பாக்ஸிங் டே டெஸ்ட் என்றால் என்ன? அந்தப் பெயர் ஏன் வந்தது?

பரிசு

பட மூலாதாரம், Getty images

படக்குறிப்பு, பரிசு

பாக்ஸிங் டே என்று நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? ஆனால் நீங்கள் கிரிக்கெட் ரசிகராக இருந்தால் பாக்ஸிங் டே டெஸ்ட் என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கக்கூடும். ஒவ்வொரு டிசம்பர் 26ஆம் தேதியும் "பாக்ஸிங் டே" கடைப்பிடிக்கப்படுகிறது.

இது ஏதோ பாக்ஸிங் குறித்த தினமா? என நீங்கள் யோசிக்கலாம்… அதுதான் இல்லை.

பிரிட்டனில் 1800களில் மகாராணி விக்டோரியா அரியணையில் இருந்தபோது இந்த 'பாக்ஸிங் டே' உருவானது.

இந்த தினத்தில் செல்வந்தர்கள், ஏழைகளுக்கு பரிசுகளை பெட்டிகளில் வைத்து வழங்குவர்.

இந்த தினத்தில் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும். மேலும் அவர்களின் எஜமானர்களிடமிருந்து அவர்களுக்கு கிறித்துமஸ் பரிசுப் பெட்டி கிடைக்கும்.

பணியாளர்கள் இந்த பரிசுப் பெட்டியை குடும்பத்தினரிடம் கொடுப்பதற்காக வீடுகளுக்கு செல்வர்.

ஹங்கேரி, ஜெர்மனி, போலாந்து, நெதர்லாந்து போன்ற சில ஐரோப்பிய நாடுகளில் இது இரண்டாம் கிறித்துமஸ் தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்த பாக்ஸிங் டே உருவானதில் தேவாலயங்களுக்கும் பங்குண்டு. வருடம் முழுவதும் தேவாலயத்திற்கு வருபவர்களிடம் பணம் பெற்று கிறித்துமஸ் தினத்தின் அடுத்த நாளில் ஏழைகளுக்கு தானமாக பரிசுகள் வழங்கப்படும்.

இந்த பணம் அதற்கான பெட்டியில் சேமிக்கப்படும். இப்போது பெட்டிகள் இல்லாமல் போனாலும், கிறிஸ்துமஸ் தினத்திற்கு முன்னதாக ஊழியர்களுக்கு பணம் வழங்குவதை சிலர் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

குதிரை சவாரி

பட மூலாதாரம், Getty images

படக்குறிப்பு, குதிரை சவாரி

பாக்ஸிங் டே என்றால் என்ன?

இந்த பாக்ஸிங் டே என்பது பிரிட்டனுடன் தொடர்புடைய ஒன்றாக உள்ளது.

பிரிட்டனில் இது பொதுவிடுமுறை நாள்.

டிசம்பர் 26ஆம் தேதி சனிக்கிழமையாக இருந்தால் திங்களன்று விடுமுறை. ஞாயிறன்று வந்தால் செவ்வாயன்று விடுமுறை.

இந்த பாக்ஸிங் டே என்பது மதத்துடன் தொடர்புடைய நாளாகாவும் உள்ளது. அயர்லாந்து மற்றும் ஸ்பெயினின் கேட்டலோனியா பிராந்தியத்தில் இது செயின்ட் ஸ்டீஃபென்ஸ் தினமாக கொண்டாடப்படுகிறது.

பாக்ஸிங் டே வழக்கங்கள்

தற்போது கிறிஸ்துமஸ் நாளில் கால்பந்து போட்டிகள் நடைபெறுவதில்லை.

ஆனால் தொலைக்காட்சி இல்லாத நாட்களில் டிசம்பர் 25 பெரும் போட்டிகள் நடைபெறும். பிரிட்டனில் பார்வையாளர்கள் கையுறைகளையும், தலையில் தொப்பியையும் அணிந்து கொண்டு கால்பந்து ஆட்டத்தை காண மைதானத்தில் கூடுவர்.

ஆனால் இந்த வழக்கம் 1950களில் மாறியது.

கடைசியாக கிறிஸ்துமஸ் தின கால்பந்து போட்டி, 1957ஆம் ஆண்டு நடைபெற்றது.

ஆனால் பாக்ஸிங் டேவில் கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் இந்த தினத்தில் நடத்தப்படும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் ’பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி’ என அழைக்கப்படும். இந்த போட்டிகள் குறிப்பாக ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் மைதானத்தில் நடைபெறும். தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து போன்ற காமன்வெல்த் நாடுகளிலும் இந்த போட்டி நடத்தப்படும்.

எனவே ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் சனிக்கிழமை நடைபெறும் இந்தியா – ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான போட்டி பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி என்று அழைக்கப்படுகிறது.

சிவப்பு நிற மேல் அங்கிகளை அணிந்து கொண்டு வேட்டை நாய்கள் சூழ குதிரை சவாரி செய்வது இந்த தினத்தோடு தொடர்புடைய ஒன்று. தற்போது ஓநாய் வேட்டை தடை செய்யப்பட்டுவிட்டதால் குதிரை சவாரிகள் மட்டும் மேற்கொள்ளப்படுகின்றன. ஆங்காங்கே கால்பந்து போட்டிகளும் இந்த நாளில் பழைய நினைவுகளின் எச்சமாக நடைபெறுகின்றன.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :