புதிய வகை டைனோசர்: பற்கள் இல்லாத, உடல் முழுவதும் இறகுகள் கொண்ட இரு விரல்கள் மட்டுமே கொண்ட இனம் கண்டுபிடிப்பு மற்றும் பிற செய்திகள்

பற்கள் இல்லாத வெறும் இரு விரல்களை மட்டுமே கொண்ட டைனோசர் இனம் மங்கோலியாவில் உள்ள கோபி பாலை வனப் பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது.

ஓக்சோகோ அவர்சன் என்று பெயர்கொண்ட இந்த இன டைனோசர்களின் எலும்புக் கூடுகளை எடின்பரோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இறகுகள் கொண்ட இந்த டைனோசர்கள், பற்கள் இல்லாத பெரிய அலகுகளை கொண்டவை.

இந்த விலங்கினம் 100மில்லியன் வருடங்களுக்கு முன் வாழ்ந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்த ஆராய்ச்சி, பரிணாம வளர்ச்சியில் விலங்குகள் எப்படி தங்கள் விரல்களை இழந்தன என்பது கண்டறியப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு மீட்டர் நீளம் கொண்ட இந்த விலங்குகளுக்குக் கிளியின் அலகு போன்ற அலகு இருக்கும்.

தற்போது கிடைத்துள்ளன எலும்புக்கூடுகள் பெரும்பாலும் முழுமையானதாக உள்ளது.

மேலும் கண்டறியப்பட்ட சிறு டைனோசர்களின் எலும்புக்கூடுகள் ஒன்றிற்கு மேற்பட்டதாக ஒரே இடத்தில் காணப்பட்டது.

எனவே இந்த விலங்கினம் சிறு வயதில் கூட்டமாகச் சுற்றித் திரிந்துள்ளது என்பதைக் காட்டுகிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

அதிமுக ஒபிஎஸ், ஈபிஎஸ் சமரசம்: காலையில் உடன்பாடு, மாலையில் சந்திப்பு

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆளும் அஇஅதிமுகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தற்போதைய முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் வீட்டிற்கு புதன்கிழமை மாலையில் சென்று நன்றி தெரிவித்தார். மேலும் தேர்தலில் வெல்ல கடுமையாக உழைக்க தொண்டர்களுக்கும் அவர் கடிதம் வாயிலாக அழைப்பு விடுத்துள்ளார்.

அஇஅதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி கே. பழனிச்சாமி செப்டம்பர் 7ஆம் தேதி காலையில் அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் மாலை ஆறு மணியளவில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் இல்லத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்றார்.

அவருடன் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி , சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் வந்திருந்தனர். இந்தச் சந்திப்பின்போது வைத்திலிங்கம், முனுசாமி, மனோஜ் பாண்டியன், ப.மோகன், மாணிக்கம் உள்ளிட்டோரும் இருந்தனர்.

இந்த நிலையில், முதலமைச்சரும் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான கே. பழனிசாமி தொண்டர்களுக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

"விடுதலைப்புலிகள்" பிரபாகரன் மகன், மனைவி பயங்கரவாதிகளா

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன், விடுதலைப் புலிகள் அமைப்பின் சிறுவர் படையணியின் பிரதான கட்டளை அதிகாரியாக செயல்பட்டார் என முன்னாள் இராணுவ தளபதி ஃபீல்ட் மார்ஷல் சரத் ஃபொன்சேகா வெளியிட்ட கருத்து, சர்வதேச ரீதியில் மிகப்பெரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனிற்கு உணவு, தண்ணீர் வழங்கி, அவரை இலங்கை இராணுவமே சுட்டுக் கொலை செய்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் நாடாளுமன்றத்தில் குற்றம்சாட்டினார். அப்போது அவையில் பேசிய சரத் ஃபொன்சேகா பாலச்சந்திரன் தொடர்பாக சில கருத்துகளை பதிவு செய்தார்.

"தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட அவரது இளைய மகன் பிரபாகரன் பாலச்சந்திரன் வரையான குடும்பத்திலுள்ள எவருமே அப்பாவிகள் கிடையாது" என அவர் குறிப்பிட்டார்.

நரேந்திர மோதியின் 20 ஆண்டுகால ஆட்சி அதிகாரம்

#20thYearOfNaMo - இந்த பெயரில் ஒரு ஹேஷ்டேக் செப்டம்பர் 7ஆம் தேதி காலை முதல் டிவிட்டரில் டிரெண்டிங்கில் இருக்கிறது.

அதற்கு காரணம், இன்றில் இருந்து சரியாக 20 ஆண்டுகளுக்கு முன்பு 2001ஆம் ஆண்டில் நரேந்திர மோதி, குஜராத் மாநிலத்தின் முதல்வராக அரசியல் அதிகார தலைமை இருக்கையில் முதல் முறையாக அமர்ந்தார்.

அப்படியென்றால், சரியாக 19 ஆண்டுகள் கடந்த நிலையில், மூன்று முறை குஜராத் முதல்வராகவும் அதன் தொடர்ச்சியாக இந்திய பிரதமர் பதவியிலும் நரேந்திர மோதி அமர்ந்து இப்போது இருபதாவது ஆண்டை எட்டியிருக்கிறார்.

நரேந்திர மோதி, குஜராத் மாநில முதல்வராக 2001, அக்டோபர் 7ஆம் தேதி பதவியேற்றார்.

அவர் பதவியேற்ற அந்த ஆண்டில்தான் குஜராத்தின் புஜ் பகுதியில் சுமார் 20 உயிர்களை பலி கொண்ட மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தக் கூடிய பூகம்பம் ஏற்பட்டது.

கீட்டோ உணவு முறை என்றால் என்ன, அது மரணத்தைக் கூட ஏற்படுத்துமா?

இந்தி மற்றும் வங்க மொழி திரைப்பட நடிகை மிஷ்டி முகர்ஜி சிறுநீரக செயலிழப்பு காரணமாக வெள்ளிக்கிழமை காலமானார். 27 வயதான அந்த நடிகை கீட்டோ டயட்டில் இருந்ததாகவும் அவரது உடல்நிலை மோசமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

"பல படங்கள் மற்றும் இசை வீடியோக்களில் தனது நடிப்பின் மூலம் திறமையைக் காட்டிய நடிகை மிஷ்டி முகர்ஜி, இப்போது நம்மிடையே இல்லை. கீட்டோ டயட் காரணமாக, அவரது சிறுநீரகம் செயலிழந்தது.

பெங்களூருவில், வெள்ளிக்கிழமை இரவு அவர் காலமானார். அவர் மிகுந்த வேதனையில் இருந்தார். இந்த துரதிர்ஷ்டவசமான இழப்பு ஈடுசெய்யமுடியாதது. கடவுள் அவருடைய ஆத்மாவுக்கு சாந்தியளிக்கட்டும். மிஷ்டிக்கு பெற்றோர் மற்றும் ஒரு சகோதரர் உள்ளனர்," என்று ஊடகங்களில் வெளியான மிஷ்டி முகர்ஜியின் பிரதிநிதியின் அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது,

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :