அமெரிக்கா முதல் அமேசான் வரை: பூர்வகுடி மக்களை கொரோனா தொற்று எப்படி சீரழிக்கும்? அவர்கள் எதிர்காலம் என்னவாகும்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், டெரி ஹான்சன்
- பதவி, பிபிசி
தொற்று நோய்கள் உருவாகும்போது நாட்டின் பூர்வீக குடிமக்களை அதிக அளவில் பாதிக்கும் ஆபத்து உள்ளது. இதில் கோவிட்-19 மட்டும் விதிவிலக்கு கிடையாது. தேசங்களையும், பூர்வீக குடிமக்களையும் இது அழித்துவிடக் கூடும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
விக்டோரியா டாவ்லி-கோர்ப்பஜ் ஜெனீவாவில் விமானத்தில் இருந்து வெளியே வந்தபோது, ஐக்கிய நாடுகள் சபையின் கூட்ட நிகழ்வுகளைப் பதிவு செய்யும் சிறப்பு அதிகாரியாக, பல நாடுகளுக்கு மேற்கொண்ட பயணத்தில் முதலாவது நாடாக அது இருந்தது.
நாட்டின் பூர்வகுடி மக்களின் உரிமைகள் தொடர்பான விஷயங்கள் தொடர்பான கூட்டங்கள் குறித்து அவர் சிறப்புக் கவனம் செலுத்துவார். ஆனால், புதிய மற்றும் வேகமாக மாறிவரும், தனிமைப்படுத்தல் விதிமுறைகள் காரணமாக அதுதான் அவருடைய கடைசி நாட்டுப் பயணமாக அமைந்துவிட்டது. பயணத்தின் மீதி பகுதிகள் ரத்து செய்யப்பட்டுவிட்டன.
கோவிட்-19 பாதிப்பு பற்றி கவனம் செலுத்துவதற்காக டாவ்லி-கோர்ப்பஜ் தாயகமான பிலிப்பைன்ஸ் திரும்பினார். நாட்டின் பூர்வீக மக்கள் மீது இந்த வைரஸ் ஏற்படுத்தும் தாக்கம் காரணமாக, ``உலக வரைபடத்தில் இருந்தே நம்மை நீக்கிவிடக் கூடிய அளவுக்கு ஆபத்து உள்ளது'' என்பதை அப்போது அவர் உணர்ந்தார்.
தொற்றுநோய் பாதிப்பு ஏற்படும்போது, மற்ற மக்களை விட, உலகெங்கும் வாழும் பூர்வீகக் குடிமக்கள் பாதிக்கப்படுவதற்கு அதிக ஆபத்து உள்ளதாகக் கருதப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
உதாரணமாக, 2009 ஆம் ஆண்டில் கனடாவில் எச்1என்1 வைரஸ் பரவிய போது, பூர்வீகக் குடிமக்களின் மக்கள் தொகை 3.4 சதவீதமாக மட்டுமே இருந்தாலும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கனடா பூர்வீகக் குடிகள் எண்ணிக்கை 16 சதவீதம் அளவுக்கு இருந்தது.
கோவிட்-19 இதில் விதிவிலக்கு கிடையாது. அமெரிக்காவில் கோவிட் நோயால் 3,600 வெள்ளையின அமெரிக்கர்களில் ஒருவர் உயிரிழக்கிறார்.
அமெரிக்க பூர்வீகக் குடிகளில் 2,300 பேருக்கு ஒருவர் என்ற அளவில் மரண விகிதம் உள்ளது. அமெரிக்காவில் இந்த நோயால் அதிகமாகப் பாதிக்கப்பட்ட இரண்டாவது இனக் குழுவாக இவர்கள் இருக்கின்றனர்.
கருப்பு அமெரிக்கர்கள் முதல் இடத்தில் உள்ளனர். மே மாத மத்தியில், தென்-மேற்கு அமெரிக்காவில் 27 ஆயிரம் சதுர மைல்கள் (70 ஆயிரம் சதுர கிலோமீட்டர்) அளவிற்கு உள்ள நவஜோ பகுதியில், அமெரிக்காவில் கோவிட்-19 நோய் பாதிப்பு நியூயார்க் மாகாணத்தைவிட அதிகமாக இருந்தது.
``இந்த நோய் நெருக்கடியில் உயிர் தப்புவதற்கு தேவையான மருத்துவமனைகள், டாக்டர்கள், வென்டிலேட்டர்கள் போன்றவை நம்மிடம் குறைவாகவே உள்ளன'' என்று டாவ்லி கோர்ப்பஜ் கூறியுள்ளார்.
``பூர்வீகக் குடிமக்களுக்கு ஏற்கெனவே வேறு பல நோய்கள் உள்ளன. சத்து குறைந்த உணவுகள் மட்டுமே சாப்பிடுவதால், எளிதில் நோய்க்கு ஆளாகும் ஆபத்து ஏற்படுகிறது'' என்று அவர் குறிப்பிடுகிறார்.
அமேசான் காடுகளில் வாழும் பூர்வகுடி மக்களுக்கு மருத்துவ உதவி சென்றடைய பல நாட்கள் ஆகும். அதனால் கோவிட்-19 பாதிப்பு காரணமாக மரணம் அடையும் ஆபத்து அவர்களுக்கு அதிகமாக உள்ளது.
அமேசான் காடுகளில் குறைந்தது 38 பூர்வீகக் குடி குழுக்களைச் சேர்ந்த 19,329 பேர் ஜூலை 24 வரையிலான காலத்தில் கோவிட் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதுதவிர 677,719 பேருக்கு கோவிட் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர் பிரேஸிலைச் சேர்ந்தவர்கள் என்று ரெப்பம் கிறிஸ்தவ தேவாலய அமைப்பு தெரிவித்துள்ளது.
``காடுகள் அழிப்பு, காட்டுத் தீ மற்றும் தொழிற்சாலை நடவடிக்கைகளுக்காக இயற்கை வளங்கள் பயன்பாடு, வேளாண் வியாபாரத்தை விரிவுபடுத்துதல் மற்றும் பருவநிலை மாற்றம் போன்ற காரணங்களால், அவர்கள் ஏற்கெனவே சூழலியல் பாதிப்பில் `நெருக்கடியான கட்டத்தில்' இருக்கிறார்கள்'' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
அமேசான் பூர்வகுடி மக்களுக்கு ``இந்த நோய்த் தொற்று இன்னும் ஒரு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு நாளும், இனக் குழுவின் பாதிப்பு அபாயம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது'' என்று அமேசான் வாட்ச் நோய்த் தொற்று அமைப்பின் செயல் இயக்குநர் லெய்லா சலஜார்-லோப்பஜ் கூறியுள்ளார்.
உயிர் பிழைத்தலுக்கான செயல்பாடு
பூர்வகுடி மக்கள் இதற்கு எதிராகப் போராடி வருகின்றனர்.
``அரசுகள் உதவி அளிக்காத நிலையில், தேவையான உதவிகளை அளிப்பதற்கு பூர்வகுடி மக்கள் எந்த அளவுக்கு முன்வருகிறார்கள் என்பதைப் பார்த்து வியப்படைந்தேன்'' என்று டாவ்லி-கோர்ப்பஜ் கூறினார்.
``அவர்கள் முழு உடல் பாதுகாப்புக் கவச உடைகள் (பி.பி.இ) மற்றும் கிருமிநாசினிகள் ஆகியவற்றை அளிக்கிறார்கள். தாங்களாகவே முகக்கவச உறை தயாரித்துள்ளனர். கோவிட்-19 குறித்த தகவல்கள் தங்களுடைய மொழிகளில் அளிக்கப்படுவதை அவர்கள் உறுதி செய்துள்ளனர். உணவு மற்றும் இதர தேவைகளை அவர்கள் விநியோகம் செய்து வருகின்றனர்'' என்று அவர் விவரித்தார்.
தனிமைப்படுத்திக் கொள்ளவும் அவர்கள் முன்வருகிறார்கள். ஈக்குவடாரில் சியெக்கோப்பாய் நாட்டில், பூர்வகுடியைச் சேர்ந்த 45 முதியவர்கள், பெரியவர்கள் மற்றும் குழந்தைகள், காட்டுக்குள் நீண்ட தூரம் பயணம் மேற்கொண்டு, மூதாதையர்கள் வாழும் லகர்ட்டோகோச்சா பகுதிக்கு சென்றுவிட்டனர். இதன் மூலம் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பியுள்ளனர் என்று அந்த நாட்டின் அதிபர் ஜஸ்டினோ பியாகுவாஜே கூறியுள்ளார்.
தாத்தா ஒருவர் இறந்துவிட்டதாக பியாகுவாஜே தெரிவித்தார். ஆனால் தனிமைப்படுத்திக் கொண்ட பிறகு, யாருமே மரணம் அடையவில்லை.
அலாஸ்கா நாட்டில் 1918-19-ல் சளிக்காய்ச்சல் தொற்று நோய் ஏற்படுத்திய பேரழிவை, பூர்வகுடி மக்கள் பலர் நினைவு வைத்துள்ளனர். அங்கு 200க்கும் மேற்பட்ட தொலைதூரத்தில் வாழும், அலாஸ்கா சமுதாயத்தினர் தாங்களாகவே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். தெற்கு பசிபிக் பிராந்தியத்தில் குக் தீவு சங்கிலித் தொடரில் பெரியதாக இருக்கும் ராரோட்டோங்கா நாட்டில் முடக்கநிலை அமல் செய்து, ஒட்டுமொத்த நாடுமே தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக் கொண்டுள்ளது.
அமெரிக்காவில் நவஜோவில், மற்ற மலைவாழ் மக்களின் நாடுகளைப் போல, எல்லைகள் மூடப்பட்டு, ஊரடங்கு அமல் செய்யப்பட்டுள்ளது. அங்கு 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நவஜோ மக்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. ``அது மக்கள் தொகையில் 20 சதவீதத்துக்கும் அதிகம்'' என்று நவஜோ அதிபர் ஜோனாதன் நெஜ் தெரிவித்தார்.
``அமெரிக்காவில் வேறு எந்த மாகாணத்தையும்வட, வேறு பல நாடுகளையும்வட நாங்கள் அதிக அளவில் மருத்துவப் பரிசோதனைகள் செய்திருக்கிறோம்'' என்று அவர் குறிப்பிட்டார்.
கிராண்ட் கேன்யான் தேசிய பூங்காவை அமெரிக்க தேசிய பூங்கா சேவை அமைப்பு மே 15 ஆம் தேதி மக்கள் பார்வைக்குத் திறந்துவிட்டது. இதன் ஒரு பகுதி நவஜோ நாட்டில் உள்ளது. நவஜோ நாடு எதிர்ப்பு தெரிவித்த போதிலும், இதை அமெரிக்கா அனுமதித்துள்ளது.
கேன்யான் சரணாலயத்தின் உள்பகுதியில் வாழும் 15 சதவீதம் பேர் மலைவாழ் இனத்தைச் சேர்ந்த முதியவர்கள். பலருக்கும் நீரிழிவு அல்லது ஆஸ்துமா உள்ளது. அதனால் கோவிட்-19 பாதிப்புக்கு எளிதில் ஆட்படும் ஆபத்து உள்ளது. தங்கள் குடும்பத்தினரின் வாழ்வாதாரத்துக்கும், விலங்குகளுக்கு உணவு அளிக்கவும் அவர்கள் சுற்றுலாப் பயணிகளை நம்பியுள்ளதாக மலைவாழ் மக்களின் தலைவர்கள் கூறுகின்றனர். வருவாய் இழப்பை ஈடுகட்டுவதற்கு GoFundMe என்ற இயக்கத்தை அவர்கள் தொடங்கியுள்ளனர்.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?

சமுதாய அளவில் பெரிய பிரச்சினைகளை கோவிட் -19 பாதிப்பு ஏற்படுத்துகிறது என்ற நிலையில், தனிமைப்படுத்தல் காரணமாக வேறு பிரச்சினைகளும் உருவாகியுள்ளன. ``சந்தைகளின் தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான பொருட்கள் கிடைக்காமல் போகிறது'' என்று டாவ்லி-கோர்ப்பஜ் கூறினார்.
ஆப்பிரிக்காவில், நிலையற்ற சுகாதார வசதிகள் மற்றும் முறையற்ற கழிவுகள் அகற்றல் வசதி காரணமாக, பூர்வகுடி மக்களுக்கு கோவிட்-19 பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது என்று ஒரு தன்னார்வ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஹிண்டோவ் அவ்மரோ இப்ரஹிம் தெரிவித்தார். சமூக இடைவெளி மற்றும் முடக்கநிலை காரணமாக வேறு பிரச்சினைகள் ஏற்படலாம். மக்கள் ஏதாவது வாங்குவதற்கும், விற்பதற்கும் சந்தைகளுக்குச் செல்ல வேண்டியிருப்பதால் இந்த நிலை உள்ளது.
``சந்தைக்குச் செல்ல முடியாவிட்டால், அன்றைய நாளுக்கு அவர்களுக்கு அடிப்படை உணவு கிடைக்காது'' என்று இப்ரஹிம் கூறினார். ``பருவநிலை மாற்றத்தின் தாக்கங்களால் ஏற்கெனவே எங்களுடைய விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த நெருக்கடி, ஏழ்மையை பரம ஏழ்மையாக மாற்றியுள்ளது'' என்கிறார் அவர்.
பூர்வகுடி மக்களுக்குள் தகவல் தொடர்பு வசதி, முடக்கநிலை அமலாக்கம் போன்றவை கூடுதல் சவால்களாக உள்ளன. ஆஸ்திரேலியாவில், நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் ``அவசியமற்ற காரணத்துக்கு வெளியில் செல்ல'' தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை மீறினால் 11 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர்கள் அளவுக்கு அபராதம் விதிக்கப்படும். அத்துடன் சிறைத் தண்டனையும் உண்டு. இனவாத குழுக்களைவிட தனிநபர் வருமானம் 33 சதவீதம் குறைவாக உள்ள நிலையில் பூர்வீகக் குடிமக்கள் இந்த அபராதத்தைச் செலுத்துவது மிகவும் சிரமம். அவர்கள் பிரதானப் பகுதிகளில் இருந்து தொலைதூரத்தில் வாழ்வதால், நோய்த் தொற்று காலத்தின் விதிமுறைகள் அவர்களுக்குத் தெரிந்திருக்கும் என்று சொல்ல முடியாது.
தங்களுடைய நிலங்களுக்கு அவர்களுக்கு சட்டபூர்வ உரிமைகளை அறிந்து கொண்டால், பூர்வகுடிகளும், அந்தந்தப் பகுதி மக்களும் வைரஸ் பாதிப்பில் இருந்து நல்ல முறையில் தங்களைக் காத்துக் கொள்ள முடியும் என்று டாவ்லி-கோர்ப்பஜ் கூறுகிறார். ``முடக்கநிலையை அவர்கள் நல்லபடியாக அமல் செய்து, அவர்களின் வாழ்க்கைக்குத் தேவையான ஆதாரவளங்களை கையாள முடியும்'' என்றார் அவர்.
இருந்தபோதிலும் நிலங்களைக் கைப்பற்றிக் கொள்வதற்கு அரசுகளும், தனியார் துறையினரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். பூர்வீகக் குடிகள் மற்றும் உள்ளூர் சமுதாயங்களுக்கு எதிராக அவர்கள் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகிறார்கள் என்று டாவ்லி-கோர்ப்பஜ் தெரிவித்தார்.
``இந்தோனேசியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளில் சுற்றுச்சூழல் ஒழுங்குமுறைகள் நீக்கப்பட்டுள்ளன'' என்று அவர் கூறினார். ``கென்யா மற்றும் உகாண்டாவில் நிலத்தைக் கைப்பற்றும் செயல்பாடுகள் அதிகமாக உள்ளன'' என்று அவர் குறிப்பிட்டார்.
முதியவர்களுக்கு ஆபத்து
பூர்வகுடி மக்களில் வயது முதிர்ந்தவர்களுக்கான ஆபத்து உள்ளது என்பது அவர்களுக்கு கவலை தரும் மற்றொரு விஷயமாக இருக்கிறது. ``மூலிகை மருத்துவம் மற்றும் ஷாமானிக் சிகிச்சையில் எங்கள் முதியவர்கள் கைதேர்ந்தவர்கள். ஆனால் அடுத்த தலைமுறையினருக்கு அவை கற்பிக்கப்படவில்லை'' என்று எக்வடோர் - பாஸ்டாஜா வாவோரனி தேசிய ஒருங்கிணைப்புக் கவுன்சில் தலைவர் நெமோன்ட்டே நென்குவிமோ கூறினார்.

பட மூலாதாரம், Amazon Frontiles y Alianza Ceibo via Reuters
வாய் மொழியாக மட்டுமே இந்த சிகிச்சை முறைகள் அடுத்த தலைமுறையினருக்கு கற்பிக்கப்படுவதால், மற்றவர்களுக்குக் கற்றுத் தருவதற்கு முன்னதாக பெரியவர்கள் எதிர்பாராத மரணத்தை அடைய நேரிட்டால், அந்தத் திறமை அத்துடன் அழிந்து போகிறது. ``நாம் நல்லிணக்கமான வாழ்வை வாழ்வதற்கு ஒவ்வொரு உயிரினத்துக்கும் கற்பிக்கப்பட்டுள்ளது என்பதை உயிரிழன சங்கிலித் தொடர்புகள் மூலம் அறிய முடிகிறது'' என்று 80 வயதான டெல்பின் பியாகுவாஜே கூறினார். கிழக்கு ஈக்குவடார் மற்றும் வடக்கு பெருவில் வாய்யா பகுதியில் சியெக்கோப்பாய் சேர்ந்த ஷாமானிக்கா சிகிச்சையாளராக இவர் இருக்கிறார்.
``எங்களுடைய அறிவு இல்லாமல் போவதால், எங்கள் அடையாளத்தை, கலாச்சாரத்தை, தொலைநோக்குப் பார்வையை இழந்து வருகிறோம். நாங்கள் எதிர்கொண்டிருக்கும் சூழ்நிலை பற்றி கவலை கொண்டிருக்கிறோம். இப்போது மரணம் அடைந்த தாத்தாவுடன், அவருடைய பாரம்பரிய அறிவும் போய்விட்டது. இந்த மக்களின் ஒட்டுமொத்த வரலாற்று நினைவுகளும் அழிந்துவிடுமோ என்ற அச்சம் எங்களுக்கு உள்ளது'' என்று அவர் கூறினார்.
உலகம் முழுக்க பூர்வகுடி மக்கள் ஏற்கெனவே பல அச்சுறுத்தல்களுக்கு ஆளாகியுள்ளனர். கூடுதல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்பதுடன், இந்த நோய்த் தொற்றால் சில நாடுகள் உயிர் பிழைத்திருப்பதை கூட சிரமமாகிவிடுமோ என்ற அச்சம் உள்ளது என்று சலஜார் லோப்பஜ் கூறினார்.
சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












