நரேந்திர மோதி அரசின் புதிய சட்ட வரைவை எதிர்க்கும் எடப்பாடி பழனிசாமி

நரேந்திர மோதி அரசின் புதிய சட்டத்தை எதிர்க்கும் எடப்பாடி பழனிசாமி

பட மூலாதாரம், Getty Images

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய மின்சார வரைவு திருத்தச் சட்டம் மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிப்பதாகவும், கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக இருப்பதாகவும் கூறி, பிரதமர் நரேந்திர மோதிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

புதிய மின்சார வரைவு திருத்தச் சட்டம் குறித்த கருத்துகளை மாநில அரசுகள் தெரிவிக்கலாம் என மத்திய அரசு கடந்த ஏப்ரல் 20ம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிடப்பட்டது. தொடர்புடையவர்களின் கருத்துகளை கேட்ட பின்னர், திருத்தங்கள் குறித்து முடிவு செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

அதன்படி, வரைவு சட்டம் குறித்து கடிதம் எழுதியுள்ள தமிழக முதல்வர் பழனிசாமி, மத்திய அரசின் புதிய திருத்தங்கள் மாநில அரசுகளின் அதிகாரங்களை பறிப்பதாக உள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, எடப்பாடி பழனிசாமி

''எங்கள் விவசாயிகள் இலவச மின்சாரம் பெற வேண்டும் என்பதும், அத்தகைய மானியத்தை செலுத்தும் முறையை மாநில அரசே தீர்மானிக்க வேண்டும் என்பதும் எனது அரசாங்கத்தின் நிலையான கொள்கையாகும். இந்த திருத்த மசோதாவின்படி, மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம், மாநில அரசின் அதிகாரத்தை பறிக்க முற்படுகிறது, இது அரசியலமைப்பின் கூட்டாட்சி கொள்கைகளுக்கு எதிரானது. வரைவு மசோதாவில், இதுவரை நிலவிவந்த அனைத்து ஒப்பந்த சிக்கல்களையும் கையாள மத்திய மட்டத்தில் மின்சார ஒப்பந்த அமலாக்க ஆணையம் என்ற ஆணையம் அமைப்பது குறித்து விவரிக்கப்பட்டது. இது மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களின் அதிகாரத்தை நீர்த்துப்போகச் செய்யும்,'' எனத் தெரிவித்துள்ளார்.

Banner image reading 'more about coronavirus'
Banner

மேலும், ''அனைத்து மாநிலங்களும் தற்போது கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுகின்றன என்பதால் முன்மொழியப்பட்ட திருத்தங்களுக்கு விரிவான பதிலைக் கொடுக்க சிறிது நேரம் தேவைப்படும். அதே நேரத்தில் மின்சார சட்டத்தில் எந்தவொரு அவசரத் திருத்தங்களும் மாநில மின் பயன்பாடுகளுக்கு சிரமங்களை ஏற்படுத்தக்கூடும், அவை தற்போதைய தொற்றுநோயால் கடுமையான நிதி நெருக்கடியை சந்திக்கின்றன. வரைவு திருத்த மசோதாவின் சில விதிகள் பொது மக்களை கஷ்டத்திற்கு உள்ளாக்கக்கூடும் என்பதால், குறிப்பாக இந்த நெருக்கடி காலத்தில், மின்சார சட்டத்தில் இதுபோன்ற பெரும் திருத்தங்களை கொண்டு வர இது சரியான தருணம் அல்ல என கருதுகிறேன்,'' என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முன்னர் கருத்து தெரிவித்திருந்த மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி மத்திய அரசின் சட்டத்திருத்தங்களில், பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் திருத்தங்களை நீக்கவேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தும் என தெரிவித்திருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: