நாடகத் தொடராகிறது கெளரவ கொலை செய்யப்பட்ட பாகிஸ்தான் மாடல் அழகி வாழ்க்கை

`பாகி` மூலமாய் மீண்டுவருகிறார் பாகிஸ்தான் விளம்பர நடிகை கந்தீல் பலோச்

பாகிஸ்தானில் சர்ச்சைக்குரிய சமூக ஊடக பிரபலமாக திகழ்ந்த மாடல் அழகி கந்தீல் பலூச், தனது சகோதரரால் கெளரவ கொலை செய்யப்பட்டார். அவரது வாழ்க்கை `பாகி` என்ற பெயரில் தொடர் நாடகமாகிறது. நாடகத் தொடரின் ஃபர்ஸ்ட் லுக் எனப்படும் முதல் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த நாடகத் தொடரில் கந்தீல் பலோச் வேடத்தை நடிகை சபா கமர் ஏற்க, 'ஹிந்தி மீடியம்' திரைப்பட நாயகன் இர்ஃபான் கானும் நாடகத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பார்.

இந்த ஃபர்ஸ்ட் லுக்கில் சபாவுடன், பாகிஸ்தான் நடிகர் சர்மத் குசட் மற்றும் அலி காஜ்மியும் இடம் பெற்றுள்ளனர். சர்மத் இந்தத் தொடரில் கந்தீலின் சகோதரனாகவும், அலி காஜ்மி கந்தீலின் கணவராகவும் நடிக்கின்றனர்.

சபா கமர் திங்களன்று இரவு 'பாகி'யின் டீசரை ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்ட்ராகாமில் பகிர்ந்துக் கொண்டார். இந்த தொடர், 'URDU 1' சேனலில் ஒலிபரப்பாகும்.

'பாகி'யின் கதாசிரியர் என்ன சொல்கிறார்?

த எக்ஸ்ப்ரஸ் டிரிப்யூன் பத்திரிகைக்கு பேட்டியளித்த ஷாஜியா கான் கூறுகிறார், ''இந்தக் கதையை எழுதும்போது, எதற்காக இதை எழுதுகிறேன் என்று நான் ஒருமுறைக் கூட யோசிக்கவேயில்லை. ஏனெனில் இதற்கான பதில் என்னிடம் ஏற்கனவே இருக்கிறது. இந்தக் கதையை பதிவு செய்வது மிகவும் அவசியமானது''.

சிறிய நகரத்தில் பிறந்து வளர்ந்த ஒரு பெண், தன்னுடைய கனவுகளை நிறைவேற்றவும், குடும்பத்திற்கு உதவுவதற்காகவும் வீட்டை விட்டு வேலைக்காக வெளியுலகத்திற்கு வருகிறார்.

''இதுபோன்ற பல கதைகள் இருக்கின்றன, அவை சொல்லப்படாதவை, யாரும் அறியாதவை. அல்லது வெளிப்படாதவை, இவற்றை பதிவு செய்ய விரும்புகிறேன்'' என்று சபா கமர் அண்மையில் 'டான்' பத்திரிகைக்கு கொடுத்த பேட்டியில் தெரிவித்தார்.

கந்தீலின் ஃபர்ஸ்ட் லுக் பற்றி மக்கள் என்ன சொல்கிறார்கள்?

டேனியல் சொல்கிறார், ''சூப்பர், இந்த கதையை திரையில் பார்க்க ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்.''

''கந்தீலின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படும் நாடகத்தில் சபா நடிக்கிறார், சபா திறமையான நடிகை'' என்கிறார் ஷாய்மா.

குடும்பத்தினரே கந்தீலை கொன்றனர்

கடந்த ஜூலை மாதம் கந்தீல் பலோச்சை கழுத்தை நெரித்து கொன்றதாக அவரது சகோதரர் ஒப்புக்கொண்டார். அதற்கு காரணம்? சமூக ஊடகங்களில் தனது புகைப்படங்களையும், வீடியோக்களையும் பலோச் அதிக அளவில் வெளியிட்டுக் கொண்டிருந்தார். குடும்பத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தினார். இதுவொரு கெளரவக் கொலை என்று வழக்கு பதியப்பட்டிருக்கிறது.

பாகிஸ்தானின் இணைய தாரகையாக வர்ணிக்கப்பட்ட மாடல் அழகி கந்தீல் பலோச், இந்திய கிரிகெட் வீரர் விராட் கோஹ்லியிடம் தன்னுடைய காதலை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்:

இதையும் படிக்கலாம்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்