கீட்டோ உணவு முறை என்றால் என்ன? அது மரணத்தைக் கூட ஏற்படுத்துமா?

    • எழுதியவர், சுஷீலா சிங்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

இந்தி மற்றும் வங்க மொழி திரைப்பட நடிகை மிஷ்டி முகர்ஜி சிறுநீரக செயலிழப்பு காரணமாக சில நாட்களுக்கு முன் காலமானார். 27 வயதான அந்த நடிகை கீட்டோ டயட்டில் இருந்ததாகவும் அவரது உடல்நிலை மோசமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

"பல படங்கள் மற்றும் இசை வீடியோக்களில் தனது நடிப்பின் மூலம் திறமையைக் காட்டிய நடிகை மிஷ்டி முகர்ஜி, இப்போது நம்மிடையே இல்லை. கீட்டோ டயட் காரணமாக, அவரது சிறுநீரகம் செயலிழந்தது.

பெங்களூருவில், வெள்ளிக்கிழமை இரவு அவர் காலமானார். அவர் மிகுந்த வேதனையில் இருந்தார். இந்த துரதிர்ஷ்டவசமான இழப்பு ஈடுசெய்யமுடியாதது. கடவுள் அவருடைய ஆத்மாவுக்கு சாந்தியளிக்கட்டும். மிஷ்டிக்கு பெற்றோர் மற்றும் ஒரு சகோதரர் உள்ளனர்," என்று ஊடகங்களில் வெளியான மிஷ்டி முகர்ஜியின் பிரதிநிதியின் அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது,

நடிகையின் மரணம் உண்மையில் கீட்டோ டயட்டால் ஏற்பட்டதா என்பதை பிபிசியால் உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால் இப்போது கீட்டோ டயட் நிச்சயமாக செய்திகளில் அடிபடுகிறது.

கீட்டோ உணவு என்றால் என்ன?

கீட்டோ டயட் என்றும் அழைக்கப்படும் கீட்டோஜெனிக் டயட் ,அதிக கொழுப்புச் சத்துள்ள உணவு. இந்த உணவில், உடலானது தனது ஆற்றலுக்காக கொழுப்பை சார்ந்து இருக்கிறது. இந்த உணவில், கார்போஹைட்ரேட்டுகள் (மாவுச்சத்து) மிகக் குறைவு மற்றும் புரதம் மிகவும் மிதமான அல்லது கட்டுப்படுத்தப்பட்ட அளவுகளில் கொடுக்கப்படுகிறது.

" கீட்டோன்களை ஆற்றலுக்கான வளமாக உடல் பயன்படுத்தும் போது, அது சுருக்கமாக கீட்டோ டயட் என்று அழைக்கப்படுகிறது." இந்த உணவில், நீங்கள் அதிகமாக கார்போஹைட்ரேட் சாப்பிடுவதில்லை. கொழுப்புகள் மிக அதிக அளவில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இந்த உணவில், கீட்டோ ஷேக்ஸ், சீஸ், ஒரு சில தேர்ந்தெடுக்கப்பட்ட காய்கறிகள் உட்கொள்ளப்படுகின்றன. பழங்கள் கிடையாது. புரத சத்திற்காக, கோழி, மட்டன், மீன், தேங்காய் எண்ணெய் ஸ்மூத்தி (smoothie) ஆகியவவை எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இந்தியாவில் உள்ளவர்கள் இந்த உணவில் அதிக சீஸ் சாப்பிடுகின்றனர், "என்று ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் ஷிகா சர்மா விளக்குகிறார்.

எடையிழப்பு எப்படி ஏற்படுகிறது?

நிபுணரின் கூற்றுப்படி, கீட்டோ டயட்டின் பலன் குறைந்தது ஒரு வாரத்தில் உங்கள் உடலில் தோன்றத் தொடங்குகிறது.

"நீங்கள் இத்தகைய உணவை உட்கொள்ளும்போது, உங்கள் உடல் அத்தகைய உணவை ஜீரணிக்காது. எல்லாமே குடல்கள் வழியாகவே செல்கிறது. ஜீரணிக்கப்படுகின்ற உணவு உங்கள் கல்லீரல் மற்றும் பித்தப்பையில் நிரம்புகிறது, "என்று டாக்டர் ஷிகா சர்மா விளக்குகிறார்,

"உடல், உயிர்வாழல் செயல்முறைக்கு (survival mode)சென்றுவிடுகிறது. இந்த நேரத்தில், உடல் அதன் சக்தியை கீட்டோனிலிருந்து பெறுகிறது. ஆனால் அதன் பக்க விளைவுகளும் உடலில் தோன்றத் தொடங்குகின்றன. உங்கள் உடலில் கீட்டோ உணவின் விளைவு இரண்டு அல்லது மூன்று நாட்களில் தோன்றத் தொடங்குகிறது."

உங்கள் கல்லீரல் அல்லது பித்தப்பையில் ஏற்கனவே பிரச்சனை இருந்தால், இரண்டு அல்லது மூன்று நாட்களில் இந்த உணவின் விளைவுகளை நீங்கள் காண ஆரம்பிக்கிறீர்கள் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆனால் உங்கள் உடல் உறுப்புகளில் எந்த பிரச்சனையும் இல்லை என்றால், அதன் மோசமான விளைவைக் காண மூன்று முதல் நான்கு மாதங்கள் ஆகலாம்.

சர்க்கரை, மைதா, ரவை மற்றும் சோளமாவால் தயாரான உணவுகள் அடங்கிய சிம்பிள் கார்ப்ஸ்(சாதாரண மாவுச்சத்து) தான் உங்கள் எடை அதிகரிப்பதற்கான முக்கிய காரணம் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இருப்பினும், மக்கள் இந்த வகை உணவுகளை ஒதுக்க சிரமப்படுகிறார்கள். அவர்கள் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைக்கும்போது, உடனடியாக எடை இழக்கச்செய்யும் உணவு முறையை தேடுகிறார்கள். அப்போது அவர்களுக்கு கீட்டோ டயட் ஒரு எளிய வழியாக கண்ணில் தெரிகிறது.

" பலருக்கும் கீட்டோ உணவை பரிந்துரைக்கும் உட்டச்சத்து நிபுணர் இல்லை. மேலும் பலர் வீட்டு மருத்துவம் போன்று இந்த உணவைப் பின்பற்றுகிறார்கள். ஆனால் எந்தவொரு உணவுத் திட்டத்தையோ, உணவையோ கடைப்பிடிக்கும் முன்பு, ஒரு நிபுணரிடம் கேட்பது முக்கியம். அவர்களின் கண்காணிப்பின் கீழ்தான் இத்தகைய டயட்டுகளை எடுத்துக்கொள்ளவேண்டும். ஏனென்றால் இதுபோன்ற உணவுகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்," என்று டாக்டர் ஷிகா ஷர்மா கூறுகிறார்.

உடலில் கீட்டோ டயட்டின் விளைவு

"வழக்கமாக, ஒரு நாளில் உடலுக்கு 20 கிராம் கொழுப்பு சத்தும், ஒரு கிலோ உடல் எடைக்கு ஒரு கிராம் புரதமும் தேவை. அதாவது நீங்கள் 55 முதல் 60 கிலோ வரை இருந்தால், 60 கிராம் புரதம் எடுத்துக்கொள்ளவேண்டும். 50 முதல் 60 சதவிகிதம் கார்போஹைட்ரேட்டுகள். தேவைப்படுகிறது. ஆனால் இது உங்கள் உடல், உங்கள் வேலை மற்றும் செயல்பாடுகளுக்கு ஏற்ப, கூடுதலாகவோ, குறைவாகவோ இருக்கலாம். விளையாட்டு வீரருக்கு இது அதிகமாக தேவைப்படலாம். உங்கள் உடலுக்கு 20 கிராம் கொழுப்பு மட்டுமே தேவைப்படும்போது அதை 60-80 சதவிகிதமாக நீங்கள் அதிகரிக்கும்போது, அது உங்கள் கல்லீரல் மற்றும் பித்தப்பை மீது பாதிப்பை ஏற்படுத்தும்," என்று டாக்டர் ஷிகா சர்மா தெரிவிக்கிறார்.

இங்கே உடல் தனது ஆற்றலுக்கான வளத்தை, கார்போஹைட்ரேட் மூலமாக அல்லாமல் கொழுப்புச்சத்தில் இருந்து பெறுகிறது. உங்கள் உடல் எடை குறைவதாக நீங்கள் உணருவீர்கள். ஆனால் உங்கள் கல்லீரல் மற்றும் பித்தப்பை, நீங்கள் உட்கொள்ளும் கொழுப்புகளை ஜீரணிக்க முடியாமல் திணறுகிறது. ஏனெனில் உங்கள் உடல் ஒவ்வொரு நாளும் 20 கிராம் கொழுப்புகளை மட்டுமே ஜீரணித்து வந்தது. ஆனால் நீங்கள் கீட்டோ டயட்டை உண்ணும்போது உங்கள் உடல் ஒரே நாளில் 100 கிராம் கொழுப்பை ஜீரணிக்க வேண்டும்.

"இதுபோன்ற சூழ்நிலையில், இந்த இரண்டு உறுப்புகளும் அதை ஜீரணிக்க பல மடங்கு உழைக்க வேண்டியிருக்கும். உங்கள் கல்லீரல் பலவீனமாக இருந்தால், அத்தகைய உணவு அதை செயலிழக்கச் செய்யும். இதுபோன்ற உணவு பெண்கள் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒரு பெண்ணின் வயது 40 க்கும் அதிகமாக இருந்தால், அவர் அதிக எடை கொண்டவராக இருந்தால், அவர் கருவுறுதல் காலத்தில் இருப்பவர் என்றால் பித்தப்பையில் கற்கள் உருவாகலாம். ஏனெனில் இதுபோன்ற சூழ்நிலையில் உங்கள் பித்தப்பை மிகவும் அமில சூழலில் வேலை செய்கிறது மற்றும் உடலில் வீக்கம் அதிகரிக்கும் வாய்ப்பும் இருக்கிறது,"என்று டாக்டர் ஷிகா ஷர்மா கூறுகிறார்.

"இந்த உணவு முறையை பின்பற்றுவதால் உங்கள் ஹார்மோன்களின் சுழற்சி பாதிக்கப்படக்கூடும். கீட்டோ டயட் காரணமாக, உங்கள் பிபி மற்றும் சர்க்கரை அளவும் தாறுமாறாகக்கூடும். அத்தகைய உணவை உட்கொள்பவர் பலவீனமாக உணருவார், உங்களுக்கு குமட்டல் ஏற்படும். செரிமான செயல்முறை குழப்பமடைந்து உங்களுக்கு வாயு மற்றும் அமிலத்தன்மை காரணமான சிக்கல்கள் இருக்கும். "

" சாதாரண சூழ்நிலையில், எந்தவொரு மருத்துவரும் கீட்டோ உணவை பரிந்துரைக்க மாட்டார். ஒரு அடிப்படை மருத்துவ பிரச்சனை இருக்கும்போது மட்டுமே கீட்டோ உணவு பரிந்துரைக்கப்படுகிறது. யாருக்காவது வலிப்புத்தாக்கங்கள் இருந்தால், நோயாளிகள் மாவுச்சத்தை ஜீரணிக்க முடியவில்லை அல்லது அவர்களின் உடலில் என்சைம்கள் இல்லை என்றால் இது பரிந்துரைக்கப்படுகிறது. இந்த உணவு எடையைக் குறைக்கிறது. ஆனால் இது ஒருபோதும் எடை குறைப்புக்கான டயட்டாக இருந்ததில்லை. "என்று டாக்டர் ஷிகா ஷர்மா குறிப்பிடுகிறார்.

"இந்த 'க்விக் ஃபிக்ஸ் வெயிட் லாஸ்' (விரைவான எடை குறைப்பு வழி) மக்களிடையே பிரபலமாகிவிட்டது. மக்கள் அதை பின்பற்றுவது வருத்தமளிக்கிறது. இது ஒருபோதும் செய்யப்படக்கூடாது. இது ஒரு சிட் ஃப்ண்ட் (சீட்டு நிதி ) போன்றது . இதில் உடனடி நன்மைகள் பெறப்படுகிறது. மக்கள் அதை ஒரு நல்ல வருமான ஆதாரமாக நினைக்கிறார்கள். ஆனால் காலப்போக்கில் அதன் இழப்புகள் தெரியவருகிறது. அதேபோல, உடனடியாக எடை குறைக்கும் வழியாக கீட்டோ டயட் தெரிகிறது, ஆனால் அது உடலில் பல தீங்குகளை விளைவிக்கிறது. சரியான மற்றும் சமச்சீர் உணவு, நமது உடலுக்கு மருந்து போல வேலை செய்ய முடியும். ஆனால், நீங்கள் அதை விஷமாக மாற்றி உண்டால், அது உங்கள் உடலுக்கு விஷத்தன்மையை அளிக்கும், " என்று அவர் மேலும் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: