You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரொஹிஞ்சா முஸ்லிம் பெண் மீது பாலியல் வன்முறை: இலங்கை காவலருக்கு விளக்க மறியல்
இலங்கையில் சட்டவிரோத குடியேற்றக்காரர் தடுப்பு முகாமொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ரொஹிஞ்சா முஸ்லிம் பெண்ணொருவர் பாலியல் வன்முறைக்குள்ளானதாக கூறப்படும் சம்பவம் தொடர்புடைய சந்தேக நபரான போலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் வியாழக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக சந்தேக நபரை அன்றைய தினம் அடையாள அணிவ
குப்பில் முன்னிலைப்படுத்துமாறு போலிஸாருக்கு நீதிமன்றத்தால் கட்டளையிடப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் தரப்பு சட்டத்தரனி ஷிராஸ் நூர்தீன் கூறுகின்றார்.
தலைநகர் கொழும்புக்கு வெளியேயுள்ள மீரிகான சட்ட விரோத தடுப்பு முகாமில் நீதிமன்ற உத்தரவின் பேரில் 7 பெண்கள் மற்றும் 16 சிறுவர்கள் உள்ளிட்ட மியான்மர் நாட்டை சேர்ந்த 30 ரோஹிஞ்சா முஸ்லிம் அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் ஒருவரான 22 வயதான பெண்ணொருவர் தனது நோயின் காரணமாக அரச மருத்துவமனையொன்றில் தங்கியிருந்து சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவ்வேளை சிகிச்சை முடிந்து அழைத்துச் சென்ற சந்தர்ப்பத்தில் சந்தேக நபரான குறித்த போலிஸ் கான்ஸ்டபிளால் விடுதியொன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டு தான் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் போலிஸில் முறைப்பாடொன்றை பதிவு செய்திருந்தார்.
சுமார் 5 வருடங்களாக இந்தியாவில் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தின் பராமரிப்பில் புதுடெல்லியிலும் தமிழ் நாடு அதிராம்பட்டினத்திலும் தங்கியிருந்த இவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் 28ம் திகதி தமிழ் நாட்டிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு படகு மூலம் புறப்பட்டுள்ளனர்.
படகு வழி தவறி இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்த நிலையில் 30ம் திகதி காங்கேசன்துறை கடல் பகுதியில் இலங்கை கடற்படையினரால் குறித்த 30 பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் மீரிகான சட்ட விரோத குடியேறிகள் தடுப்பு முகாமில் தற்போது வைக்கப்பட்டுள்ளனர்.
ஐ.நா அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் கண்காணிப்பில் இலங்கையில் தஞ்சம் பெற விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், அகதிகளுக்கான அந்தஸ்து வழங்கும் அனுமதி அட்டை வழங்க ஐ.நா அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தினால் ஏற்கனவே இணக்கம் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாம்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்