You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கையில் கைதான ரோகிஞ்சாக்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கக் கோரிக்கை
இலங்கையிலுள்ள தடுப்பு முகாமொன்றில் வைக்கப்பட்டுள்ள ரோகிஞ்சா அகதிகளுக்கு அகதி அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை ஐ. நா அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்திடம் முன் வைக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 30ம் திகதி காங்கேசன்துறை கடல் பகுதியில் இலங்கை கடற்படையினரால் 7 பெண்கள் மற்றும் 16 சிறுவர்கள் உட்பட 30 ரோஹிஞ்சா அகதிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் மீரிகான சட்ட விரோத குடியேறிகள் தடுப்பு முகாமில் தற்போது வைக்கப்பட்டுள்ளனர்.
எந்நேரத்திலும் மியான்மாருக்கு நாடு கடத்தப்படலாம் என்ற அச்சத்திலுள்ள இவர்கள் தமிழ் நாட்டிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு சட்ட விரோதப் பயணம் மேற்கொண்டிருந்த போது இலங்கைக் கடல் எல்லைக்குள் வைத்து கைது செய்யப்பட்டனர்.
இலங்கையில் தஞ்சம் பெற விரும்பும் ரோகிஞ்சா முஸ்லிம் அகதிகளின் கோரிக்கை தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் மற்றும் மூத்த வழக்கறிஞர் சிராஜ் நூர்டின் உள்ளிட்ட மூவர் கொண்ட குழுவொன்று கொழும்பிலுள்ள ஐ.நா அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலய அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்த பேச்சுவார்த்தையின் போது குறித்த அகதிகளுக்கு அகதிகளுக்கான அந்தஸ்து வழங்கும் அனுமதி அட்டை வழங்க இணக்கம் தெரிவிககப்பட்டதாக சிராஜ் நூர்டின் தெரிவிக்கின்றார்.
தடுப்பு முகாமிலுள்ள குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் கல்வி மற்றும் சுகாதாரம் தொடர்பாக இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஐ.நா அதிகாரிகளினால் பதிலளிக்கப்பட்டதாகவும் அவர் கூறுகின்றார்.
சுமார் 5 வருடங்களாக இந்தியாவில் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தின் பராமரிப்பில் புதுடெல்லியிலும் தமிழ் நாடு அதிராம்பட்டினத்திலும் தங்கியிருந்த இவர்கள் கடந்த மாதம் 28ம் திகதி தமிழ் நாட்டிலிருந்து அவுஸ்ரேலியாவிற்கு படகு மூலம் புறப்பட்டுள்ளனர்.
படகு திசை மாறி இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்தபோது இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.
ஐ.நா அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தின் அகதி அந்தஸ்து இவர்களுக்கு கிடைத்திருந்தாலும் இவர்கள் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய ஏனைய விடயங்கள் தொடர்பாக தாங்கள் நீதி அமைச்சு மற்றும் வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளை சந்தித்து பேவிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் குறிப்பிடுகின்றார்.
தொடர்புடைய செய்தி: