You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஐபிஎல் 2020 DC vs MI: டெல்லியை வீழ்த்தி மீண்டும் முதலிடத்துக்கு சென்றது மும்பை
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியனான மும்பை அணி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த டெல்லி அணிக்கெதிரான போட்டியில் வென்றதன் மூலம் மீண்டும் புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளது.
அபுதாபியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற போட்டியில் டெல்லி அணியை ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வென்றது.
முன்னதாக விளையாடிய டெல்லி அணி மும்பைக்கு 163 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்திருந்தது. போட்டியில் வெறும் இரண்டு பந்துகளே எஞ்சியிருந்த நிலையில் வெற்றி இலக்கை எட்டியது மும்பை அணி.
மும்பை அணியை பொறுத்தவரை, தொடக்க ஆட்டக்காரரான குயின்டன் டி காக் மற்றும் சூர்ய குமார் ஆகியோர் தலா 53 ரன்களை அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். டெல்லி அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை, காகிசோ ரபாடா 28 ரன்களை விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். குயின்டன் டி காக் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதன் மூலம், நடப்பு தொடரில் ஐந்தாவது வெற்றியை மும்பை அணி பதிவு செய்துள்ளது. டெல்லி அணியும் ஐந்து வெற்றிகளை பெற்றிருந்தாலும், ரன் ரேட் அடிப்படையில் மும்பை அணி முதலிடத்தை பிடித்துள்ளது.
ஏமாற்றிய ரோகித் சர்மா, கைகொடுத்த டி காக்
இந்த போட்டியில் மும்பை அணியின் தொடக்கம் சரியாக அமையவில்லை. 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் குயின்டன் டி காக் ஆகியோர் களமிறங்கினர். எதிரணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள திணறிய ரோகித் 12 பந்துகளுக்கு 5 ரன்கள் மட்டுமே எடுத்து அக்ஷர் பந்தில் ஆட்டமிழந்தார்.
இதன்பிறகு, டி காக் மற்றும் சூர்ய குமார் ஆகியோர் இணை சீரான இடைவெளியில் ரன்களை குவித்து அணியின் ரன் ரேட்டை உயர்த்தி டெல்லி அணியின் பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுத்தனர். முதற்கட்டத்தில், சூர்ய குமார் சற்றே நிதானமாக ஆட, மறுமுனையில் ரன் குவிப்பில் தீவிரம் காட்டிய டி காக் 33ஆவது பந்தில் அரைசதத்தை எட்டினார். ஆனால், அடுத்த ஓவரிலேயே அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். 36 பந்துகளை சந்தித்திருந்த அவர் நான்கு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்களுடன் 53 ரன்களை குவித்திருந்தார். இந்த கட்டத்தில் எஞ்சிருந்த 10 ஓவர்களில் மும்பை அணிக்கு 85 ரன்கள் தேவைப்பட்டன.
வெற்றிடத்தை நிரப்பிய சூர்ய குமார்
டி காக் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியபோது அவருக்கு ஒத்துழைப்பு அளித்த சூர்ய குமார், டி காக் ஆட்டமிழந்த பிறகு அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இஷான் கிஷனுடன் இணை சேர்ந்த அவர் போட்டியின் 13ஆவது ஓவரில் அக்ஷர் பட்டேலின் பந்துவீச்சில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை விளாசினார். மறுமுனையில், மார்கஸ் ஸ்டோய்னிஸ் பந்துவீச்சில் தலா ஒரு சிக்ஸர் மற்றும் பவுண்டரியை இஷான் தன் பங்குக்கு விளாசினார்.
இதனால், வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் தொடர்ந்து மும்பை அணியின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. இதன்மூலம், 30ஆவது பந்தில் அரைசதத்தை எட்டிய சூர்ய குமார், அதே ஓவரில் ரபாடாவிடம் ஆட்டமிழந்தார். 32 பந்துகளை சந்தித்திருந்த அவர் ஆறு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 53 ரன்களை எடுத்திருந்தார்.
15 ஓவர்கள் முடிவில் மும்பையின் அணி மூன்று விக்கெட்டு இழப்புக்கு 130 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி ஐந்து ஓவர்களில் மும்பை வெற்றி பெற 33 ரன்கள் தேவைப்பட்டன.
பரபரப்பான ஆட்டத்தில் மும்பை வெற்றி
அடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா வந்த வேகத்தில் ஸ்டோய்னிஸ் பந்துவீச்சில் ஆட்டமிழக்க போட்டியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
எனினும், போதிய பந்துகள் மீதமிருந்ததால், தைரியமாக விளையாடிய இஷான் அந்த ஓவரில் பவுண்டரி ஒன்றை அடிக்க, 16ஆவது ஓவரில் மட்டும் ஏழு ரன்கள் சேர்க்கப்பட்டன.
இதையடுத்து, இஷானும், போலார்டும் ஓவருக்கு ஒரு பவுண்டரி அடிக்க கடைசி மூன்று ஓவர்களில் 18 ரன்கள் தேவைப்பட்டது.
ரபாடா வீசிய 18ஆவது ஓவரில் இஷான் சிக்ஸர் அடிக்க 16 பந்துகளில் 11 ரன்கள் என்று இலக்கு குறைந்து கொண்டே வந்தது. ஆனால், அடுத்த பந்திலேயே இஷான் ஆட்டமிழந்தார். சிக்கலான கட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 15 பந்துகளில் தலா இரண்டு பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களுடன் 28 ரன்களை குவித்திருந்தார்.
கடைசி 12 பந்துகளில் 10 ரன்கள் அடிக்க வேண்டியிருந்த நிலையில், களத்தில் போலார்ட் மற்றும் க்ருணால் பாண்டியா ஆகியோர் இருந்தனர். 19-வது ஓவரில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய நோர்க்கியா மூன்று ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்திருந்தார்.
கடைசி ஓவரில் மும்பை அணியின் வெற்றிக்கு ஏழு ரன்கள் தேவை என்ற பரபரப்பான கட்டத்தில், ஸ்டோய்னிஸ் வீசிய முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி மும்பை அணிக்கு நம்பிக்கையளித்தார் பாண்டியா.
ஐந்து பந்துகளில் மூன்று ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், அடுத்த இரண்டு பந்துகளில் இரண்டு ரன்கள் எடுக்க, 4-வது பந்தில் மீண்டும் பவுண்டரி அடித்து மும்பை அணியின் வெற்றியை உறுதிசெய்தார் க்ருணால் பாண்டியா.
இதன் மூலம், பரபரப்பான ஆட்டத்தில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றியை பதிவு செய்தது.
முன்னதாக, விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளுக்கு 162 ரன்கள் எடுத்தது. டெல்லி அணியில் அதிகபட்சமாக ஷிகர் தவான் ஆட்டமிழக்காமல் 69 ரன்கள் எடுத்திருந்தார். அவர் 52 பந்துகளை எதிர்கொண்டு ஆறு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடித்தார்.
அடுத்ததாக, டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 42 ரன்கள் எடுத்திருந்தார். தவானும் ஸ்ரேயாஸூம் இணைந்து 62 பந்துகளில் 85 ரன்கள் குவிந்திருந்தனர். ரிஷப் பந்திற்கு பதிலாக இந்த போட்டியில் களமிறங்கிய அலெக்ஸ் கேரி, ஒன்பது பந்துகளில் ஆட்டமிழக்காமல் 14 ரன்கள் எடுத்தார்.
தொடக்க ஆட்டக்காரர் பிருத்வி ஷா (4 ரன்கள்), அஜிங்க்யா ரஹானே (15 ரன்), மார்கஸ் ஸ்டோய்னிஸ் (13 ரன்) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
மும்பை அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை, க்ருணால் பாண்டியா 26 ரன்களை விட்டுக்கொடுத்து, இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜஸ்பிரீத் பும்ரா, ராகுல் சாஹர் ஆகியோரும் பெரியளவில் ரன்களை விட்டுக்கொடுக்கவில்லை. பும்ரா நான்கு ஓவர்களில் 26 ரன்களும், சாஹர் நான்கு ஓவர்களில் 27 ரன்களும் விட்டுக்கொடுத்தனர்.
ரோகித் சர்மாவுக்கு சிறப்பு வாய்ந்த போட்டி
மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா இந்த போட்டியில் சோபிக்க தவறினாலும், இது அவருக்கு ஒரு சிறப்புமிக்க போட்டியாக அமைந்தது என்று கூறலாம்.
2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்டது முதல் அடுத்த இரண்டாண்டுகளுக்கு ஹைதராபாத் டெக்கான் சார்ஜஸ் அணிக்காக விளையாடிய ரோகித் 2011ஆம் ஆண்டுதான் மும்பை அணிக்காக விளையாட தொடங்கினார். இந்த நிலையில், மும்பை அணிக்காக ரோகித் களமிறங்கும் 150ஆவது போட்டியாக நேற்றைய ஆட்டம் அமைந்தது. இதை குறிக்கும் வகையில், அவர் வழக்கமான அணியும் 45 என்ற எண் கொண்ட சட்டைக்கு பதில் 150 என்ற எண் குறிக்கப்பட்ட சட்டையை இந்த போட்டியில் அணிந்திருந்தார். இதை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தனது ட்விட்டரில் பதிவில் வெளியிட்டிருந்தது.
ரோகித் சர்மா தலைமையில், மும்பை இந்தியன்ஸ் அணி 2013, 2015, 2017 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் ஐ.பி.எல் தொடரை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: