மகாதீர் மொஹம்மத்: 95 வயதில் புதிய அரசியல் கட்சி தொடங்கி ஆட்சியாளர்களுக்கு சவால் விடுக்கும் தலைவர்

மகாதீர் மொஹம்மத்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆகஸ்ட் 7-ம் தேதி வெள்ளிக்கிழமை நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் மகாதீர் மொஹம்மத்.

மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் மொஹம்மத், தமது 95-ஆவது வயதில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார்

இந்த புதிய கட்சியால் தேர்தலில் போட்டியிட்டு ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றி பெற இயலாது என்றாலும், மலேசியாவின் அடுத்த ஆட்சியாளர்கள் யார் என்பதைத் தீர்மானிக்கக்கூடிய சக்தியாக உருப்பெறும் என்று தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனது கட்சியை எதிர்கொள்ளும் தைரியம் இன்றைய ஆட்சியாளர்களுக்கு உள்ளதா என்று மகாதீர் சவால் விடுத்துள்ளார். புதுக்கட்சிக்கு தன் மகனையே அவர் தலைவராக்கியுள்ளார்.

மகாதீர் புது கட்சி தொடங்கி இருப்பது மலேசிய அரசியல் களத்தில் பலரைப் புருவம் உயர்த்த வைத்துள்ளது. அதேவேளையில் இந்த புதிய கட்சியின் மூலம் அவர் எதைச் சாதிக்க விரும்புகிறார் எனும் கேள்வியும் எழுந்துள்ளது.

புதிய கட்சி தொடக்கத்தின் பின்னணி

கடந்த பிப்ரவரி மாத இறுதியில் பிரதமர் பதவியில் இருந்து மகாதீர் மொஹம்மத் விலகியதை அடுத்து மலேசிய அரசியல் களத்தில் எதிர்பாராத திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. பிப்ரவரி மாதம் வரை ஆட்சிப் பொறுப்பில் இருந்த பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி சார்பில் பிரதமரானார் மகாதீர்.

மகாதீர் மொஹம்மத்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மகாதீர் மொஹம்மத்

அக்கூட்டணியில் மகாதீர் சார்ந்திருந்த பெர்சாத்து கட்சி இடம்பெற்றிருந்தது. எனினும் கூட்டணியின் முக்கியத் தலைவரான அன்வர் இப்ராஹிம் அடுத்த பிரதமராகப் பொறுப்பேற்க ஏதுவாக மகாதீர் பதவி விலகவேண்டும் எனும் கோரிக்கை வலுத்தது. இதையடுத்து அவர் முன்னறிவிப்பு ஏதுமின்றி திடீரென பதவி விலகினார்.

அதன் பின்னர் ஏற்பட்ட அதிரடி அரசியல் நகர்வுகளை அடுத்து நடப்புப் பிரதமர் மொகிதீன் யாசின் பிரதமரானார். மேலும் பெர்சாத்து கட்சியில் இருந்து மகாதீர், அவரது மகன் முக்ரிஸ் உள்ளிட்ட 5 நாடாளுமன்ற உறுப்பினர்களை நீக்கினார்.

இதையடுத்து மகாதீர் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கில் சாதகமான தீரப்பு கிடைக்காததை அடுத்து இன்று புதுக்கட்சி அறிவிப்பை மகாதீர் வெளியிட்டார்.

"ஆட்சியாளர்களை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுப்போம்"

இதற்கான செய்தியாளர் சந்திப்பு வெள்ளிக்கிழமையில் மாலை கோலாலம்பூரில் நடைபெற்றது. அப்போது தங்களால் எந்த வகையிலும் ஆட்சியைப் பிடிக்க இயலாது என்று அவர் பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.

எனினும் மலேசியாவில் அடுத்து யாருடைய ஆட்சி அமையும் என்பதைத் தீர்மானிக்கும் குழுவாக தாங்கள் விளங்கமுடியும் என செய்தியாளர் சந்திப்பு நடந்த அரங்கில் கூடியிருந்த திரளான ஆதரவாளர்கள் மத்தியில் அவர் குறிப்பிட்டார்.

தமது கட்சி சுதந்திரமான மலாய் கட்சியாகச் செயல்படும் என்று குறிப்பிட்ட மகாதீர், ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு தமது கட்சி முக்கியத்துவம் அளிக்கும் என்றார். தாம் முன்பு அங்கம் வகித்த பெர்சாத்து கட்சியை நடப்பு பிரதமர் மொகிதீன் யாசின் கடத்திச் சென்றுவிட்டதாகவும் அதன் காரணமாகவே புதுக்கட்சி தொடங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தங்கள் கட்சிக்கு இன்னும் பெயர் சூட்டவில்லை என்றும் மலேசிய சங்கப்பதிவிலாகாவில் பதிவு செய்யப்படவில்லை என்றும் தெரிவித்த அவர், தங்கள் கட்சி தற்போதுள்ள பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பெரிக்கத்தான் நேசனல் கூட்டணியில் இணையாது என்று திட்டவட்டமாக அறிவித்தார்.

"அடுத்த பொதுத்தேர்தலில் நாங்கள் போட்டியிடுவோம். அப்போது சில கட்சிகளுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள வாய்ப்புள்ளது. எனினும் தேர்தலுக்குப் பிறகு ஏதேனும் ஒரு குழுவுடன் இணையவும் வாய்ப்புள்ளது.

"இப்போது நாங்கள் சுதந்திரமாக உள்ளோம். என்ன நோக்கத்துக்காக இப்புதிய கட்சி தொடங்கப்படுகிறதோ அந்த நோக்கத்தை நிறைவேற்றக்கூடிய கட்சியுடன் இணைவது குறித்து எங்களால் முடிவெடுக்க முடியும்," என்றார் மகாதீர்.

அன்வார் கட்சியுடன் பிரச்சனை

சில கட்சிகளுடன் இணைந்து மலேசியாவில் மூன்றாவது அணியை உருவாக்கும் திட்டம் உள்ளதா? என்ற கேள்விக்கும் மேற்குறிப்பிட்ட விளக்கத்தையே மகாதீர் அளித்தார்.

சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் மகாதீர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் மகாதீர்.

பக்காத்தான் கூட்டணி சார்பில் பிரதமராக இரண்டாண்டுகள் பதவி வகித்த நிலையில் ஏன் அந்தக் கூட்டணியுடன் இணையவில்லை? என்ற கேள்விக்கு அன்வார் இப்ராஹிம் தலைமையிலான பிகேஆர் கட்சியுடனான பிரச்சினைகளே காரணம் என்று சுட்டிக்காட்டினார் மகாதீர்.

என்னதான் கட்சி தொடங்குவதாக அறிவித்துவிட்டாலும் சங்கப்பதிவிலாகாவில் சில பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் கடந்த 14வது பொதுத்தேர்தலுக்கு முன்பு பெர்சாத்து கட்சிக்கும், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கும் சில பிரச்சினைகள் எழுந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

நடப்பு ஆட்சியாளர்களான பெரிக்கத்தான் நேஷனல் தனது புதுக்கட்சியைக் கண்டு அஞ்சவில்லை என்பதை நிரூபிக்கத் தயாரா? என்று அவர் சவால் விடுத்தார்.

"கட்சியைப் பதிவு செய்வதில் சில பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டி இருக்கும் எனக் கருதுகிறேன். அதேசமயம் நடப்பு அரசாங்கம் இந்தப் பதிவை மேற்கொள்ள துணிச்சலுடன் அனுமதிக்கும் என்றும் நம்புகிறேன்," என்று குறிப்பிட்ட மகாதீர், புதுக்கட்சிக்குத் தனது மகன் முக்ரிஸ் தலைவராகவும் தாம் அவைத்தலைவராகவும் பொறுப்பேற்கப் போவதாக தெரிவித்தார்.

இப்புதிய கட்சியில் மற்ற இனத்தவர்களை உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்வது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்றும், மலேசியா பல்வேறு இன மக்களைக் கொண்ட நாடு என்பதை தாம் மனதிற் கொண்டிருப்பதாகவும் மகாதீர் மேலும் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: