அறிவியல் அறியாமை: ரேடியத்தின் ஆபத்து அறியாமல் கொடூர மரணத்தைத் தழுவிய பெண்கள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், வக்கார் முஸ்தஃபா
- பதவி, பத்திரிகையாளர், ஆராய்ச்சியாளர்
மூக்கை சுத்தம் செய்யும் போது இருட்டில் பளபளத்த கைக்குட்டை கிரேஸ் ஃப்ரீருக்கு விசித்திரமாக இருந்தது. ஆனால் தன் வாழ்க்கையில் இருளின் ஆரம்பம் இது என்று அவர் அறிந்திருக்கவில்லை.
கிரேஸ் 1917 வசந்த காலத்தில் 70 பெண்களுடன் சேர்ந்து ஒரு தொழிற்சாலையில் வேலை செய்யத் தொடங்கினார். முதலாம் உலகப் போரின் தொடக்கத்தில் அமெரிக்கா முழுவதும் நிறுவப்பட இருந்த பல தொழிற்சாலைகளில் இது ஒன்று. கடிகாரங்கள் மற்றும் ராணுவ வீரர்கள் அணியும் கைகடிகாரங்களின் டயல்களில் உள்ள எண்களை இருட்டில் தெரியக்கூடிய வகையில் ஒளிரச்செய்யும் பணி இந்த தொழிற்சாலையில் நடைபெற்றது.
நூற்றுக்கணக்கான பெண்கள் இந்த வேலையைப் பற்றி உற்சாகமாக இருந்தனர் என்று ஆராய்ச்சியாளர் ஆர்லீன் பால்கன்ஸ்கி தெரிவிக்கிறார். 1917 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் உலகப் போரில் அமெரிக்கா ஈடுபட்ட பிறகு, சில பெண்கள் தங்கள் தேசபக்தியின் வெளிப்பாடாக இந்த வேலையை எடுத்துக் கொண்டனர். அவர்கள், இருளில் ஒளிரும் கடிகார டயல்கள் மற்றும் வீரர்களுக்கான ராணுவ உபகரணங்களின் பேனல்களை வரைந்தனர்.
இருட்டில் ஒளிரும் இந்த தனிமம் ரேடியம். பிரெஞ்சு விஞ்ஞானிகள் மேரி மற்றும் பியரி கியூரி ஆகியோர் 1898 ஆம் ஆண்டு ரேடியத்தை கண்டுபிடித்தனர்.
ஒரு அதிசய பொருள் என்று கருதப்பட்டது
புற்றுநோய் சிகிச்சையில் ரேடியம் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டதால், பலர் இதை ஒரு அதிசயப் பொருளாகக் கருதினர். எனவே இதனை பற்பசைகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் உட்பட பல்வேறு வணிகப் பொருட்களில் சேர்த்தனர்.
கடிகார டயல்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்கள், ரேடியம் பொடியுடன், பசை மற்றும் தண்ணீரைக் கலந்து ஒளிரும் வெள்ளை நிற பெயிண்ட் தயாரிப்பார்கள். பின்னர் ஒட்டக முடியால் செய்யப்பட்ட பிரஷ் மூலம் கடிகார டயல் மற்றும் அதன் எண்களில் கவனமாகப் பூசுவார்கள். சிறிது பயன்பாட்டிற்குப் பிறகு, ப்ரஷ் தேய்ந்துவிடும். பின்னர் அவர்களால் சரியாக வண்ணம் தீட்ட முடியாது.

"அந்த ப்ரஷ்களின் நுனியை உதடுகளால் தேய்த்து கூராக்கும்படி எங்கள் மேற்பார்வையாளர் கூறுவார். ஒவ்வொரு கடிகாரத்தின் டயலையும் பெயிண்ட் செய்ய என் உதடுகளால் பிரஷை ஆறு முறை சரிசெய்திருப்பேன் என்று நினைக்கிறேன். பெயின்ட்டின் சுவை வித்தியாசமாக இருக்காது. அதில் எந்த சுவையும் இருக்காது. அது தீங்கு விளைவிக்கும் என்று எனக்குத் தெரியவில்லை,"என்று க்ரேஸ் கூறுகிறார்.
அது எந்தத் தீங்கும் செய்யாது என்று பெண்கள் நினைத்தனர்.
டயலை வரைந்த பெண்கள் ' கோஸ்ட்(பேய் ) பெண்கள்' என்றும் அழைக்கப்பட்டனர். தினமும் ரேடியம் துகள்கள் அவர்கள் மீது விழுவதால், அவர்களின் ஆடைகள், முடி மற்றும் தோல் பளபளப்பாயின என்று என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா கூறுகிறது.

வேலை முடிந்து வெளியில் எங்காவது செல்லும்போது ஆடைகள் பளபளக்க வேண்டும் என்பதற்காக பல பெண்கள் தங்களின் சிறந்த உடையில் வேலைக்கு வந்தனர்.
தாங்கள் புன்னகைக்கும்போது பிரகாசமாக தோன்றவேண்டும் என்பதற்காக சில பெண்கள் தங்கள் பற்களில் இந்த வண்ணப்பூச்சை பூசிக்கொள்வார்கள். சிலர் தங்கள் நகங்களின் பளபளப்பால் தங்கள் காதலர்களை ஆச்சரியப்படுத்துவார்கள்.
ரேடியத்தின் பாதுகாப்பைப் பற்றி கேட்டபோது, அதில் கவலைப்பட ஒன்றுமில்லை என்று அவர்களுடைய மேலாளரும் உறுதியளிப்பார்.
நிச்சயமாக, இது உண்மை இல்லை.
'ரேடியம் கேர்ள்ஸ்' உடல் பாதிப்பை சந்திக்க அதிக காலம் ஆகவில்லை. அதன் முதல் பலி அமெலியா (மோலி) மகியா. நியூ ஜெர்சியின் ஆரஞ்சில் உள்ள ரேடியம் லுமினஸ் மெட்டீரியல்ஸ் கார்ப்பரேஷனுக்காக (பின்னர் யுனைடெட் ஸ்டேட்ஸ் ரேடியம் கார்ப்பரேஷன்) கடிகாரங்களை வரைந்தார்.
முதல் அறிகுறி பல்வலி. அதற்காக எல்லா பற்களையும் ஒன்றன் பின் ஒன்றாக அகற்ற வேண்டி வந்தது. விரைவில் கசியும் ரத்தம் மற்றும் சீழ் கொண்ட வலிமிகுந்த புண்கள் பளபளப்பான பற்களின் இடத்தை ஆக்கிரமித்தன.
அமெலியாவின் வாயில் ஒரு மர்ம நோய் பரவியது. கீழ் தாடையை வெட்ட வேண்டி இருந்தது. பின்னர் தொற்று உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவியது. அதிக ரத்தப்போக்கு காரணமாக 1922 செப்டம்பர் 12 அன்று அவர் காலமானார்.
மரணத்திற்கான காரணத்தை அறிய முடியவில்லை
மருத்துவர்களால் மரணத்திற்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை, எனவே ஆச்சரியப்படும் விதமாக பெயர் தெரியாத காரணத்தால் அவர் இறந்தார் என்று அவர்கள் சொன்னார்கள்.

ரேடியம் பாதுகாப்பானது என்ற தவறான எண்ணம் மக்களிடம் இருந்தது. ரேடியம் பெண்கள், அதிக எண்ணிக்கையில் கொடிய நோய்க்கு பலியாகத்தொடங்கினர்..
கிரேஸ் 1920 இல் ஒரு வங்கி வேலைக்காக தொழிற்சாலையை விட்டு வெளியேறினார், ஆனால் சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது பற்களும் விழ ஆரம்பித்தன. அவரது தாடையில் ஒரு வலிமிகுந்த புண் தோன்றியது. இறுதியாக 1925 ஜூலையில் ஒரு மருத்துவர் இந்த பிரச்சனைகள் அவரது முந்தைய வேலை காரணமாக இருக்கலாம் என்று கூறினார்.
1924 ஆம் ஆண்டு, தொழிலாளர்களின் நலனை பாதுகாக்க பணிச்சூழலை மாற்றும் பரிந்துரையை, உடலியல் பேராசிரியரான செசில் ட்ரிங்கர் அளித்தார். ஆனால் யுஸ் ரேடியம் அமைப்பின் தலைவர் ஆர்த்தர் ரோய்டர், இதை நிராகரித்ததுமட்டுமின்றி, இதற்கான ஆதாரங்களை அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் அது நடக்கவில்லை.
ரேடியம் கடிகாரங்களை வர்ணம் பூசும் பெண்களை, அது விஷத்தால் நிரப்பிவிட்டது என்பதை 1925 ஆம் ஆண்டில் நோயியல் நிபுணர் ஹாரிசன் மார்ட்லேண்ட் உறுதியாக நிரூபித்தார். ரேடியம் தொழில்துறையினர் மார்ட்லேண்டை இழிவுபடுத்த முயன்றனர்.
கிரேஸ் ஃப்ரீயர் ஒரு வழக்கைத் தாக்கல் செய்ய முடிவு செய்தார். ஆனால் ஒரு வழக்கறிஞரைக் கண்டுபிடிக்க அவருக்கு இரண்டு ஆண்டுகள் ஆனது.
1927 மே 18 ஆம் தேதி இளம் வழக்கறிஞர் ரேமண்ட் பெர்ரி மூலம் அவர் நியூ ஜெர்சி நீதிமன்றத்தில் அமெரிக்க ரேடியம் கார்ப்பரேஷனுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.
கடுமையான மருத்துவப் பிரச்சனைகள் உள்ள மற்ற நான்கு பெண்களான எட்னா ஹுஸ்மேன், கேத்தரின் ஷாப் மற்றும் அமெலியா மாகியாவின் இரண்டு சகோதரிகள், குவெட்டா மெக்டொனால்ட் மற்றும் அல்பினா லாரஸ் ஆகியோரும் இந்த வழக்கில் இணைந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் மருத்துவ செலவு மற்றும் நோய் பாதிப்புக்காக 2.5 லட்சம் டாலர்களை ஈட்டுத்தொகையாக கேட்டனர்.

சகோதரிகளின் வேண்டுகோளின் பேரில், 1927 அக்டோபர் 16 ஆம் தேதி, அமெலியாவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. பிரேத பரிசோதனையில் அவரது எலும்புகள் மிகவும் பளபளப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. அமெலியா ஒரு புதிய மற்றும் மர்மமான நெக்ரோசிஸ் நோயால் இறந்தார் என்று கண்டுபிடிக்கப்பட்டது. அது அவருடைய சகோதரிகளையும் மோசமாக பாதித்திருந்தது.
உலகப் பத்திரிக்கைகலால் 'ரேடியம் கேர்ள்கள்' என்று அழைக்கப்பட்ட ஐந்து பெண்களும் 1928 ஜனவரியில் நடந்த முதல் விசாரணையில் உறுதிமொழி கூற கையை உயர்த்தக்கூட முடியாத நிலையில் இருந்தனர்.
ஃப்ரீயரும் மற்ற பெண்களும் தைரியமாக சிரித்துக் கொண்டே இருக்க முயன்றனர். ஆனால் அவர்களது நண்பர்களும் நீதிமன்றத்தில் இருந்த மற்றவர்களும் அழுதனர் என்று நியூயார்க் லீஷர் செய்தித்தாள் தெரிவித்தது.
கிரேஸ் பற்றி மேலே குறிப்பிடப்பட்ட விஷயங்கள் அதே நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட அறிக்கையின் ஒரு பகுதியாகும்.
உதவ முன்வந்த மேரி கியூரி
ஏப்ரல் மாதத்திற்குள் இந்த பெண்கள் இரண்டாவது விசாரணையில் கலந்துகொள்ள நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு உடல் ரீதியாகவோ அல்லது மனரீதியாகவோ தகுதியுடையவர்களாக இல்லை.
ரேடியத்தை கண்டுபிடித்த பிரெஞ்சு விஞ்ஞானி மேரி கியூரி இந்த வழக்கைப் பற்றி படித்தபோது, 'பிரெஞ்சு ரேடியம் தொழிலாளர்கள் வண்ணப்பூச்சு பிரஷ்களுக்கு பதிலாக சிறிய பஞ்சு சுற்றிய குச்சிகளை பயன்படுத்தியதாக கூறினார்."என்று நியூயார்க் ஜர்னல் தெரிவித்தது.
"எந்தவொரு உதவியையும் வழங்குவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன். ஆனால் இந்த பொருள் மனித உடலில் நுழைந்துவிட்டால் அதை அகற்ற வழி இல்லை" என்று கியூரி கூறினார்.
1928 ஏப்ரல் 25 ஆம் தேதி நடந்த விசாரணையில் பெண்கள் இறந்து கொண்டிருப்பதாகவும், அடுத்த விசாரணை வரை அவர்கள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்றும் வழக்கறிஞர் பெர்ரி கூறிய போதிலும், விசாரணை செப்டம்பர் மாததிற்கு ஒத்திவைக்கப்பட்டது.
வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டதற்கு நாளிதழ்களில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
நியூயார்க் வேர்ல்டின் ஆசிரியர் வால்டர் லிப்மேன், 1928 மே 10 ஆம் தேதி தலையங்கத்தில், "விசாரணையை தாமதப்படுத்தும் முடிவு 'மிகப்பெரிய அநீதி'. இது போன்ற தாமதத்திற்கு எந்தக்காரணமும் இல்லை. பெண்கள் இறந்துகொண்டிருக்கிறார்கள். உலகில் தங்கள் கடைசி நாட்களை எளிதாக்க சில டாலர்களுக்காக போராடும் இந்த ஐந்து நோய்வாய்ப்பட்ட பெண்களின் வழக்கு விரைவில் முடிவு செய்யப்பட வேண்டும்,"என்று எழுதினார்.

நீதிமன்றம் பின்னர் 1928 ஜூன் மாத தொடக்கத்திற்கு விசாரணையை மாற்றிவைத்தது.
இருப்பினும் ஒரு கூட்டாட்சி நீதிபதி இந்த சர்ச்சையை நீதிமன்றத்திற்கு வெளியே தீர்க்க மத்தியஸ்தராக செயல்பட முன்வந்தார். விசாரணைக்கு சில நாட்களுக்கு முன்பு, ஒவ்வொருவருக்கும் 10,000 டாலர்கள் மற்றும் ஆண்டிற்கு 600 டாலர்கள் உதவித்தொகை பெற ரேடியம் கேர்ல்ஸ் ஒப்புக்கொண்டனர். மேலும் எல்லா மருத்துவ மற்றும் சட்ட செலவுகளும் நிறுவனத்தால் அளிக்கப்படும் என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
"கார்ப்பரேஷன் இதனால் பெரிதும் பயன்பெறுகிறது" என்று உணர்ந்த பெர்ரி, இந்த தீர்வில் மகிழ்ச்சியடையவில்லை. மத்தியஸ்தராக செயல்பட்ட அமெரிக்க மாவட்ட நீதிமன்ற நீதிபதி வில்லியம் கிளார்க்கையும் அவர் சந்தேகித்தார்.
'அவர் மிகவும் மரியாதைக்குரிய நபர் மற்றும் சமூகப் பிரச்சினைகளில் உண்மையான அக்கறை கொண்டவர் என்று நான் உறுதியாக நம்புகிறேன்,'. ஆனால் 'அவர் கார்ப்பரேட் தரப்பில் இருப்பதை அவரது வாழ்க்கை காட்டுகிறது' என்றார் பெர்ரி.
நீதிபதி கிளார்க் அமெரிக்க ரேடியம் கார்ப்பரேஷனில் பங்குகள் வைத்திருப்பவர் என்று பெர்ரிக்கு தெரியவந்தது.

இழப்பீடாக ஒரு சிறிய தொகையைப்பெற்ற ஐந்து ரேடியம் பெண்களும், அடுத்த சில மாதங்கள் மற்றும் ஆண்டுகளில் காலமானார்கள்.
தனது கண்டுபிடிப்பு தீங்கு விளைவிக்காது' என்று கூறிவந்த ரேடியம் பெயிண்டின் அசல் கண்டுபிடிப்பாளரான ஆஸ்திரிய மருத்துவர் சபின் ஏ. வான் சுச்சோவ்கி, நியூ ஜெர்சியின் ஆரஞ்சில், 1928 நவம்பர் 14 அன்று காலமானார் என்று நியூயார்க் டைம்ஸ் தெரிவித்தது.
ஆனால் இது மரணத்தை ஏற்படுத்தும் என்று பின்னர் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உறுதி செய்தது.
இந்த வழக்கை ஒட்டாவாவின் ரேடியம் டயல் நிறுவனத்திற்கு எதிராக கேத்தரின் வுல்ஃப் டோனோஹூ தாக்கல் செய்தார். அவரது மரணத்திற்குப் பிறகு அவரது புகைப்படங்களை நாளிதழ்கள் வெளியிட்டன.
இல்லினாய் தொழில்துறை ஆணையத்தின் முன்னிலையில் நடந்த பல விசாரணைகளுக்குப் பிறகு, ஒட்டாவாவின் ரேடியம் கேர்ள் 1938 இல் இந்த வழக்கை வென்றார்.
ரேடியம் டயல் நிறுவனம் பல முறையீடுகளை தாக்கல் செய்தது. 1939 அக்டோபர் 23 அன்று, அமெரிக்க உச்ச நீதிமன்றம் நிறுவனத்தின் இறுதி மேல்முறையீட்டை விசாரிக்க மறுத்து, கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.
தீர்ப்பு வெளியானது. ஆனால் ரேடியத்தின் விளைவு விரைவில் முடிவுக்கு வரப்போவதில்லை. 40 களின் பிற்பகுதியில் தனது முதல் திருமண நாளன்று காலமான ஒரு பெண் உறவினரைப் பற்றி, டோனோஹூ விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்கையில் மேரியோன் கெனிக் குறிப்பிட்டார்.
ஓராண்டிற்குள் தளர்வாகிவிட்ட திருமண உடையில் அந்தப்பெண் புதைக்கப்பட்டார்.
வழக்குகள் தீர்க்கப்படுவதற்கு முன்பே காலமான பல பெண்களில் கேத்ரீன் வுல்ஃப் டோனோஹூ ஒருவர் என்று அர்லீன் பால்கன்ஸ்கி குறிப்பிட்டுள்ளார். 1938 ஜூலை 27 ஆம் தேதி அவர் காலமானார். ஆனால், அவருக்குப் பின் வந்த பெண்களுக்கு தொழில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் குறித்த வழிகாட்டிகளை நிர்ணயம் செய்ய அவரது சட்டப் போராட்டம் காரணமாக அமைந்தது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













