மலேசியாவை அச்சுறுத்தும் ’சிவகங்கை கிளஸ்டர்’: அதிவேக தொற்று பரவியது எப்படி?

மலேசியா

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், சதீஷ் பார்த்திபன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

தமிழ்நாட்டின் சிவகங்கை பகுதியில் இருந்து புறப்பட்டு அண்மையில் மலேசியா வந்த நபரால், கொரோனா வைரஸ் புதிய கோணத்தில் பொதுமக்களை அச்சுறுத்தத் துவங்கியுள்ளது.

மலேசியாவின் கெடா மாநிலத்தைச் சேர்ந்த 57 வயதான அந்த ஒரு நபர் மூலம் இதுவரை மூன்று மாநிலங்களைச் சேர்ந்த 43 பேருக்கு வைரஸ் தொற்று பரவியுள்ளது.

இதையடுத்து சுமார் 3,200க்கும் மேற்பட்டவர்களுக்குப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

மேலும், சிவகங்கை நபருடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காண வசதியாகவும், தொற்றுப்பரவலை கட்டுப்படுத்தவும் கெடா மாநிலத்தின் நான்கு பகுதிகளில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அப்பகுதிகளில் வசிக்கும் சுமார் 7 ஆயிரம் பேருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

சகஜமாகிவிட்ட இன்றைய சூழலில் ஏன் இந்தளவு பரபரப்பு?

காரணம், சிவகங்கை நபர், கொரோனா வைரஸின் திரிபு என கருதப்படும் அதிக வீரியமுள்ள தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என மலேசிய சுகாதார அமைச்சு கருதுவதுதான்.

கடந்த மார்ச் முதல் இதுநாள்வரை கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் மிகக் கச்சிதமாகச் செயல்பட்டுள்ளது மலேசியா. இதனால் வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது. நாட்டின் எல்லைகள் இன்னும் திறக்கப்படவில்லை என்றாலும், மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல திரும்பிக் கொண்டிருக்கிறார். இத்தகைய சூழலில் புதிய சவாலை எதிர்கொண்டுள்ளது மலேசிய அரசு.

கொரோனா தொற்றுக்குழு (கொத்து) என்றால் என்ன?

ஒரு தனி நபரிடம் இருந்து பலருக்கு தொற்று பரவும்போது (கொத்துக்கொத்தாக பாதிக்கப்படும்போது) அதை கிருமித் திரள் - அல்லது - கிருமிக்குழு - அல்லது கிருமிக்கொத்து (CLUSTER) என்று குறிப்பிடுகிறார்கள். இத்தகைய கிருமிக் கொத்துகளில் ஒன்றிரண்டு குழுக்கள் மட்டும் அதிவேகமாகப் பரவும் தன்மையைக் கொண்டிருக்கும். அவை 'சூப்பர் ஸ்பிரெட்டர்' (Super Spreader) எனக் குறிப்பிடப்படுகின்றன.

Banner image reading 'more about coronavirus'
Banner

கொரோனா வைரஸை பொறுத்தவரை மருத்துவரீதியில் 'Genome 614' என்பது அதன் திரிபாகக் கருதப்படுகிறது. 'சூப்பர் ஸ்பிரெட்டர்' வகையைச் சார்ந்த இந்த வைரஸ் திரிபு, அதன் இயல்பைவிட சற்று வீரியமானது என்று கூறப்படுகிறது. இதன் இதர தன்மைகள் குறித்து அறிய வேண்டும் எனில் மரபணு ரீதியில் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள்.

எப்படி உருவானது 'சிவகங்கா' தொற்றுக்குழு?

சிவகங்கை நபர் கடந்த ஜூலை 23ஆம் தேதி தமிழகத்திலிருந்து மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் வந்தடைந்துள்ளார். விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட பரிசோதனையின்போது நோய்த்தொற்றுக்கான எந்தவித அறிகுறிகளையும் அவரிடம் காணமுடியவில்லை.

இதையடுத்து குறிப்பிட்ட நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தப்பட்டார். இங்கிருந்துதான் பிரச்சினை துவங்கியது.

மலேசிய சுகாதார அமைச்சு வகுத்துள்ள விதிமுறைகளை அவர் சரியாகப் பின்பற்றவில்லை. இதனால் உணவகம் நடத்தி வரும் அவரிடமிருந்து வைரஸ் தொற்று பலருக்குப் பரவியது.

ஜூலை 28ஆம் தேதி சுகாதார அமைச்சு அவருக்கு மீண்டும் பரிசோதனை நடத்தியபோது வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. ஆனால் அதற்குள் சிவகங்கை நபரின் மகன், உணவக ஊழியர்கள் நால்வரை வைரஸ் தொற்றியது.

மலேசியா

பட மூலாதாரம், Getty Images

மேலும் பலருக்கு வைரஸ் தொற்றியிருக்க வாய்ப்புள்ளதாகக் கருதிய மலேசிய சுகாதார அமைச்சு, இந்த தொற்றுக் குழுவுக்கு 'சிவகங்கா' என பெயரிட்டுள்ளது.

எங்கெல்லாம் எப்படியெல்லாம் பரவியது தொற்று?

சிவகங்கை நபர் நடத்தி வரும் உணவகத்தின் அருகே பல பள்ளிகள் உள்ளன. அவற்றில் படிக்கும் குழந்தைகளுடன் தொடர்புடையவர்கள் இந்த உணவகத்துக்கு வந்து சென்றிருக்கும் வாய்ப்புள்ளது என்பதால் அவர்களைக் கண்டறியும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

அந்த நபரின் மகன், 4 ஊழியர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் ஜூலை 31ஆம் தேதி வாடிக்கையாளர்கள் இருவருக்கு வைரஸ் தொற்றியது உறுதியானது. அந்த வாடிக்கையாளர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 2 வயது குழந்தையும் 60 வயது நபரும் பின்னர் இந்தப் பட்டியலில் சேர்ந்தனர்.

மேலும் 7 மற்றும் 10 வயது சிறுவர்களும் 64 வயது வாடிக்கையாளர் ஒருவரும் என 'சிவகங்கா' தொற்றுக் குழுவின் பட்டியல் மூலம் மலேசியாவில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 ஆயிரமாகக் கடந்தது.

இதையடுத்து கெடா மாநிலத்தில் சிவகங்கை நபரின் உணவகம் இயங்கும் பகுதி உட்பட 4 பகுதிகளில் தற்போது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலுக்கு வந்துள்ளது. அங்குள்ள பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் வசிக்கும் சுமார் 7 ஆயிரம் பேருக்கு கோவிட் 19 பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

கெடாவில் இருந்து பெர்லிஸ், பினாங்கு ஆகிய மாநிலங்களுக்கும் சிவகங்கா தொற்று பரவியுள்ளது.

எகிப்திலும் பாகிஸ்தானிலும் அடையாளம் காணப்பட்டவை

இது கவலையை ஏற்படுத்தி இருப்பதாகச் சொல்கிறார், மலேசிய சுகாதார அமைச்சின் பொது ஆணையர் நூர் ஹிஷாம்.

"நாட்டில் கண்டறியப்பட்ட இதர கொரோனா தொற்றுக் குழுக்களைவிட 'சிவகங்கா' தொற்றுக்குழு மூலம்தான் குறுகிய காலத்தில் அதிகமானோருக்கு நோய்த்தொற்று பரவியுள்ளது. இது மலேசியாவில் இதுவரை காணப்படாத வேகம். எனவே, இது 'சூப்பர் ஸ்ப்ரெட்டர்' வகை பாதிப்பாக இருக்கக்கூடும்.

"இந்த வகைத் தொற்று மிக வேகமாகப் பரவக்கூடிய தன்மையைக் கொண்டது. எகிப்திலும் பாகிஸ்தானிலும் இந்த வகைத் தொற்றுப் பரவல் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஆய்வு நடத்தப்படும்," என்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார் நூர் ஹிஷாம்.

ஒரே ஒரு நபர் சுகாதார அமைச்சின் விதிமுறைகளைப் பின்பற்றத் தவறினாலும்கூட எத்தகைய விளைவுகள் ஏற்படும் என்பதற்கு 'சிவகங்கா' தொற்றுக்குழு உருவான விதம் நல்ல எடுத்துக்காட்டு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா பகுதியில் கோவிட் 19 பரவல் தடுப்பு நடவடிக்கைகள் நல்ல பலன் அளிக்கத் துவங்கிய வேளையில், வெளிநாடு சென்று திரும்பிய ஒருவரால் அங்கு மீண்டும் நிலைமை மோசமானது என்று குறிப்பிட்ட அவர், சிவகங்கா சம்பவமும் அத்தகைய விளைவை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மலேசியா வரும் முன்பே சிவகங்கை நபர் பாதிக்கப்பட்டிருந்தாரா?

மலேசியாவில் வைரஸ் தொற்றைப் பரப்பிய அந்த 57 வயது நபர் தமிழகத்தின் சிவகங்கையிலிருந்து மலேசியாவுக்குப் புறப்படும் முன்பே பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

அப்படியெனில் மலேசிய சுகாதார அமைச்சு அஞ்சும் 'சூப்பர் ஸ்ப்ரெட்டர்' வகை பாதிப்பு சிவகங்கையிலும் உள்ளதா எனும் கேள்வி எழுந்துள்ளது.

சிவகங்கா தொற்றுக்குழுவுடன் தொடர்புடைய மேலும் 12 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது இன்று உறுதியாகியுள்ளது.

மலேசியாவில் இதுவரை கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 9063 ஆகும்.

தற்போது 210 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 96.3 விழுக்காடு நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 125 பேரை கோவிட்-19 காவு கொண்டுள்ளது.

சிவகங்கை நபருக்கு பயணத்துக்கும் முன்பே வைரஸ் தொற்றி இருக்கக்கூடும்

இதற்கிடையே கொரோனா வைரஸ் தன்மை மேலும் பல பிரிவுகளாக மாறக்கூடும் என்கிறார்

மலேசிய மருத்துவ சங்கத்தின் தலைவர் மருத்துவர் ஞானபாஸ்கரன்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், தமிழகத்தில் இருந்து புறப்படும் முன்பே அக்குறிப்பிட்ட சிவகங்கை நபருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது என்றார். எனவே அவருடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதனைக்கு உட்படுத்துவது நல்லது என்றும் தெரிவித்தார்.

"எத்தகைய கொரோனா வைரஸ் என்றாலும், அதன் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வருவதுதான் தனிப்பட்ட மற்றும் அரசுகளின் முதன்மைப் பணியாக இருக்க வேண்டும். இந்த வைரஸ் எப்படிப்பட்ட தன்மைகளைக் கொண்டது, எவ்வளவு திரிபுகள், வகைகள் உள்ளன என்பதெல்லாம் இன்னும் தெரியாது.

"எனவே அரசாங்கம் அறிவுறுத்தக்கூடிய அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றுவது அவசியம். சிவகங்கையில் இருந்து வந்திருப்பவருக்கு, பயணத்துக்கும் முன்பே வைரஸ் பாதிப்பு இருந்திருக்கலாம். எனவே அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதிக்கப்பட வேண்டும்.

"சிவகங்கை நபரின் உணவகத்துக்கு தினமும் பலர் வருகை தந்துள்ளனர். குறிப்பாக லோரி ஓட்டுநர்கள் வந்துள்ளனர். அதனால்தான் வைரஸ் தொற்றுப் பரவல் வேகமாக உள்ளது. இதன் காரணமாகவும் அவர் சம்பந்தப்பட்ட தொற்றுக்குழுவை சூப்பர் ஸ்பிரெட்டர் எனக் குறிப்பிடுகிறார்கள்," என்றார் மருத்துவர் ஞான பாஸ்கரன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: