You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குஷ்பு சோனியா காந்திக்கு கடிதம்: 'காங்கிரஸ் உடனான உறவை முறித்துக் கொள்கிறேன்' - பாஜகவில் இணைவதாக தகவல்
நடிகை குஷ்பு பாரதிய ஜனதா கட்சியில் இன்று இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்படுவதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி இன்று அறிவித்துள்ளது.
இதனிடையே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ள குஷ்பு தாம் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
இதனிடையே "குஷ்பு காங்கிரசில் இருந்து விலகுவதால் காங்கிரசுக்கு எந்த இழப்பும் இல்லை. குஷ்புவை பாஜகவினர் யாரும் அழைக்கவில்லை, அவரே தான் பாஜகவுக்கு செல்கிறார். குஷ்பு கட்சியில் இருந்த போதும் கொள்கை பிடிப்புடன் செயல்படவில்லை," என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
குஷ்பு காங்கிரசில் இருந்து விலக என்ன காரணம்?
2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மிகப்பெரிய தோல்வியை அடைந்த சமயத்தில் தாம் காங்கிரஸ் கட்சியில் இணைந்ததாக தெரிவித்துள்ள குஷ்பு, பணம், பெயர் அல்லது புகழுக்காக தாம் காங்கிரஸில் சேரவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் உயர் மட்டத்திலுள்ள, கள நிலவரத்துடன் தொடர்பில்லாத மற்றும் பொது மக்களால் பெரிதும் அங்கீகரிக்கப்படாத சிலர் கட்சிக்காக உண்மையாக உழைக்க விரும்பும் தம்மை போன்றவர்களை நசுக்க விரும்புவதாக அக்கடிதத்தில் குஷ்பு குற்றம்சாட்டியுள்ளார்.
இதன் காரணமாக கட்சியுடனான தொடர்பை தான் முறித்துக் கொள்வதாகவும் ராகுல் காந்தி உள்ளிட்ட அனைவருக்கும் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவிப்பதாகவும் குஷ்பு தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த காங்கிரஸ் கட்சியின் போராட்டம் ஒன்றில் பங்கேற்று ஆவேசமாக பேசிய குஷ்பு, பாஜகவில் இணைய உள்ளதாக வெளியாகியுள்ள தகவலை மறுத்திருந்தார்.
தாம் காங்கிரஸில் இருந்து விலகுவதாகப் பரவும் தகவல் தவறானது எனவும் அவர் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.
கடந்த வாரம் டெல்லி சென்று திரும்பிய குஷ்பு, நேற்று இரவு மீண்டும் டெல்லி கிளம்பினார்.
இன்று குஷ்பு, அவரது கணவர் சுந்தர். சி உள்ளிட்ட சிலர் பாஜகவில் இணைவார்கள் என்று தெரிகிறது.
பிற செய்திகள்:
- "பாலியல் தொழிலாளர்களுக்கும் சலுகைகள்" - தேசிய மனித உரிமைகள் ஆணையம்
- அமெரிக்க அதிபர் தேர்தல்: முக்கிய கேள்விகள், முழுமையான பதில்கள்
- கொரோனா வைரஸ்: குணமடைய சிலருக்கு தாமதம் ஆவது ஏன்?
- ஹாத்ரஸ் வழக்கு: காவல்துறையின் அமைப்பு முறையில் சாதிய வேறுபாடுகள்
- உலகில் மிகவும் ஒடுக்கப்பட்டவர்களாக இருக்கும் தலித் பெண்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: