You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பை இந்திய ராணுவத்துடன் ஒப்பிட்டு பேசினாரா மோகன் பகவத்?
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், ராணுவத்துடன் தனது அமைப்பை ஒப்பிட்டு பேசியது சர்ச்சைகளை எழுப்பியிருக்கிறது. பகவத்திற்கு கடுமையான கண்டங்களை தெரிவித்திருக்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
பகவத்தின் பேச்சு, 'ஒவ்வொரு இந்தியனுக்கும் அவமானம்' என்று காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது. சர்ச்சைகள் வலுத்த பிறகு, அதுபற்றி விளக்கம் அளித்திருக்கும் ஆர்.எஸ்.எஸ், பகவத்தின் பேச்சு தவறாக புரிந்துக் கொள்ளப்படுவதாக சொல்கிறது.
மத்திய அரசும் பகவத்தை காப்பாற்றும் விதமாக, 'ராணுவத்தை அரசியலாக்கக்கூடாது' என்று கூறுகிறது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று (திங்கட்கிழமை) வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், ராணுவத்தை அவமானப்படுத்திய பகவத் வெட்கப்படவேண்டும் என்று கூறியிருக்கிறார்.
"ஆர்.எஸ்.எஸ் தலைவரின் பேச்சு, இந்தியாவிற்கே அவமானம். அவர் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தவர்களை அவமதித்திருக்கிறார். நமது தேசியக் கொடிக்கு மரியாதை செய்தவர்களை அவமதித்துள்ளார். வீரர்களையும், ராணுவத்தையும் அவமதித்த பகவத் வெட்கப்படவேண்டும்" என்று ராகுல் காந்தி காட்டமான கண்டனச் செய்தியை வெளியிட்டுள்ளார்.
பகவத் என்ன சொன்னார்?
பிஹார் மாநிலம் முஜாஃப்பர்பூரில் உரையாற்றிய பகவத், "நாம் ராணுவ அமைப்பு கிடையாது. ஆனால், ராணுவத்தில் இருக்கும் கட்டுக்கோப்பும் உறுதியும் நம்மிடம் இருக்கிறது. நாட்டிற்கு தேவை ஏற்பட்டால் நாட்டின் அரசியலமைப்பு, சட்டங்களும் கேட்டுக்கொண்டால் வீரர்களை தயார்படுத்த பொதுவாக ஆறு-ஏழு மாத காலம் எடுக்கும். ஆனால், ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களை மூன்றே நாட்களில் தயார் செய்துவிட முடியும், இது நமது திறமை" என்று பெருமிதமாக முழக்கமிட்டார்.
ஆர்.எஸ்.எஸ்ஸின் விளக்கம்
மோகன் பகவத்தின் கருத்துக்கு எதிர்வினைகளும், விமர்சனங்களும் வலுவடைந்ததும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அது பற்றிய விளக்கம் வெளியிட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
"மோகன் பகவத்தின் உரை தவறாக மக்களின் முன் கொண்டு செல்லப்படுகிறது. அவர் ராணுவத்துடன் எங்கள் அமைப்பை ஒப்பிட்டு பேசவில்லை. பொது சமூகம் மற்றும் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களுடன் ஒப்பீடு செய்தார். இரு தரப்பும் சேர்ந்து ராணுவத்தை உருவாக்கவேண்டும் என்ற பொருளில்தான் அவர் பேசினார்." என்று ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைவர் டாக்டர் மன்மோஹன் வைத்யா இவ்வாறு விளக்கமளித்தார்.
அரசு தரப்பு விளக்கம்
"இந்திய ராணுவம் மரியாதைக்கு உரியது. நெருக்கடி நிலைகளில், (காங்கிரஸின் நெருக்கடி நிலை அல்ல) ஒவ்வொரும் ராணுவத்துக்கு பக்கபலமாக நிற்கவேண்டும். பகவத் சொன்னது இதுதான், பொதுவாக ராணுவத்தை தயார் செய்ய ஆறு முதல் ஏழு மாத காலம் எடுக்கும். ஆனால் அரசியல் சாசனம் அனுமதித்தால் ஆர்.எஸ்.எஸ்ஸின் தொண்டர்கள் அதற்கு பங்களிக்கக்கூடிய திறமை கொண்டவர்கள்." என்று உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தனது ட்விட்டர் செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும், "இந்திய ராணுவத்தின் அதிரடி நடவடிக்கைக்கு (சர்ஜிகல் ஸ்ட்ரைக்) ஆதாரம் கேட்டது யார்? அரசியல் நோக்கத்திற்காக இந்திய ராணுவத்தை பயன்படுத்தாதீர்கள். 2004 ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி, மத அடிப்படையில் ராணுவ வீர்ர்களை கணக்கெடுத்து, ராணுவத்தை பலவீனமாக்கும் முயற்சியில் ஈடுபட்டது, ஆனால் ராணுவம் தனது நிலைப்பாட்டில் உறுதியாக நின்றது." என்றார் அவர்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்