டெஸ்ட் டியூப் பேபி சிகிச்சை: புதிய கண்டுபிடிப்பு

இன் வித்ரோ ஃபெர்டிலைஸேஷன் முறையில் உடலுக்கு வெளியில் விந்தும் கருமுட்டையும் சேர்க்கப்படுகிறது
படக்குறிப்பு, இன் வித்ரோ ஃபெர்டிலைஸேஷன் முறையில் உடலுக்கு வெளியில் விந்தும் கருமுட்டையும் சேர்க்கப்படுகிறது

இயற்கையாக பிள்ளை பெற்றுக் கொள்வதில் பிரச்சினை உள்ள ஜோடிகளில் ஆணின் விந்தையும் பெண்ணின் முட்டையையும் உடலுக்கு வெளியில் சேர்த்து கருவை உருவாக்கும் ஐ வி எஃப் சிகிச்சை முறையில், வெற்றி வாய்ப்பை கணிசமான அளவில் அதிகரிக்கக்கூடியது என தாம் நம்பும் தொழில்நுட்பம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளதாக பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்த வகையில் கரு உருவாக்கப்படுகின்ற பிள்ளையைத்தான் டெஸ்ட் டியூப் பேபி என்று சொல்வார்கள்.

இவ்வாறாக உடலுக்கு வெளியில் உருவாக்கப்பட்ட கரு ஆரம்பகட்டத்தில் இன்குபேட்டரில் இருக்கும்போது கொஞ்ச நேரத்துக்கு ஒரு முறை என தொடர்ந்து அதனை ஆயிரக்கணக்கான புகைப்படங்களை எடுத்து இந்தக் கரு தாயின் கருப்பையில் செலுத்தப்பட்டப் பின்னர் பிள்ளையாக வளர வாய்ப்பு உள்ளதா என்பதை மதிப்பிடுவதாக இந்த தொழில்நுட்பம் அமைந்துள்ளது.

ஆனால் இந்த பரிசோதனைகள் ஆரம்ப கட்டத்திலேயே இருப்பதாகவும், இந்த தொழில்நுட்பம் பரவலாகப் பயன்படுத்தப்படுவதற்கும் முன் பெரிய அளவிலும் அதிக காலத்துக்குமான பரிசோதனைகள் தேவை என பிற நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.