கமிலா வலீவா: 15 வயது ரஷ்ய ஃபிகர் ஸ்கேட்டிங் வீராங்கனை ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதி

கமிலா வலீவா

பட மூலாதாரம், Getty Images

ரஷ்யாவின் 15 வயது ஃபிகர் ஸ்கேட்டிங் இளம் வீராங்கனை கமிலா வலீவா, தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதியாகியுள்ளது. எனினும், அவர் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டிருப்பது எதிர்ப்பை கிளப்பியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவும் எழுந்துள்ளது.

ஃபிகர் ஸ்கேட்டிங் பிரிவில் பல உலக சாதனைகளை புரிந்த கமிலா வலீவா, ரஷ்ய மற்றும் ஐரோப்பிய சாம்பியன் போட்டிகளில் வென்றுள்ளார்.

அவருக்கு 15 வயதுதான் ஆகிறது. சில ஊடக சந்திப்புகளில் தனக்கு பிடித்த முயல் பொம்மையுடன் தோன்றியிருக்கிறார்.

குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் கடந்த வாரம் ரஷ்ய அணி வெற்றி பெறுவதற்கு அவர் உறுதுணையாக இருந்தார். ஒலிம்பிக் போட்டியில் குவாட்ரபிள் எனப்படும் கடினமான தாவலை (Jump) நிகழ்த்திய முதல் பெண் ஸ்கேட்டிங் வீராங்கணை என்ற பெயரைப் பெற்றார் கமிலா வலீவா.

ஆனால், அவருக்கு தங்கப் பதக்கம் வழங்கப்படவில்லை. பல்வேறு வதந்திகளுக்குப் பிறகு, அவர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை அவர் பயன்படுத்தியது பரிசோதனையில் உறுதியானது.

எனினும், அவர் தொடர்ந்து போட்டிகளில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விவகாரம், அவரைப் போன்ற இளம் வீராங்கனைகள் குறித்தும், மிக முக்கியமான விளையாட்டு போட்டிகளில் ஊக்கமருந்து பயன்பாடு குறித்த ரஷ்யாவின் கடந்த கால வரலாறு குறித்தும் கேள்விகளை எழுப்பியுள்ளது. ஆனால், பதின்பருவ விளையாட்டு வீராங்கனையான வலீவா, சில மாதங்களுக்கு முன்புதான் சீனியர் பிரிவில் அறிமுகமானது இந்த சர்ச்சையின் மையமாக உள்ளது.

ஒலிம்பிக் சாம்பியனாவது கமிலா வலீவாவுக்கு சிறுவயது கனவை நிறைவேற்றுவதைப் போன்றது. "என்னுடைய மூன்று வயதிலிருந்து என் அம்மாவிடம், 'நான் ஒலிம்பிக் சாம்பியனாக விரும்புகிறேன்!' என கூறி வந்துள்ளேன்" என அவர் தெரிவித்தார்.

டாட்டார்ஸ்டான் மாகாணம் கஜானில் பிறந்த இவர், தன் மூன்று வயதிலிருந்து ஸ்கேட்டிங் விளையாடி வருகிறார். மேலும், பாலே மற்றும் ஜிம்னாஸ்டிக்ஸ் போன்றவற்றிலும் பயிற்சி பெற்று வந்துள்ளார்.

ஆனால், அவருடைய தாய், வலீவா ஒரு விளையாட்டை மட்டும் தேர்ந்தெடுக்க விரும்பினார். எனவே, அவர் ஸ்கேட்டிங் விளையாட்டை தேர்ந்தெடுத்தார். வலீவாவுக்கு ஆறு வயதானபோது அவர்கள் மாஸ்கோவுக்கு இடம்பெயர்ந்தனர்.

கமீலா வலீவா

பட மூலாதாரம், Getty Images

சர்வதேச போட்டிகளில் வென்ற பலருக்கு பயிற்சியளித்த எடெரி தட்பெரிட்ஸ் என்ற பயிற்சியாளரிடம் கமிலா வலீவா பயிற்சி பெற்றார். ஆனால், அவர் தேவையற்ற கடுமையான முறைகளில் பயிற்சி அளிப்பவர் என்ற விமர்சனம் உள்ளது.

அவருடைய முன்னாள் மாணவர்கள் சிலர் முன்கூட்டியே விளையாட்டுகளில் இருந்து ஓய்வு பெற்றனர்.

அப்பயிற்சியாளரிடம் பயிற்சி பெற்றது குறித்து நேர்மறையாக பேசிய வலீவா, ரஷ்ய இதழ் லா பர்சனேவுக்கு அளித்த பேட்டியில், "எடெரி போன்ற பயிற்சியாளர் நமக்கு தேவை" என கூறியிருந்தார்.

விளையாட்டு போட்டிகளில் உயர்ந்த இடத்திற்கு வருவது குறித்தும் வலீவா பகிர்ந்திருக்கிறார்.

"ஃபிகர் ஸ்கேட்டிங் விளையாட்டு மூன்று அல்லது நான்காவது வயதிலேயே தொடங்கிவிட்டது," என அவர் லா பர்சனேவுக்கு தெரிவித்தார்.

"ஒரு சிறுமி முதல்முறையாக வாரத்திற்கு மூன்று முறை பயிற்சி பெற வேண்டும், பிறகு நான்கு முறை, அதன் பின்னர் ஆறு முறை பயிற்சி பெற வேண்டும். இது ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு அல்ல. நான் 12 ஆண்டுகள் பயிற்சி பெற்றேன். பெற்றோர்களுக்கு எந்தவொரு விடுப்போ, பருவ கால விடுமுறையோ கிடையாது. அதாவது, அவர்கள் தங்களின் வாழ்க்கையை முழுமையாக கொடுக்க வேண்டும்." என்றார்.

ஒரு ஜூனியர் போட்டியாளராக அவர் பிக்காசோ ஓவியம் ஒன்றால் ஈர்க்கப்பட்டு, அதிலிருப்பது போன்று ஸ்கேட்டிங்கை செய்தார். இது, பிக்காசோவின் பேத்தி டயானாவிடமிருந்து பாராட்டுச் செய்தியை வரவழைத்தது.

அவரின் அடுத்த நிகழ்ச்சி அவருடைய மறைந்த பாட்டியின் நினைவாக அர்ப்பணிக்கப்பட்டது. தான் ஏன் ஸ்கேட்டிங் செய்கிறேன் என அவர் நினைக்கும்போது ஏற்படும் உணர்வுகள், தான் விளையாடுவதற்கான அதிக ஆற்றலை வழங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தனது வெற்றியால் தன்னை சுற்றி ஏற்பட்ட கவன ஈர்ப்பு தனக்கு சங்கடத்தை ஏற்படுத்துவதாக அவர் ஒப்புக்கொள்கிறார். ஐ.எப்.எஸ் இதழுக்கு அளித்த பேட்டியில், "அதனை நான் அவ்வளவாக விரும்புவதில்லை. ஆனால், அப்படித்தான் இருக்கும் என எனக்குத் தெரியும், அதற்காக நான் தயாராக முயற்சிக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

எனினும், அவர் தன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். ரசிகர்களுள் ஒருவர் அவருக்கு பொமேரியன் நாய்க்குட்டியை அன்பளிப்பாக வழங்கினார்.

ஒலிம்பிக்குக்கு வருவதற்கு முன்பே, கலைத்திறனுடன் மிகவும் கடினமான ஸ்கேட்டிங் அசைவுகளுக்காக, ஃபிகர் ஸ்கேட்டிங் உலகில் அவர் நன்கு அறியப்பட்டவர்.

பயிற்சியாளருடன் வலீவா

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, தமது பயிற்சியாளர் எடெரி தட்பெரிட்ஸ் உடன் வலீவா

பெண்கள் பிரிவில் குவாட்ரபிள் தாவல் மிகவும் அரிதானது. 80களின் இறுதியில்தான் அது ஆடவர் போட்டியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த முறையில் போட்டியாளர்கள் தாவி, ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் நான்கு முறை சுழன்று நிற்க வேண்டும்.

வலீவா அதனை செய்யும்போது, செங்குத்தாக நிலையாக நின்றார். அவர் காற்றில் மிதப்பது போன்று இருந்தது. சயிண்டிஃபிக் அமெரிக்கன் எனும் அறிவியல் இதழுக்கு பயோமெக்கானிஸ்ட் ஜேம்ஸ் ரிச்சர்ட்ஸ் கூறுகையில், இனி எந்தவொரு ஸ்கேட்டரும் காற்றில் சுழல்வது சாத்தியம் என தான் நினைக்கவில்லை என கூறியுள்ளார்.

அதிகம் பயணம் செய்யவும், மொழிகளை கற்கவும், மோட்டார் சைக்கிள் ஓட்டுவதற்கும் நம்பிக்கை கொண்டுள்ளார் வலீவா. தான் ஒரு உளவியலாளர் ஆகலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

"ஆனால், அவையெல்லாம் பின்னர்தான். இப்போது ஃபிகர் ஸ்கேட்டிங் மட்டும்தான்" என, லா பர்சனே இதழுக்கு தெரிவித்தார்.

இந்த வாரம் வலீவா ஒற்றையர் பிரிவில் அனுமதிக்கப்பட்டது ரஷ்யாவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், ஒலிம்பிக் அமைப்புகள் மற்றும் விளையாட்டு வீரர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சிஏஎஸ் எனப்படும் பன்னாட்டு விளையாட்டுக்களுக்கான நடுவர் நீதிமன்றம், அவர் போட்டிகளில் அனுமதிக்கப்பட்டதற்கு அவருடைய வயது ஒரு காரணம் என தெரிவித்துள்ளது. உலக ஊக்கமருந்து தடுப்பு ஆணையம், இந்த நடவடிக்கையால் அதிருப்தியடைந்துள்ளது.

இருப்பினும், வலீவாவுக்கு பரவலாக அனுதாபம் உள்ளது. உலக தடகள குழுவானது, "அவர் ஊக்கமருந்தை பயன்படுத்தியது உறுதியானது, வயது வராத ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததற்கான ஆதாரம். விளையாட்டு வீரர்களைப் பாதுகாக்க வேண்டும், அவர்களை பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது" என தெரிவித்துள்ளது.

ஜெர்மனியின் முன்னாள் பிகர் ஸ்கேட்டிங் வீராங்கணை கேத்தரீனா விட், வலீவாவை இங்கே "குற்றம் சொல்ல முடியாது" என தெரிவித்துள்ளார்.

"ஒரு விளையாட்டு வீரராக நீங்கள் எப்போதும் உங்கள் நம்பிக்கைக்குரியவர்களின் ஆலோசனையை பின்பற்றுகிறீர்கள். இந்த விஷயத்தில் அவர் தன் பயிற்சியாளரையும் மருத்துவக் குழுவையும். பின்பற்றியிருக்கலாம்" என அவர் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளார். "சிறு வயதிலிருந்தே அவர்களை நம்புவதற்கு நீங்கள் கற்பிக்கப்படுகிறீர்கள்" என தெரிவித்துள்ளார்.

"எந்தவொரு ஊக்க மருந்தும் அவர் குவாட் தாவலை நிகழ்த்த உதவியிருக்காது!!!" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: