மாறிவரும் பருவநிலை இலங்கைக்கு அச்சுறுத்தல்: எச்சரிக்கும் உலக வங்கி

அதிகரித்துவரும் வெப்பநிலையும் மாற்றமடைந்துவரும் மழைக் காலங்களும் இலங்கைக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக உலக வங்கி எச்சரித்துள்ளது.

இந்த பருவநிலை மாற்றத்தால் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் வாழ்க்கைத் தரமும் குறைந்துவிடக்கூடும் என உலக வங்கியின் புதிய அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தெற்காசியாவில் அபாய வலயங்கள் பற்றிய உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கீழ்காணும் அம்சங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன.

வெப்பநிலை, மழை பெய்வதில் மாற்றங்கள் வாழ்க்கைத் தரத்தில் ஏற்படுத்தும் தாக்கம்

தெற்காசிய மக்கள்தொகையில் ஏறத்தாழ பாதிபேர் அபாய வலயங்கள் எனப்படும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளிலே வாழ்ந்து வருகின்றனர்.

பயிர் விளைச்சல் குறைதல், நலிவடையும் தொழிலாளர் உற்பத்தித்திறன், இவற்றுடன் தொடர்புடைய சுகாதார தாக்கங்கள் ஆகியவை காரணமாக அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைத் தரம் வீழ்ச்சியடையக்கூடும்.

மிகக் குறைவான வளர்ச்சி, மோசமான இணைப்புக்களை கொண்டிருத்தல், நீர் பற்றாக்குறை ஆகிய பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதால், இந்த அபாய வலயங்களில் உள்ள மக்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையின் வடக்கு, வட மேற்கு மாகாணங்களில் 2050ம் ஆண்டளவில் சராசரி வெப்பநிலை அதிகரிக்கவும், மழை பெய்வதில் அதிக மாற்றம் ஏற்படவும் சாத்தியக்கூறுகள் அதிகம்.

2015ம் ஆண்டு பாரிஸ் உடன்படிக்கையில் பரிந்துரைக்கப்பட்டதற்கு ஏற்ப கார்பன் வெளியேற்றத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

இருப்பினும், இலங்கையின் சராசரி ஆண்டு வெப்பநிலையானது 2050ம் ஆண்டளவில் 1 டிகிரி செல்சியஸ் முதல் 1.5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என பகுப்பாய்வுள் கூறுகின்றன.

எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால் இலங்கையின் சராசரி வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கலாம்.

'காலநிலை மாற்றங்கள் தனி நபர் வருமானக் குறைவுக்கு வழிகோலுகிறது. இது தெற்காசியா முழுவதிலும் வறுமை மற்றும் சமத்துவமின்மையை அதிகரிக்கும்' என தெற்காசியப் பிராந்தியத்திற்கான உலக வங்கியின் முதன்மை பொருளியலாளர்களில் ஒருவரும் இந்த அறிக்கையைத் தயாரித்தவருமான முத்துக்குமார மணி தெரிவித்தார்.

'காலநிலை மாற்றத்தினால் அபாயத்தை எதிர்நோக்கியுள்ள பகுதிகளை இனம் காண்பது, அங்கு வாழும் சமூகங்களுக்கு அவசியமான வளங்களையும் அவர்களுக்கு தேவையான உதவிகளையும் முன்னுரிமை அடிப்படையில் அளிக்க கொள்கை வகுப்பாளர்களுக்கு உதவும்' என்று முத்துகுமார மணி கூறியுள்ளார்.

பருவநிலை மாற்றத்தைத் தாக்குபிடிக்கும் உள்ளகத் திறனை கட்டியெழுப்பத் தேவையான முதலீடுகள், மூலோபாயங்களை முன்னிலைப்படுத்தும் தெரிவுகளை இந்த அறிக்கை வழங்குகின்றது.

விவசாயத்துறையை சாராத தொழில் வாய்ப்புக்களை உருவாக்குதல், சந்தை வாய்ப்புக்களை மேம்படுத்துல், கல்வி வாய்ப்புக்களை மேம்படுத்துதல் போன்றவற்றின் ஊடாக, காலநிலையுடன் நெருங்கிய தாக்கத்தை கொண்டிருக்காத துறைகளில் வாய்ப்புக்களை உருவாக்குவதன் மூலம், அதிக அபாயத்தை எதிர்கொள்ளும் தரப்பினரின் வாழ்க்கைத் தரத்தை, காலநிலை தாக்கங்களின் பாரதூரம் பாதிக்காமல் காக்க முடியும் என ஆய்வுகள் கோடிட்டுக்காட்டுகின்றன.

காலநிலையை தாக்குபிடிக்கும் திறனுக்கு ஒத்துழைப்பு வழங்கல், காலநிலை மாற்றத்தை தழுவிக்கொண்டு செயல்படுதல் ஆகிய விடயங்களில் இலங்கை அரசாங்கத்துடன் உலக வங்கி மிக நெருக்கமாக பணியாற்றுகின்றது.

காலநிலை பதிப்பை தாக்குபிடிக்குத் திறனை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ், வெள்ளத்தில் இருந்து பாதுகாக்கும் செயற்பாடுகள், நிலச்சரிவுகளுக்கு தாக்குப்பிடித்தல் உள்ளிட்டவற்றை மேம்படுத்தும் முதலீடுகளுக்கு ஒத்துழைப்பளிக்கிறது.

காலநிலையை தாக்குபிடிக்கும் உத்தேச விவசாய நீர்ப்பாசன திட்டமானது, இவ்வருடத்தில் அனுமதிக்காக வைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் இனங்காணப்பட்டுள்ள அபாய வலயங்களிலுள்ள நீர்ப்பாசன கட்டமைப்புக்களை புனரமைப்பது உட்பட விவசாயத்திற்கு தேவையான மேம்படுத்தப்பட்ட நீர்முகாமைத்துவத்திற்கு உலக வங்கி ஆதரவளிக்கும்.

"மேம்படுத்தப்பட்ட உட்கட்டமைப்பு, சந்தை மறுசீரமைப்பு, மேம்படுத்தப்பட்ட மனித ஆற்றல் ஆகியன, காலநிலை மாற்றம், இயற்கைப் பேரிடர் ஆகிய அதிகரிக்கும் அச்சுறுத்தல்களுக்கு, வலுவான, நிறுவன ரீதியான பதிலளிக்கக்கூடியதாக அமைந்திருக்கின்றன" என்று மணி தெரிவித்தார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :