கோவிட் 19 : உடல் பருமனாக இருப்பவர்களுக்கு கொரோனா வைரஸால் அச்சுறுத்தலா?

பட மூலாதாரம், Getty Images
உடல் பருமனாக இருப்பது இதய நோய், புற்றுநோய் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட பல நோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கும்.
இந்த நிலையில், உடல்பருமன் உடையவர்களுக்கு மற்றவர்களை விட கோவிட்-19 நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இது எப்படி சாத்தியம்?
இந்த கேள்விக்கான பதிலையும், ஆதாரத்தையும் கண்டறிவதற்கு எண்ணற்ற ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.
- இங்கிலாந்தில் கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சுமார் 17,000 பேரை கொண்டு நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், உடல் பருமனானவர்கள் (உடல் நிறை குறியீட்டெண் (பிஎம்ஐ) 30க்கும் அதிகமாக கொண்டவர்கள்) உடல் பருமன் இல்லாதவர்களை விட இறக்கும் ஆபத்து 33% அதிகம் என்று தெரியவந்துள்ளது.
- பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை (என்எச்எஸ்) மேற்கொண்ட மற்றொரு ஆய்வொன்றில், உடல்பருமன் கொண்டிருப்பது, கோவிட்-19 நோய்த்தொற்றினால் இறக்கும் அபாயத்தை இரட்டிப்பாக்குவது கண்டறியப்பட்டது. இதய நோய் மற்றும் இரண்டாம் வகை நீரிழிவு போன்ற உடல் பருமனுடன் தொடர்புடைய பிற பிரச்சனைகளையும் கருத்திற் கொண்டால், ஆபத்து இன்னும் அதிகமாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
- இங்கிலாந்தின் தீவிர சிகிச்சை பிரிவுகளில் மோசமான நிலையில் உள்ள நோயாளிகள் பற்றிய ஒரு ஆய்வில், அவர்களில் 73 சதவிகிதத்தினர் உடல்பருமனால் பாதிக்கப்பட்டவர்கள் என்று தெரியவந்துள்ளது. அதே வேளையில், பரிந்துரைக்கப்பட்ட பிஎம்ஐ அளவை கொண்ட நோயாளிகள் வெறும் 26 சதவீதத்தினர் மட்டுமே.
உடல் நிறை குறியீட்டெண் என்பது ஒருவருடைய எடையையும் உயரத்தையும் ஒப்பிடுகின்ற சராசரியாக்க அளவீடாகும்.
உலக அளவில் கொரோனா வைரஸால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பான்மையானோரின் "உடல்நிறை குறியீட்டெண் 25க்கு மேல்" இருப்பதாக உலக உடல் பருமன் கூட்டமைப்பு கருத்துத் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, அமெரிக்கா, இத்தாலி மற்றும் சீனா ஆகிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுகளில், கொரோனா வைரஸ் பாதிப்புக்கும் உடல் பருமனுக்கும் நெருங்கிய தொடர்புள்ளதாக முதற்கட்ட ஆய்வுகளில் தெரிவிக்கின்றன.
வயதானவர்கள், ஆண்கள் மற்றும் ஏற்கனவே உடல்நல பிரச்சனைகள் இருப்பவர்கள் கோவிட்-19 நோய்த்தொற்றால் மிகவும் மோசமாக நோய்வாய்ப்படும் அபாயம் இருக்கிறது.
உடல்பருமனாக இருப்பது ஏன் அபாயத்தை அதிகரிக்கிறது?
நீங்கள் எவ்வளவு அதிக உடல் எடையை கொண்டு இருக்கிறீர்களோ அந்த அளவுக்கு நீங்கள் கொழுப்பையும் கொண்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம். அதுமட்டுமன்றி உடற் கட்டமைப்பு எவ்வளவு மோசமாக இருந்தால் அது நுரையீரலின் செயல்பாட்டையும் பாதிக்கிறது. இதன் காரணமாக ஆக்சிஜனை இரத்தத்திற்குள் கொண்டு செல்வதிலும், உடல் முழுவதும் கொண்டு செல்வதிலும் பிரச்சனை ஏற்படுகிறது. இதன் காரணமாக இதயத்தின் செயல்திறன் பாதிக்கப்பட்டு, ஒட்டுமொத்த இரத்த ஓட்டமும் பாதிக்கப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக அளவிலான ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. இதன் காரணமாக உடல் உறுப்புகள் அனைத்தும் மிகுந்த அழுத்தத்தின் கீழ் செயல்பட வேண்டியிருக்கும் என்று கூறுகிறார் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நவீத் சட்டார்.
கொரோனா வைரஸ் போன்ற நோய்தொற்று காலத்தில் இது மேலதிக அபாயத்திற்கு வித்திடுகிறது.
“முக்கிய உறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைப்பதில் பிரச்சனை ஏற்படுவதால் உடல்பருமன் மிக்கவர்களின் நோய் தொற்று மேலும் தீவிரமடைகிறது” என்று கூறுகிறார் ரீடிங் பல்கலைகழகத்தை சேர்ந்த பேராசிரியர் டயன் செல்லையா.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அதிக எடை கொண்ட மற்றும் பருமனானவர்களுக்கு மூச்சு விடுவதற்கும், சிறுநீரக செயல்பாட்டிற்கும் ஆதரவு தேவைப்படுவதற்கு இதுவே முக்கிய காரணம்.
கொழுப்பு செல்களின் பங்கு என்ன?
உயிரணுக்களில் இருக்கும் ACE2 எனப்படும் நொதியே வைரஸ் உடலுக்குள் நுழைவதற்கான முக்கிய வழியாகும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
அடிபோஸ் திசுக்களில் அல்லது கொழுப்பு திசுக்களில் இந்த மூலக்கூறு அதிக அளவு காணப்படுகிறது. இது குறிப்பாக பருமனான நபர்களின் தோலின் கீழ்ப்பகுதிலும் மற்றும் மற்ற உறுப்புகளைச் சுற்றிலும் அதிகமாக உள்ளது.
இதுவே, உடல்பருமன் கொண்டவர்கள் நோய்த்தொற்றால் எளிதில் பாதிக்கப்படுவதற்கும், நோய்வாய்ப்படுவதற்கும் முக்கிய காரணமாக உள்ளது.
நோயெதிர்ப்பு மண்டலமும் பாதிக்கப்படுகிறதா?
இவை எல்லாவற்றிற்கும் மேலாக, வைரஸை எதிர்த்துப் போராடும் திறன், அதாவது நோய் எதிர்ப்புத்திறன் உடற்பருமன் மிக்கவர்களுக்கு அதிகம் இருப்பதில்லை.
கொழுப்பு திசுக்களை ஆக்கிரமிக்கும் மேக்ரோபேஜ்கள் எனப்படும் ஒருவகை நோயெதிர்ப்பு உயிரணுக்களின் செயல்பாடே இதற்கு காரணமாகும். வைரசுக்கு எதிராக நமது உடல் செல்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதில் இது தலையிடுகிறது.
ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, இது ஒரு 'சைட்டோகைன் புயலுக்கு' வழிவகுக்கும். உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தில் ஏற்படும் இந்த செயல்பாடு உயிருக்கே ஆபத்து விளைவிக்கக் கூடியது.
ஒரு குறிப்பிட்ட வகை கொழுப்புத் திசு, மேக்ரோபேஜ் பரவலுக்கு ஆளாகின்றன. இந்த வகை திசுக்களை கொண்ட கறுப்பு, ஆப்பிரிக்க மற்றும் இன சிறுபான்மை பின்னணியைச் சேர்ந்தவர்கள் (BAME) "நீரிழிவு நோய் மட்டுமின்றி வைரஸாலும் அதிகம் பாதிக்கப்படக்கூடும்" என்று மருத்துவர் செல்லையா கூறுகிறார்.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

வேறு ஏதாவது மறைமுக பிரச்சனைகள் இருக்குமா?
உடல் பருமன் கொண்டர்வர்களுக்கு இதயம் அல்லது நுரையீரல் சார்ந்த பிரச்சனைகளும், சிறுநீரகம் செயல்பாட்டில் குறைபாடோ அல்லது இரண்டாம் வகை நீரிழிவு போன்ற பிற உடல்நலப் பிரச்சனைகளும் ஏற்படுகின்றன.

பட மூலாதாரம், Getty Images
கோவிட்-19 போன்ற தீவிரமான நோய்த்தொற்று தாக்குதல் ஏற்படும்போதுதான் மேற்குறிப்பிட்ட பிரச்சனைகள் இருப்பது ஒருவருக்கு தெரிய வருகிறது. இது உடலில் மேலதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
உடல் பருமனால், இரத்தக் கட்டிகளும் உருவாக அதிக வாய்ப்புள்ளது. இதற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.
தீவிர சிகிச்சை பிரிவில் உடல் பருமன் உள்ள நோயாளிகளை நிர்வகிப்பது மிகவும் சவாலானதாக இருக்கக்கூடும்.
உடல்நலத்துடன் இருக்க என்ன செய்ய வேண்டும்?
சரிவிகிதமாக சத்துக்கள் நிறைந்த நல்ல உணவை உண்பதுடன், சீரான இடைவெளியில் உடற்பயிற்சிகளை மேற்கொள்வது சாலச்சிறந்தது.
வேகமாக நடப்பது, ஜாகிங் செய்வது மற்றும் சைக்கிள் ஓட்டுதல் ஆகியவை நல்ல தெரிவுகள்.
மற்றபடி மெதுவாக உண்பதற்கு முயற்சி செய்யுங்கள்; அளவுக்கு அதிகமாக உணவுப் பொருட்களை உண்ணும் உணர்வை ஏற்படுத்தும் சூழ்நிலைகளை தவிர்த்து விடுங்கள்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












