You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை : டெங்கு காய்ச்சலுக்கு அதிகளவில் பாதிப்புக்குள்ளாகும் பள்ளி மாணவர்கள்
இலங்கையில் தீவிரமடைந்து வரும் டெங்கு காய்ச்சலுக்கு பள்ளிக்கூட மாணவர்களும் இலக்காகி வருகின்றனர். இதுவரை ஏற்பட்ட 200 மரணங்களில் 25 சதவீத மரணங்கள் பள்ளிக்கூட மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு கூறுகிறது.
இந்த ஆண்டு இதுவரையில் 64 ஆயிரம் டெங்கு காய்ச்சல் தொற்றுக்குள்ளான நோயாளிகள் இனம் காணப்பட்டுள்ளனர். 20 சதவீதமானோர் பள்ளிக்கூட மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
மாணவர்கள் டெங்கு தொற்றுக்குள்ளாகுவதை தடுக்கும் வகையில் எற்கனவே கல்வி அமைச்சகத்துடன் இணைந்த வேலைத் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவை சேர்ந்த சமூக வைத்திய நிபுணர் டாக்டர் பிரசீல சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வருடம் நாடு முழுவதும் 55 ஆயிரத்து 150 டெங்கு நோயாளிகள் இனம் காணப்பட்டனர். இதில் 97 மரணங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த வருடம் இதுவரையில் 64 ஆயிரம் டெங்கு நோயாளிகள் இனம் காணப்பட்டுள்ள அதேவேளை 200 மரணங்கள் பதிவாகியுள்ளன.
கடந்த வருடத்தில் முதல் 6 மாத காலத்தில் இனம் காணப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 24 ஆயிரம் ஆகும். அந்த எண்ணிக்கை இந்த ஆண்டு 150 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சகத்தின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.
43 சதவீதமான நோயாளிகள் கொழும்பு, கம்பகா மற்றும் களுத்துறை மாவட்டங்களை கொண்ட மேல் மாகாணத்திலே காணப்பட்டுள்ளனர். குறிப்பாக கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 22 சதவீதமான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அனர்த்தங்கள், தொடரும் சீரற்ற கால நிலை காரணமாக இந்த எண்ணிக்கை அதிகரிக்க கூடிய வாய்ப்புகளே காணப்படுவதாகவும் சுகாதார துறை அதிகாரிகளினால் சுட்டிக் காட்டப்படுகின்றது.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்