You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஹாத்ரஸ் வழக்கு: உலகில் மிகவும் ஒடுக்கப்பட்டவர்களாக இருக்கும் தலித் பெண்கள்
- எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
- பதவி, பிபிசி இந்தியா
``நாங்கள் ஏழைகளாக, கீழ் சாதியினராக, பெண்களாக இருப்பதால் எல்லோரும் எங்களை இழிவாகப் பார்க்கிறார்கள், நாங்கள் தான் எல்லா வன்முறைகளிலும் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறோம்'' என்று சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெய்ஸ்ரீ மங்குபாய் என்ற ஆராய்ச்சியாளரிடம் தலித் பெண் ஒருவர் கூறினார். ``எங்களுக்கு உதவ அல்லது எங்களுக்காகக் குரல் கொடுக்க யாரும் இல்லை. எங்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாது என்பதால், அதிக பாலியல் வன்முறைகளை நாங்கள் எதிர்கொள்கிறோம்'' என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த வாரம், 19 வயது தலித் பெண் (தலித்கள் ஒரு காலத்தில் ``தீண்டத்தகாதவர்கள்'' என குறிப்பிடப்பட்டனர்) உத்தரப்பிரதேசத்தில் மேல்சாதி கும்பலால் கூட்டு பாலியல் வன்முறைக்கு ஆளாக்கி தாக்கப்பட்டார் என்று கூறப்பட்டது. இது அந்த மாநிலத்தில் நடந்த மேலும் ஒரு சம்பவமாக அமைந்தது.
இந்தியாவில் வாழும் 80 மில்லியன் தலித் பெண்கள் எதிர்கொள்ளும் பரவலான பாலியல் வன்முறைகள் குறித்த கவனத்தை ஈர்ப்பதாக இந்தச் செய்தி அமைந்தது. வளைந்து கொடுக்காத, கடுமையான சாதிய ஆதிக்கத்தின் காரணமாக கீழ்நிலையில் உள்ள தங்கள் சாதி ஆண்களைப் போலவே இந்தப் பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்திய பெண்களில் தலித் பெண்கள் 16 சதவீதம் பேர் உள்ளனர்.
பாலின பாகுபாடு, சாதிய பாகுபாடு மற்றும் பொருளாதார ரீதியில் ஒடுக்கப்பட்டவர்கள் என்ற ``மூன்று தாக்குதல்களுக்கு'' இவர்கள் இலக்காகி உள்ளனர். ``உலகில் மிகவும் ஒடுக்கப்பட்ட பெண்களாக தலித் பெண்கள் உள்ளனர்'' என்று சாதி முக்கியமானது (Caste Matters) புத்தகத்தை எழுதிய டாக்டர் சூரஜ் யெங்டே கூறுகிறார்.
``கலாசாரங்கள், கட்டமைப்புகள், அமைப்பு முறைகளால் வெளியிலும், உள்ளும் காணப்படும் அடக்குமுறைக்கு அந்தப் பெண் இரையாகியுள்ளார். தலித் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இதனால் தொடர்ந்து அதிகரிக்கின்றன'' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு தலித் பெண் தாக்கப்படும்போது வழக்கமாக கையாளப்படும் அதே பாணியில், உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் சம்பவத்திலும் கையாளப்பட்டது: புகாரை பதிவு செய்வதில் காவல் துறையினர் தாமதம்; மெதுவாக நடந்த விசாரணை; அது பாலியல் வன்முறையா என அதிகாரிகள் சந்தேகம் எழுப்புவது; சாதிக்கும் சம்பவத்துக்கும் தொடர்பில்லை என்று கூறுவது; வன்முறைக்குக் காரணமான உயர்சாதி பிரிவினருக்கு சாதகமாக அதிகாரிகள் கூட்டு சேர்ந்து செயல்படுவது போன்ற அதே பாணியில் நடவடிக்கைகள் இருந்தன. மேல்சாதி செய்தியாளர்கள் ஆதிக்கம் மிகுந்த தொலைக்காட்சிகளின் செய்திகளிலும்கூட, பாலியல் வன்முறையை ஏன் சாதியுடன் இணைத்துப் பேச வேண்டும் என்று கேள்விகள் எழுப்பப்பட்டன.
வேறு வகையில் சொல்வதானால், இந்தியாவில் அரசும், சமூகத்தில் சில பகுதியினரும், பாலியல் வன்முறைக்கு உள்ள தொடர்புகளை அழிக்க, அந்த வன்முறை குறித்த செய்திகளை மறைக்க மற்றும் சாதிய ஆதிக்கத்தை மறைக்க சதிச் செயலில் ஈடுபடுகின்றன.
ஹாத்ரஸில் கடந்த வாரம் பாலியல் வன்முறை சம்பவம் நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தபிறகு, ஆளும் பாஜகவின் மேல்சாதியினர், உயிரிழந்த பெண்ணின் சடலத்தை இரவோடு இரவாக தகனம் செய்தது. எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளும், ஊடகத்தினரும், அந்தப் பெண்ணின் கிராமத்தினருக்குச் செல்லவும், அவருடைய குடும்பத்தினரை சந்திக்கவும் சில நாட்கள் தடை விதித்தது.
விஷயத்தை மூடி மறைக்க அரசு முயற்சிக்கிறது என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்தியது. அந்தச் சம்பவம் பாலியல் வன்முறை அல்ல என்ற தனது நிலைப்பாட்டை ஊடகங்களுக்கு விவரிக்க, முன் எப்போதும் இல்லாத வகையில் தனியார் செய்தித் தொடர்பு நிறுவனத்தை மாநில அரசு பணிக்கு அமர்த்தியது.
இந்தியாவில் கிராமப் பகுதிகளில் நீண்ட நெடுங்காலமாகவே தலித் பெண்கள், பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு வருகிறார்கள். பெரும்பாலான நிலங்களின் உரிமைகள், வளங்கள், சமூக அதிகாரங்கள் மேல்சாதி மற்றும் இடைப்பட்ட சாதியினரிடம் இருக்கின்றன. தலித் சமூகத்தினருக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்க 1989-ல் சட்டம் உருவாக்கப்பட்டாலும், தலித் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறையவில்லை.
தலித் பெண்கள் தொடர்ந்து அடக்குமுறைகளுக்கு ஆளாக்கப்பட்டு, பாலியல் சீண்டல்களுக்கு ஆளாக்கப்பட்டு, பாலியல் வன்முறைகளுக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். கடந்த ஆண்டுக்கான அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி இந்தியாவில் ஒரு நாளுக்கு 10 தலித் பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு ஆளாகியுள்ளதாகத் தெரிய வருகிறது.
வடக்கில் உள்ள உத்தர பிரதேச மாநிலத்தில் தான் பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் சிறுவயதுப் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்கள் மிக அதிகமாக உள்ளன. உத்தரப் பிரதேசம், பிஹார், ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்களில் தான் தலித்களுக்கு எதிரான வன்முறைகளில் பாதிக்கும் மேலான சம்பவங்கள் நடந்துள்ளன.
2006 ஆம் ஆண்டில், 4 மாநிலங்களைச் சேர்ந்த 500 தலித் பெண்களிடம் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. தாங்கள் சந்திக்கும் வன்முறைகள் பற்றி அவர்களிடம் கேட்கப்பட்டது. தாங்கள் உடல் ரீதியில் தாக்கப்பட்டதாக 54 சதவீதம் பேர் கூறினர். பாலியல் கொடுமைகளுக்கு ஆளானதாக 46 சதவீதம் பேர் கூறினர். குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டதாக 43 சதவீதம் பேர் தெரிவித்தனர். 23 சதவீதம் பேர் பாலியல் வன்முறைக்கு ஆளாகி இருந்தனர். 62 சதவீதம் பேர் அவதூறு பேச்சுகளுக்கு ஆளாகியிருந்தனர் என அந்த ஆய்வில் தெரிய வந்தது.
எல்லா சாதிகளையும்விட தலித் பெண்கள் தான் வன்முறையில் பெரும் பகுதியை சந்திக்கின்றனர். இந்தியாவில் 16 மாவட்டங்களில் தலித் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான 100 பாலியல் வன்முறை சம்பவங்கள் குறித்து தலித் உரிமைகள் மையம் என்ற குழு ஆய்வு நடத்தியது. 2004 முதல் 2013 வரையிலான காலத்தில் நடந்த சம்பவங்கள் இதில் ஆய்வு செய்யப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்களில் 46 சதவீதம் பேர் 18 வயதுக்கும் குறைவானவர்கள் என்றும், 85 சதவீதம் பேர் 30 வயதுக்கும் குறைவானவர்கள் என்றும் அதில் தெரிய வந்தது. இந்த வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் 36 வெவ்வேறு சாதியினராக இருந்தனர். அதில் தலித் சமூகத்தவர்களும் இருந்தனர். தலித் பெண்கள் உரிமைகளுக்காகப் பேசத் தொடங்கிவிட்டனர் என்பது தான், அவர்கள் பெருமளவு பாதிக்கப் படுவதற்குக் காரணமாக உள்ளது என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டது.
தலித் பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த வரலாறு 2006 ஆம் ஆண்டில் தான் மாறியது. நீண்ட காலமாக இருந்து வந்த நிலத் தகராறு காரணமாக, தலித் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் - ஒரு பெண், அவருடைய 17 வயது மகள் மற்றும் இரண்டு மகன்கள் அப்போது கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். மகாராஷ்டிரா மாநிலம் காயிர்லாஞ்சி என்ற தொலைதூர கிராமத்தில் அந்தச் சம்பவம் நடந்தது.
தங்கள் கிராமத்தில் நிலத் தகராறில் ஈடுபடுவதாக மேல்சாதியினருக்கு எதிராக காவல் துறையில் 2 பெண்கள் புகார் கொடுத்ததைத் தொடர்ந்து அந்தச் சம்பவம் நடந்தது. ``அந்த கொடூரமான சம்பவம் தலித்களின் மனசாட்சியை தட்டி எழுப்புவதாக இருந்தது. சமூகத்தில் தங்களுக்கு எதிரான பாகுபாடு பற்றி அது விழிப்பை ஏற்படுத்தியது'' என்று வரலாற்றாளர் உமா சக்ரவர்த்தி கூறியுள்ளார்.
தலித்கள் உறுதியான எதிர்ப்பு காட்டுவதும், அவர்கள் எதிர்வினை ஆற்றுவதும் மேல்சாதியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் நடந்த ஹாத்ரஸ் சம்பவத்தில், மேல்சாதி குடும்பத்தினருடன் சுமார் 20 ஆண்டு காலமாக, அந்தப் பெண்ணின் குடும்பத்தாருக்கு தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
சமூக சீர்திருத்தங்கள் காரணமாக இப்போது தலித் பெண்கள் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பப் படுகின்றனர். தங்களுக்காக தலித் பெண்களும், பெண்ணிய அமைப்புகளும் குரல் கொடுக்கின்றனர். ``முன் எப்போதும் இல்லாத அளவில், தலித் பெண்களுக்கான உறுதியான தலைமைகள் உருவாகி, யாருடைய தலையீடும் இல்லாமல் போராட்டங்களை நடத்துகின்றனர்'' என்கிறார் டாக்டர் யெங்டே.
தலித் பெண்கள் எதிர்த்துப் போராடுகிறார்கள். அதற்கான எதிர்வினை முன் எப்போதையும்விட கொடூரமானதாக இருக்கிறது. ``முன்னர் வன்முறைகள் வெளியில் தெரியாது, பதிவு செய்யப்படாது'' என்று மஞ்சுளா பிரதீப் என்ற தலித் உரிமை இயக்கவாதி கூறுகிறார். ``இப்போது வன்முறைகள் வெளியில் தெரிகின்றன. நாங்கள் வலுவாக, உறுதியாக இருக்கிறோம். இப்போது நடக்கும் பல வன்முறைகள், எங்களுடைய எல்லைகளை எங்களுக்கு நினைவூட்டுபவையாக உள்ளன'' என்று அவர் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: