கொரோனா ஊரடங்குக்கு பிறகு தமிழகத்தில் இரண்டு நாளில் டாஸ்மாக் மது விற்பனை எவ்வளவு?

தமிழகத்தில் இரண்டாவது நாளில் 140 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை

பட மூலாதாரம், Getty Images

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி: தமிழகத்தில் இரண்டாவது நாளில் 140 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை

தமிழகத்தில் டாஸ்மாக் திறக்கப்பட்டதன் இரண்டாவது நாளான நேற்று (வெள்ளிக்கிழமை) 140 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆனதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

"தமிழகத்தில், சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்களில் 43 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இந்தக் கடைகளில் மதுப்பிரியர்களின் கூட்டம் அலைமோதியது. இரண்டாவது நாளாக நேற்றும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

வழக்கமாக ஒரு நாளுக்கு ரூ.80 கோடிக்கும், சனி, ஞாயிறு வார விடுமுறை நாட்களில் ரூ.100 கோடிக்கும், பண்டிகை மற்றும் விழாக்காலங்களில் ரூ.200 கோடிக்கும் மது விற்பனையாகும்.

தற்போது, 43 நாட்களுக்கு பிறகு மதுக்கடைகள் திறக்கப்பட்டதால், நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) ரூ.170 கோடிக்கு மது விற்பனையானது. இரண்டாவது நாளான நேற்று தமிழ்நாட்டில் மது விற்பனை ரூ.125 கோடி முதல் ரூ.140 கோடி வரை இருக்கும் என்று டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்தன.

ஊரடங்கு முடியும்வரை மதுக்கடைகளைத் திறக்க சென்னை உயர் நீதிமன்றம் நேற்று தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

Banner image reading 'more about coronavirus'
Banner

தினமணி - "துணை ராணுவப் படையினா் 530 போ் கொரோனாவால் பாதிப்பு"

அமித் ஷா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமித் ஷா

எல்லைப் பாதுகாப்புப் படை, மத்திய ரிசா்வ் போலீஸ் படை உள்ளிட்ட துணை ராணுவப் படைகளைச் சோ்ந்த சுமாா் 530 பேருக்கு இதுவரை கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது கவலையளிப்பதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக, பாதுகாப்புப்படை உயரதிகாரிகளுடன் நேற்று அமித் ஷா ஆலோசனை நடத்தியதாக அறிக்கை வெளியிட்டுள்ள உள்துறை அமைச்சகம், துணை ராணுவப் படையினருக்கு நோய்த்தொற்று ஏற்படுவதை தடுக்க அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்ட அவா், பாதிக்கப்பட்ட படையினரின் உடல்நலம் குறித்து கேட்டறிந்ததுடன், அவா்களது குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை செய்து தருமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாக என்று அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிஎஸ்எஃப் (221 போ்), சிஆா்பிஎஃப் (161 போ்), சிஐஎஸ்எஃப் (35), ஐடிபிபி (94 போ்), எஸ்எஸ்பி (17 போ்) வீரர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்படைகளைச் சோ்ந்த 5 போ் நோய்த்தொற்றால் உயிரிழந்துள்ளதாக தினமணி வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Presentational grey line

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - "பிளாஸ்மா சிகிச்சை குறித்து ஆய்வு நடந்த அனுமதி"

கொரோ

பட மூலாதாரம், Getty Images

இந்தியா முழுவதும் உள்ள 21 மருத்துவமனைகள் பிளாஸ்மா சிகிச்சை குறித்த இரண்டாவது கட்ட பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சியை கழகம் அனுமதி அளித்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த வகையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சையின் மூலம் நிவாரணம் கிடைக்குமா என்ற ஆராய்ச்சியின் இரண்டாவது கட்ட ஆய்வை மேற்கொள்ளவதற்கு மகாராஷ்டிராவை சேர்ந்த ஐந்து மருத்துவமனைகளுக்கும், குஜராத்தில் உள்ள நான்கு மருத்துவமனைகள் மற்றும் ராஜஸ்தான், தமிழ்நாடு, மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா இரண்டு மருத்துமனைகளுக்கும், பஞ்சாப், கேரளா, தெலங்கானா மற்றும் சத்தீஸ்கரில் தலா ஒரு மருத்துவமனைக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: