You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நரேந்திர மோதியின் 20 ஆண்டுகால ஆட்சி அதிகாரம் - வெற்றிக்கு என்ன காரணம்?
- எழுதியவர், அபூர்வா கிருஷ்ணா
- பதவி, பிபிசி செய்தியாளர்
#20thYearOfNaMo - இந்த பெயரில் ஒரு ஹேஷ்டேக் செப்டம்பர் 7ஆம் தேதி காலை முதல் டிவிட்டரில் டிரெண்டிங்கில் இருக்கிறது.
அதற்கு காரணம், இன்றில் இருந்து சரியாக 20 ஆண்டுகளுக்கு முன்பு 2001ஆம் ஆண்டில் நரேந்திர மோதி, குஜராத் மாநிலத்தின் முதல்வராக அரசியல் அதிகார தலைமை இருக்கையில் முதல் முறையாக அமர்ந்தார்.
அப்படியென்றால், சரியாக 19 ஆண்டுகள் கடந்த நிலையில், மூன்று முறை குஜராத் முதல்வராகவும் அதன் தொடர்ச்சியாக இந்திய பிரதமர் பதவியிலும் நரேந்திர மோதி அமர்ந்து இப்போது இருபதாவது ஆண்டை எட்டியிருக்கிறார்.
நரேந்திர மோதி, குஜராத் மாநில முதல்வராக 2001, அக்டோபர் 7ஆம் தேதி பதவியேற்றார்.
அவர் பதவியேற்ற அந்த ஆண்டில்தான் குஜராத்தின் புஜ் பகுதியில் சுமார் 20 உயிர்களை பலி கொண்ட மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தக் கூடிய பூகம்பம் ஏற்பட்டது.
அந்த பேரழிவுக்கு பிறகு மாநிலத்தில் ஆளும் கேஷுபாய் படேலின் ஆட்சி மீது நிலவிய அதிருப்தியின் விளைவால், அவர் முதல்வர் பதவியில் இருந்து பாரதிய ஜனதா கட்சி மேலிடத்தால் மாற்றப்பட்டு முதல்வர் அரியணையில் நரேந்திர மோதி அமர்ந்தார்.
அவர் பதவிக்கு வந்த ஐந்து மாதங்களில் குஜராத்தில் 2002ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கலவரம் வெடித்தது. இந்தியா மட்டுமின்றி உலக அளவில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானபோதும் முதல்வர் பதவியில் நரேந்திர மோதி தொடர்ந்தார்.
அதே ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த தேர்தலில் மிகப்பெரிய பெரும்பான்மை பலத்துடன் கிடைத்த வெற்றி, குஜராத் மாநிலத்தில் மோதியின் நீடித்த ஆட்சி அதிகாரத்துக்கு அச்சாரமாக அமைந்தது. மொத்தம் உள்ள 182 இடங்களில் மோதியின் பாரதிய ஜனதா கட்சி 127 இடங்களில் வென்றது.
மோதியின் தலைமையில் குஜராத் மாநிலத்தில் 2007, 2012 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டமன்ற தேர்தல்களில் அவரது தலைமையில் போட்டியிட்ட கட்சி, ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. அந்த வெற்றி கட்சியில் மோதியின் செல்வாக்கை தேசிய அளவில் உயர்த்தியது.
2013ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோதி அடையாளம் காணப்பட்டார். அதைத்தொடர்ந்து குஜராத்தில் மாநில அரசியல் செய்து வந்த நரேந்திர மோதி, மக்களவை தேர்தலில் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அவரது இடைவிடாத பிரசாரம், மேடைகளில் ஆற்றிய பேச்சும் வசீகரமான சொல்லாடலும் தேசிய அளவில் அவர் மீதான ஈர்ப்பை வாக்காளர்கள் மத்தியில் அதிகரித்தது. அவை தேர்தலில் மோதிக்கு ஆதரவான வாக்குகளாக மாறின.
2019ஆம் ஆண்டிலும் அதே பிரசார பாணியை மோதி கடைப்பிடித்தார். மீண்டும் அவரது தலைமையில் மத்தியில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி அரசு அமைந்தது.
இருபதாம் ஆண்டில் நரேந்திர மோதி
2020, அக்டோபர் 7ஆம் தேதி காலை முதல், "பிரதமர் மோதி ஆட்சி அதிகாரத்தில் இருபது ஆண்டுகள்" என்ற தலைப்பில் அவரது ஆதரவாளர்களும், அவரது சமூக ஊடக பக்கங்களில் அவரை பின்தொடருவோரும் மோதிக்கு வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் இருந்தனர். கட்சி, ஆதரவாளர்கள் மட்டுமின்றி பல முனைகளில் இருந்தும் மோதிக்கு வாழ்த்துக்குரல்களும் வாழ்த்து இடுகைகளும் வந்தன.
பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஜே.பி. நட்டா, இந்திய அரசியல் வரலாற்றில் அக்டோபர் 7, 2001 அன்று முதல்வராக நரேந்திர மோதி பதவியேற்ற நிகழ்வு ஓர் மைல்கல் சாதனை. அதன் பிறகு தான் எதிர்கொண்ட தேர்தல்கள் அனைத்திலும் மோதி வெற்றியையே கண்டு வருகிறார் என்று கூறியுள்ளார்.
குஜராத் மாநிலத்தில் மோதியின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சர் பதவியை வகித்த அமித் ஷா, இப்போது இந்திய உள்துறை அமைச்சராக இருக்கிறார். அவரும் நரேந்திர மோதியை தமது டிவிட்டர் பக்கம் மூலமாக வாழ்த்தினார்.
130 கோடி இந்தியர்களின் எதிர்பார்ப்புகளை புரிந்து கொள்ள ஒருவர் உண்டென்றால் அது நரேந்திர மோதிதான். தொலைநோக்குப் பார்வை மூலம் இந்தியாவை வலிமையானதாகவும் தற்சார்புடையதாகவும் அவர் உருவாக்கியிருக்கிறார். மக்கள் பிரதிநிதியாக அவர் 20ஆவது ஆண்டில் அதிகாரத்தில் உள்ள நிகழ்வை மனதார பாராட்டுகிறேன் என்று அமித் ஷா கூறியுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் அலுவல்பூர்வ டிவிட்டர் பக்கத்திலும் மோதியின் சாதனைகள் பட்டியலிடப்பட்டு வாழ்த்து இடுகைகள் பகிரப்பட்டுள்ளன.
அதில் ஒன்றாக, நரேந்திர மோதியை அமெரிக்க முன்னாள் அதிபர்கள் ஃபிராங்க்ளின் ரூஸ்வெல்ட், பில் கிளின்டன், ஜார்ஜ் டபிள்யூ புஷ், பாரக் ஒபாமா, பிரிட்டன் முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சர், பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிரான்சிஸ் மிட்டரேண்ட், ஜெர்மன் முன்னாள் ஆட்சித்துறைத் தலைவர் ஹெல்மட் கோல் ஆகியோருடன் ஒப்பிட்டு பாரதிய ஜனதா கட்சி தமது பாராட்டை பதிவு செய்திருக்கிறது.
ஹாத்ரஸ் விவகாரத்தில் மெளனம் ஏன்?
பொது மேடைகள், தேர்தல் மேடைகள் போன்றவற்றில் ஆயிரக்கணக்கான மற்றும் லட்சக்கணக்கான கூட்டத்தினரை கவர்ந்திழுக்கும் நரேந்திர மோதி, ஊடகங்களின் நேர்காணல் என வரும்போது பொதுவெளி செய்தியாளர் சந்திப்புகளை அதிக நேரம் நடத்தியிருக்கவில்லை.
அவரது வெளிநாடு மற்றும் உள்ளூர் பயணங்களின்போதும் தனியார் ஊடக செய்தியாளர்கள் தவிர்க்கப்படுவார்கள்.
சமீபத்தில் உத்தர பிரதேசத்தின் ஹாத்ரஸ் மாவட்டத்தில் 19 வயது பெண், பாலியல் வல்லுறவுக்கு ஆனதாக கூறப்பட்ட சம்பவத்தின்போதும் அந்த பெண் பின்னர் உயிரிழந்தபோதும், பிரதமர் மோதி எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
அந்த பெண் எப்படி உயிரிழந்தார் என்பது தொடர்பாக பல்வேறு முரண்பட்ட தகவல்கள் வரும் நிலையில், தேசிய அளவிலான கவலைகள், கண்டனக் குரல்கள் எழுந்தன. ஆனாலும், இந்திய பிரதமராக இருக்கும் மோதி இதுவரை ஹாத்ரஸ் சம்பவம் தொடர்பாக எந்த கருத்தையும் வெளியிடவில்லை.
இது தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, "உத்தர பிரதேசத்தின் ஹாத்ரஸில் ஒரு பெண் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்படுகிறார். ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் மகள் உயிரிழந்ததால் பாதிக்கப்பட்ட குடும்பத்தை இலக்கு வைத்து முரண்பட்ட தகவல்களை வெளியிடுகிறது. ஆனால், இதுவரை நாட்டின் பிரதமர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை" என்று கூறினார்.
பட்டியிலின சமூகத்தினருக்காக உத்தரபிரதேசத்தில் குரல் கொடுத்து வரும் பீம் ஆர்மி அமைப்பின் தலைவர் சந்திரசேகர் ஆஸாத், பிரதமரின் மெளனத்துக்கு என்ன காரணம் என்று கேள்வி எழுப்பினார். "உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் இருந்து இரண்டாவது முறையாக மக்களவைக்கு பிரதமர் மோதி தேர்வாகியுள்ளார். ஆனால், அந்த மாநிலத்தில் நடந்த ஒரு அநீதிக்கு எதிராக அவர் இன்னும் ஒரு வார்த்தை கூட பேசவில்லையே" என்று சந்திரசேகர் ஆஸாத் கேள்வி எழுப்பினார்.
பொது விவகாரங்களில் பிரதமர் பேசுவது அவசியமா?
ஆனால், மாநில விவகாரங்களில் நாட்டின் பிரதமர் பேசுவது அவசியம்தானா என்றும் சிலர் கேட்கிறார்கள். ஹாத்ரஸ் போல ஒவ்வொரு மாநிலத்தின் மாவட்ட்திலும் ஏதாவது ஒரு சம்பவம் நடந்து கொண்டே தான் இருக்கிறது. அவற்றில் எல்லாம் தலையிட்டு பிரதமராக இருப்பவர் கருத்து தெரிவிக்க வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது என்று சில அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதேவேளை மூத்த பத்திரிகையாளர் பிரதீப் சிங், "தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளிவிவரத்தை பார்த்தால், இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரமும் ஒரு பாலியல் குற்றம் நடப்பது தெளிவாகிறது. ஒவ்வொரு குற்றத்தின்போதும் பிரதமர் அது பற்றி கருத்து தெரிவிக்கிறார் என்றால், அது சரியானதாக இருக்காது. ஹாத்ரஸ் விவகாரத்தில் சம்பவம் நடந்த மாநிலத்தின் முதல்வர் பேசியிருக்கிறார். உரிய நடவடிக்கை எடுக்க உறுதி அளித்திருக்கிறார். பிறகு ஏன் பிரதமர் பேச வேண்டும் என எதிர்பார்க்க வேண்டும்?" என கேட்கிறார்.
மூத்த பத்திரிகையாளர் அதிதி ஃப்னிஸ், இந்த விவகாரத்தில் பிரதமர் பேச வேண்டும் என எதிர்பார்ப்பது சரியல்ல என்றும் அப்படியே அவர் பேசினாலும் அது ஒன்றும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப்போவதில்லை என்று கூறினார்.
ஒரு முதல்வராக இதுபோன்ற பல சம்பவங்களை நரேந்திர மோதி பார்த்திருப்பார். அதனாலேயே அவர் எந்த கருத்தையும் வெளியிடாமல் மாநில அரசு தனது கடமையை செய்ய வழிவிட்டு மெளனமாக இருப்பதாக கருதலாம் என்று அதிதி ஃபட்னிஸ் தெரிவித்தார்.
'மன்மோகன் சிங்கும் அமைதி காத்தார்'
இந்திய பிரதமர் பதவியில் நரேந்திர மோதி இருக்கும்போது மட்டும் பாலியல் சம்பவங்களின்போது அமைதி காக்கவில்லை. அவருக்கு முன்பு நாட்டின் பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கும் அமைதியாகவே இருந்திருக்கிறார்.
அதற்கு உதாரணமாக டெல்லியில் ஓடும் பேருந்தில் துணை மருத்துவ மாணவி பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு பிறகு உயிரிழந்த சம்பவத்தைக் குறிப்பிடலாம் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் அதிதி ஃபட்னிஸ்.
பாலியல் சம்பவம் மட்டுமல்ல, சமீபத்தில் கொரோனா வைரஸ் பரவலையொட்டி நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதால் லட்சக்கணக்கான குடியேறி தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டபோது கூட, ஒரு முன்னாள் பிரதமராக மன்மோகன் சிங் வாய் திறக்கவில்லை என்றும் அதிதி ஃபட்னிஸ் சுட்டிக்காட்டுகிறார்.
மோதியும் ஊடகங்களும்
இந்திய பிரதமராக பதவிக்கு வந்தவுடன் தனக்கான மக்கள் தொடர்பு பாலமாக ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக ஊடக பக்கங்களை மோதி பயன்படுத்தி வருகிறார்.
மாணவர்களுடனும் மக்களுடனும் உரையாட மன் கீ பாத் எனப்படும் அகில இந்திய வானொலியின் மனதின் குரல் நிகழ்ச்சியை அவர் பயன்படுத்தி வருகிறார்.
இதே பாணியை தமது அமைச்சரவையில் உள்ளவர்களும் பின்பற்ற அவர் ஊக்குவிக்கிறார். இதன் மூலம் செய்தி ஊடகங்களின் நேர்காணல்களையும் அவை உருவாக்கக் கூடிய விவாதங்கள் அல்லது விமர்சனங்களை மோதி தவிர்த்து வருகிறார்.
திட்டமிடப்பட்ட செய்தியாளர் சந்திப்பு, நன்கு அறிமுகமான செய்தியாளர் நேர்காணல் போன்றவற்றில் மட்டுமே மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களும் அமைச்சர்களும் பங்கேற்பதையும் மோதியின் ஆட்சியில் காண முடிகிறது.
ஆனால், ஊடக நேர்காணல் என வரும்போது பெரும்பாலும் செய்தியாளர்களை தவிர்க்கும் மோதியின் செயல்பாடு குறித்து மூத்த பத்திரிகையாளர் பிரதீப் சிங் ஒரு விளக்கத்தை தர முற்படுகிறார்.
"நரேந்திர மோதி குஜராத் மாநில முதல்வராக இருந்த காலகட்டத்தில் ஊடகங்களுடன் ஒத்துப்போகும், அவற்றின் கேள்விகளுக்கு பதில் தரும் வழக்கத்தை 2002 முதல் 2007ஆம் ஆண்டுவரை கொண்டிருந்தார். ஆனால், என்ன பேசினாலும் ஊடகங்கள் தங்களின் போக்குக்கு எழுதத் தொடங்கியபோதும் விமர்சனங்களை முன்வைத்தபோதும் மோதி வெளிப்படையாக ஊடகங்களிடம் எல்லா நேரத்திலும் பேசுவதை தவிர்க்க பழகிக் கொண்டார்" என்று பிரதீப் சிங் தெரிவித்தார்.
இதே கருத்தை ஆமோதித்த அதிதி ஃபட்னிஸும்,"ஒரு காலத்தில் முதல்வராக இருந்தபோது ஊடகங்களிடம் வெகு சாதாரணமாக பழகும் இயல்பைக் கொண்டிருந்தவர் மோதி. ஆனால், ஆண்டுகள் செல்லச் செல்ல அந்த வழக்கத்தை அவர் மாற்றிக் கொண்டு விட்டார். சர்ச்சைக்களுக்குள் சிக்கிக் கொள்ளாமல் தவிர்க்கவும், சங்கடமான கேள்விகளை தவிர்க்கவும் இந்த பழக்கம் அவருக்கு கைகொடுக்கிறது" என்று தெரிவித்தார்.
பிற செய்திகள்:
- கொரோனா வைரஸ்: குணமடைய சிலருக்கு தாமதம் ஆவது ஏன்?
- அமெரிக்க அதிபர் தேர்தல் 2020: ஆளும் கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் மைக் பென்ஸ் - யார் இவர்?
- இலங்கை சுனாமி: ஒரு மகனுக்கு இரு தாய் உரிமை கோரும் வழக்கு - மரபணு பரிசோதனை கட்டணம் செலுத்த நீதிமன்றம் உத்தரவு
- வலதுசாரிகளுக்கு முத்தம் மூலம் எதிர்ப்பு வெளியிடும் ஒருபாலுறவினர்
- வர்மா - திரை விமர்சனம்
- கொரோனா காலத்தில் குழந்தை பெற்றுக்கொண்டால் ஊக்கத்தொகை: சிங்கப்பூர் அரசு
- சீனாவின் ஆதிக்கம் - இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆலோசனை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: