மேரி கோம்: பத்ம விபூஷண் விருது பெறும் குத்துச்சண்டை வீராங்கனை குறித்த 10 தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images
உலகளவில் இந்தியாவுக்காக பல பதக்கங்களைப் பெற்று தந்த குத்துச்சண்டை வீராங்கனையான மேரி கோமுக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு துறையில் ஏற்கனவே பல விருதுகள் பெற்ற மேரி கோமைப் பற்றிய முக்கிய 10 தகவல்கள்:
- மேரி கோம் மணிப்பூர் மாநிலம் சர்சண்ட்பூர் மாவட்டம் சகாங் கிராமத்தில் பிறந்தார்.
- மாங்க்டே சங்கினிசாங் மேரி கோம் என்பதே அவரின் முழுப்பெயர். அவர் எம்.சி. மேரி கோம் என அழைக்கப்படுவார்.
- தொடக்க காலகட்டத்தில் மணிப்பூரில் இருந்தபோது படிப்பதற்கும் சரி விளையாடுவதற்கும் சரி பல மைல்கள் நடந்து சென்றுள்ளார். இவ்வாறு அவர் சந்தித்த வேதனைகளே பிற்காலத்தில் பல சாதனைகளை செய்ய மேரி கோமுக்கு ஊக்கம் அளித்தது.
- மேரிகோம் "Unbreakable: an autobiography" என்னும் தலைப்பில் சுயசரிதை எழுதியுள்ளார். அவர் பெயரில் அவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகவும் வெளிவந்தது.
- உலக தொழில்சாரா குத்துச்சண்டை சாம்பியன் பட்டத்தை 6 முறைகள் வென்றுள்ளார் மேரி கோம்.
- இவரது கணவர் ஒரு கால்பந்தாட்ட வீரர். ஒரு ரயில் பயணத்தில் தனது பெட்டியைத் தொலைத்தபோதுதான் முதல் முறையாக தன் கணவரை சந்தித்தார்.
- திருமணமாகி மூன்று குழந்தைகள் பிறந்தபின் 2012ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கல பதக்கம் வென்றார்.
- அதன்பிறகு 2014ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றார். அப்போது ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற முதல் குத்துச்சண்டை வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இதே போல் 2018ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்றபோதும் காமன்வெல்த்தில் தங்கம் வென்ற முதல் இந்திய குத்துச்சண்டை வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
- மேரி கோமுக்கு 2003ல் அர்ஜுனா விருதும் 2006ல் பத்ம ஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது. விளையாட்டு துறையில் உயரிய விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது 2009ஆம் ஆண்டு இவருக்கு அளிக்கப்பட்டது. 2013ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருதும் பெற்றார். இப்போது இவருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
- தற்போது இவர் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:









