கேரள மாநிலம் இடுக்கி மண் சரிவில் தமிழ்நாட்டு தொழிலாளர்கள் 50க்கும் மேற்பட்டோரை காணவில்லை

இடுக்கி

பட மூலாதாரம், Getty Images

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பெட்டி முடி எஸ்டேட் பகுதியில் தேயிலை தோட்டம் உள்ளது. இதில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கயத்தாறு பேரூராட்சி பாரதிநகர் பகுதியிலிருந்து தேயிலை பறிக்கும் வேலைக்கு பலர் குடும்பமாக சென்று அங்கேயே தங்கியுள்ளனர்.

தற்போது இடுக்கி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக அங்கு மண்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமானோர் சிக்கி உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் கயத்தாறு பாரதி நகரைச் சேர்ந்தவர்கள் இறந்ததை அறிந்த அவர்களது உறவினர்கள் வீடுகளுக்கு முன்பு திரண்டு கதறி அழுதனர்.

இடுக்கியில் உள்ளவர்களின் உறவினர்கள்

பின்னர் கயத்தாறு வட்டாட்சியர் அலுவலகம் சென்று இறந்தவர்கள் பட்டியலை வழங்கும் படி கேட்டனர்.

இதில், சுமார் 55 பேருக்கு மேல் மண்ணில் புதைந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இறந்தவர்கள் குறித்து கயத்தாறு வட்டாட்சியர் பாஸ்கரன் தலைமையிலான அதிகாரிகள் தகவல் சேகரித்து வருகின்றனர்.

நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவரின் உறவினர் செல்வி பிபிசி தமிழிடம் பேசுகையில், "இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள தேயிலை தோட்டத்தில் நான்கு தலைமுறைகளாக அன்றாட கூலி வேலை பார்த்து வருகிறார்கள். நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் அயர்ந்து தூங்கும் போது ஏற்பட்ட ஒரு கொடூரச் சம்பவத்தில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 30 குடும்பங்களை சேர்ந்த 80க்கும் மேற்பட்ட மக்கள் மண்ணுக்குள் புதைந்து இறந்து விட்டனர்," என்கிறார்.

ஆனால் இடுக்கி மண்சரிவு சம்பவத்தில் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர் என கேரளாவின் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இடுக்கி மண் சரிவு.
படக்குறிப்பு, இடுக்கி மண் சரிவு.

"இதுகுறித்த முழுமையான தகவல் எங்களுக்கு இன்னும் சரிவர கிடைக்கவில்லை ஆனால் இதை கேள்விப்பட்ட எங்கள் ஊர் மக்கள் உடனடியாக கோவில்பட்டி தாசில்தார் உதவியுடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இ பாஸ் பெற்று மூணாறு சென்றனர்." என்கிறார் செல்வி.

"எங்கள் கிராமத்து மக்களளை கேரளாவுக்குள் செல்ல விடாமல் எல்லை சோதனைச் சாவடியில் தடுத்து வைத்திருந்தனர். பின்னர் தூத்தக்குடி மாவட்ட நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்ததையடுத்து அவர்கள் அனுமதிக்கபட்டனர். பகல் 11 மணிவரை மட்டும் உங்களால் சடலங்களை பார்க்க முடியும் பின்னர் அனுமதி வழங்கப்பட மாட்டாது என கேரள அரசு தெரிவித்துள்ளது," என்கிறார் செல்வி.

இது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பிபிசி தமிழிடம் பேசுகையில், "நான்கு தலைமுறைக்கு முன் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாரை சேர்ந்த மக்கள் தேயிலை தோட்டப் பணிக்காக மூணாறு சென்று அங்கு வசித்து வருகின்றனர். தற்போது கேரள அரசு சார்பில் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

தமிழக அரசு சார்பில் சம்பவ இடதிற்கு அரசு அதிகாரிகளை அனுப்பி முழு வீச்சில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மூணாறு நிலச்சரிவில் இறந்தவர்களின் உறவினர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து மூணாறு செல்லவும், அங்குள்ள உடலை கயத்தாருக்கு கொண்டு வரவும் மாவட்ட நிர்வாகத்திடம் உதவி கேட்டால், நிச்சயம் அதற்கான முழு ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: