You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
''இலங்கையின் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு, தேர்தலை நடத்துங்கள்''- மஹிந்த ராஜபக்ஷ
'இலங்கையின் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு, தேர்தலை நடத்துங்கள்' என்று உள்ளூராட்சி சபை தேர்தல் வெற்றியால் உற்சாகமடைந்திருக்கும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் மக்கள் ஆணையை இழந்துவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.
தேர்தல் முடிவுகளின்படி ராஜபக்ஷவின் பொதுஜன பெரமுன கட்சி 239 சபைகளை கைப்பற்றியுள்ளது. ஆனால் இரண்டாம் இடத்தில் உள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி 41 சபைகளையும், தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் கட்சி 10 சபைகளையும் மாத்திரமே கைப்பற்றியுள்ளன.
இந்த நிலையில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தை உடனடியாக கலைத்து விட்டு, ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்ற தேர்தலை நடத்துமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார். அதாவது 2020இல் நடக்கவேண்டிய நாடாளுமன்ற தேர்தல்கள் 2020 ஜனவரி 8ஆம் திகதிக்கு முன்னதாக நடத்தப்பட வேண்டும் என்று கேட்கிறார்.
வெறும் மிரட்டலா?
அரசியலமைப்பின்படி உரிய காலத்துக்கு ஒன்றரை வருடங்களுக்கு முன்னதாக மாத்திரமே நாடாளுமன்ற தேர்தல்கள் நடத்தப்பட முடியும். அதற்கும் முன்னதாக நடத்தப்பட வேண்டுமானால், அதற்கு நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வேண்டும்.
தற்போதைய நாடாளுமன்றத்தில் இருக்கும் நிலையை கொண்டு பார்த்தால், உடனடியாக தேர்தலுக்கு போவது மிகவும் சிரமம் என்பது ராஜபக்ஷ அணியினருக்கு நன்றாகத் தெரியும். ஆகவே இப்படியாக கேட்டு அழுத்தம் கொடுப்பதன் மூலம் அரசாங்கத்தை சங்கடத்துக்கு உள்ளாக்கி, ஓரம்கட்டுவதே அவர்களது நோக்கமாக இருக்க வேண்டும் என்று பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.
இனப்பிரச்சினை தீர்வுக்கான நடவடிக்கைகள் தேக்கமடையுமா?
தமிழர் பிரச்சினைக்கான ஒரு தீர்வாக அரசியலமைப்பை மாற்றுவதற்கான நடவடிக்கைகளில் தற்போதைய அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது. இதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் அவர்கள் நெருக்கமாகவும் செயற்பட்டு வருகிறார்கள். தற்போது அது ஒரு இழுபறிநிலையில் இருக்கிறது. ஆனால், இனி அது மேலும் தேக்கத்தை எதிர்கொள்ளும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் சிலர் கூட கவலைப்படுகிறார்கள்.
அதற்கு ஏற்றாற்போலவே இப்போது ராஜபக்ஷவும் கூறியுள்ளார். அதாவது அரசியலமைப்பு மாற்றம் குறித்த நடவடிக்கை எதுவும், தேர்தலுக்கு பின்னரே என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். 'முதலில் தேர்தலை நடத்துவோம்' என்று அது குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார். அதுமாத்திரமல்லாமல் அதனை ஒரு தேர்தல் மூலமே நிர்ணயிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தனக்கு அதிகாரத்தை கைப்பற்றுவதில் அவசரமில்லை என்றிருக்கிறார் ராஜபக்ஷ. ஆனால் மக்கள் அவசரப்படுகிறார்கள் என்கிறார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்