மிகவும் சிக்கல் நிறைந்தவை. காஷ்மீரிலும் காணாமல் போனவர்கள் இருக்கிறார்கள். மணிப்பூரிலும் இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இன்னும் பல சிக்கலுக்குரிய பிரதேசங்கள் இருக்கின்றன.
இவ்வாறான சூழ்நிலைகளில் கூட ஆர்டிஐ பயன்டுகிறது. ஆர்டிஐ -க்கு மிகப் பெரிய பலம் இருக்கிறது.
காணாமல் போதல்கள் குறித்து கண்டறிவதற்கும், ஊழல், மோசடிகளைத் தடுப்பதற்கும் ஆர்டிஐ பெரும் உதவியாக இருக்கிறது. எல்லாவற்றையும் உடனடியாக மாற்றிவிட முடியாது.
சிறந்தவொரு நிர்வாகத்தைக் கொண்டுவர நிறைய வேலை செய்ய வேண்டியிருக்கிறது. இதற்கான அடித்தளத்துக்கு ஆர்டிஐ மூலம் பலம் சேரும். அதனால்தான் சில சந்தர்ப்பங்களில் ஆர்டிஐ-யை மெளனிக்கச் செய்ய முயற்சிக்கின்றனர்.''
கேள்வி: இலங்கையில் உறவுகளைத் தொலைத்தவர்கள், உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிவதற்கான வாய்ப்பு ஆர்டிஐ மூலம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறதா?
பதில்: ''நம்பிக்கை இருக்கிறது. தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பது பற்றி அவர்களால் கேள்வியெழுப்ப முடியும் என நம்புகிறேன். எனினும், இதில் எவ்வளவு தூரம் அவர்களுக்கு திருப்தியான பதில்கள் கிடைக்கும் என்பதை என்னால் தற்போதைக்குக் கூற முடியாது.''
கேள்வி: சமீபத்தில் இலங்கையில் சட்டமாக்கப்பட்ட ஆர்டிஐ -யின் பயணம் குறித்து கூறுங்கள்?
பதில்: அரசியல் ரீதியான ஒத்துழைப்பு இங்கு இருந்தால், ஆர்டிஐ ஊடாக நீண்ட தூரம் பயணிக்கலாம். ஆர்டிஐ நடைமுறைப்படுத்தப்பட்டால், ஜனநாயகம் நிலைபெறும். நாடு வளம்பெறும்.'' என்று கூறி முடித்தார் அருணா ராய்.
ஆர்.டி.ஐ. சட்டம் எவ்வாறு கொண்டுவரப்பட்டது?
பிப்ரவரி மாதம் 3ம் தேதி தகவல் அறியும் உரிமை சட்டம் கொண்டுவரப்படும் என்ற அறிவிப்பை இலங்கை அரசு ஜனவரி மாதம் அதிகாரபூர்வ அறிவிப்பின் மூலம் தெரிவித்தது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி இலங்கை குடிமக்களுக்கு அரசின் தகவல்களை பெறுவதற்கான உரிமை அளிக்கப்பட்டுள்ளது.
தரவுகள் என்பது ''அரசின் கையில், கட்டுப்பாட்டில் அல்லது கண்காணிப்பில் உள்ள தகவல்கள்'' என்று பொருள்படுகிறது.
விண்ணப்பதாரர்கள், தமிழ், ஆங்கிலம், சிங்கள மொழிகளில் தகவல்களை பெற்றுக்கொள்ளலாம். இந்த சட்டத்தின் கீழ், அமைச்சுக்கள், துறைகள், பொது நிறுவனங்கள், உள்ளூராட்சி அதிகாரிகள், அரசிடம் இருந்து கணிசமாக நிதி பெறும் அரச சார்பற்ற தன்னார்வ தொண்டு அமைப்புக்கள், உயர் கல்வி நிறுவனங்கள், நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள் ஆகிய நிறுவனங்கள் தகவல்களை வழங்க வேண்டும்.
ஆயினும் தேசத்தின் பாதுகாப்பு, பொருளாதாரம், வெளிநாட்டு வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பான பேச்சுவார்த்தை, தனி நபர்களின் தகவல்கள், மருத்துவ அறிக்கைகள் உள்ளிட்ட சில தகவல்களை பெற தடை உள்ளது.
ஆர்டிஐ சட்டம் ஏன் கொண்டுவரப்பட்டது?
ஜனவரி 2015ல் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றுதான் தகவல் அறியும் உரிமை சட்டம்.
2016 ஜூன் மாதம் 24ம் தேதியன்று நாடாளுமன்றம் தகவல் அறியும் உரிமை சட்டத்தை அடிப்படை உரிமைகளில் ஒன்றாக அங்கீகரித்து ஓர் அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டுவந்தது.
ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி நாடாளுமன்ற சபாநாயகர் ஒப்புதல் அளித்து அதனை சட்டமாக உருவாக்கினார்.
ஆர்டிஐ -யினால் என்ன பயன்?
தகவல் அறியும் உரிமையினை பயன்படுத்தி அரச நிறுவனங்கள், அரச பிரதிநிதிகள், அரசியல்வாதிகளிடம் மக்கள் கேள்விகளைக் கேட்டு தெளிவினைப் பெற்றுக்கொள்வதோடு இதன் மூலம் நாட்டிற்குள் அரச நிறுவனங்கள், அரசியல்வாதிகளிடம் இருந்து ஊழல், லஞ்ச முறைகேடு என்பன தூரமாக்கப்படும்.
இந்த சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் தேசத்தின் அதிகாரத்தை பாதுகாக்கும் சகல தகவல்களும் சிறந்த முறையில் அமலுக்குக் கொண்டுவரப்படுகின்றன.
மக்கள் நலனுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தீர்மானங்களின் ரகசியங்களை ஏற்ற வகையில் வெளிப்படுத்துவதற்கான சிறந்த முறையை, தகவல் அறியும் உரிமை கொண்டுவருகிறது.
ஆர்டிஐ சட்டமும் உலக நாடுகளும்:
250 ஆண்டுகளுக்கு முன்பே சுவீடன் உலகில் முதன்முதலாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை 1766ஆம் ஆண்டு அமல்படுத்திய பெருமையைப் பெறுவதாக அறியப்படுகிறது.
இரண்டாவதாக பின்லாந்து 1951ஆம் ஆண்டு அமல்படுத்தியது. இதற்கு அடுத்தபடியாக 1966இல் அமெரிக்காவும் அமல்படுத்தியது.
சுமார் 4 தசாப்தங்களுக்கு முன்பே மேற்கத்திய நாடுகளால் பிரகடனப்படுத்தப்பட்ட இந்த தகவல் அறியும் சட்ட மூலத்தை இதுவரை 120 -கும் மேற்பட்ட நாடுகள் அமல்படுத்தியுள்ளன.
ஆர்டிஐ வலுவாக உள்ள நாடுகள்:
ஆர்டிஐ சட்டம் வலுவாக அமல்படுத்தப்படும் நாடுகளுக்கான பட்டியலில் ஆஸ்திரியா முதலிடத்தில் உள்ளது.
குறைந்த புள்ளிகளுடன் ஆப்கானிஸ்தான் இருக்கிறது. ஆப்கானிஸ்தானுக்கு அடுத்தபடியாக மெக்சிகோ, செர்பியா, இலங்கை, ஸ்லோவேனியா, இந்தியா ஆகிய நாடுகள் இருக்கின்றன.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்