You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குஷ்பு பாஜகவில் இணைகிறாரா - திமுக, காங்கிரசுக்கு பிறகு மூன்றாவது கட்சி
முக்கிய இந்திய நாளிதழ்கள் மற்றும் அவற்றின் இணையதளங்களில் வெளியான செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
குஷ்பு பாஜகவில் இணைகிறாரா?
ஏற்கனவே திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளில் இருந்த திரைப்பட நடிகை குஷ்பு மீண்டும் கட்சி மாறி பாரதிய ஜனதா கட்சியில் சேரவுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் டெல்லி புறப்பட்டுச் சென்ற குஷ்பு இன்று பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் அக்கட்சியில் சேர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன என தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக குஷ்பு பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் பரவின. ஆனால் இந்தத் தகவலை, அண்மையில் காங்கிரஸின் போராட்டத்தில் பங்கேற்று ஆவேசமாக பேசிய குஷ்பு செய்தியாளர்களிடம் மறுத்திருந்தார். அத்துடன் தான் காங்கிரஸில் இருந்து விலகுவதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் தவறானது எனவும் கூறியிருந்தார்.
கடந்த வாரம் டெல்லி சென்று திரும்பிய குஷ்பு, நேற்று இரவு 9.30 மணிக்கு மீண்டும் டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்தார்.
அப்போது பாஜகவில் இணைவது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, "கருத்து சொல்ல விரும்பவில்லை" என்று சொல்லிவிட்டு நகர்ந்தார். அவரது கணவரும், திரைப்பட இயக்குநருமான சுந்தர்.சி அவருடன் சென்றார்.
மேலும் ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ். அதிகாரிகள் சிலரும் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என்கிறது அந்தச் செய்தி.
எடப்பாடி பழனிசாமியை ஏற்கும் பாஜக
முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்கிறோம் என்று பாஜக மாநிலத் துணைத்தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார் என்கிறது தினமணி செய்தி.
அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி கே.பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் புதன்கிழமை வெளியிட்டார்.
இந்த நிலையில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்கிறோம் என்று பாஜக மாநிலத் துணைத்தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அதிமுக கூட்டணி முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்கிறோம். எங்கள் கூட்டணியில் கட்சிகள் மாறும் நிலை இல்லை என்று அவர் கூறினார் என்கிறது அந்த செய்தி.
ஹாத்ரஸ் வழக்கு - முதல் தகவல் அறிக்கை நீக்கம்
ஹாத்ரஸ் வழக்கை உத்தரப் பிரதேச காவல் துறையிடமிருந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சில மணிநேரங்களில் சிபிஐ அதன் முதல் தகவல் அறிக்கை மற்றும் அது குறித்த செய்திக் குறிப்பை தனது அலுவல்பூர்வ இணைய தளத்தில் வெளியிட்டதாகவும் அடுத்த சில மணி நேரங்களிலேயே அதை நீக்கி விட்டதாகவும் தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
கொலை, கொலை முயற்சி, கூட்டுப் பாலியல் வல்லுறவு, பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் பதிவுசெய்யப்பட்டு இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.
பிற செய்திகள்:
- "பாலியல் தொழிலாளர்களுக்கும் சலுகைகள்" - தேசிய மனித உரிமைகள் ஆணையம்
- அமெரிக்க அதிபர் தேர்தல்: முக்கிய கேள்விகள், முழுமையான பதில்கள்
- கொரோனா வைரஸ்: குணமடைய சிலருக்கு தாமதம் ஆவது ஏன்?
- ஹாத்ரஸ் வழக்கு: காவல்துறையின் அமைப்பு முறையில் சாதிய வேறுபாடுகள்
- உலகில் மிகவும் ஒடுக்கப்பட்டவர்களாக இருக்கும் தலித் பெண்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: