இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: சஹ்ரான் பெண்கள் பிரிவு பயிற்சி பெற்றதாக கூறப்படும் விடுதியில் தேடுதல்

சஹ்ரான் ஹாஷிம்
படக்குறிப்பு, சஹ்ரான் ஹாஷிம் ஈஸ்டர் தாக்குதல்களின் சூத்திரதாரி என்று இலங்கை அரசு கூறுகிறது.

இலங்கையில் கடந்த வருடம் இடம்பெற்ற ஈஸ்டர் தின தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிம் தலைமை தாங்கிய தேசிய தௌஹீத் ஜமாத்தின் பெண்கள் பிரிவினர் பயிற்சி பெற்றதாக சந்தேகிக்கப்படும் விடுதியொன்றினை, நேற்று, வெள்ளிக்கிழமை பாதுகாப்பு தரப்பினர் சுற்றி வளைத்து, தேடுதல் நடவடிக்கையொன்றில் ஈட்டனர்.

காத்தான்குடி போலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனை பிரதேசத்தின் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள விடுதியொன்றே இவ்வாறு சுற்றி வளைக்கப்பட்டது.

விடுதி

தமக்குக் கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் கொழும்பிலிருந்து வந்த குற்றப் புலனாய்வு பிரிவினர், இந்தத் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இவர்களுக்கு இதன்போது விசேட அதிரடிப்படையினர் ஒத்துழைப்பு வழங்கினார்கள்.

ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் எனும் சந்தேகத்தில் குறித்த விடுதி அமைந்துள்ள காணிப்பகுதியில் படையினர் தேடுதல் நடத்தியதோடு, விடுதிக் கட்டடங்கள் மற்றும் அங்கிருந்த கணினி உள்ளிட்ட ஆவணங்களையும் ஆராய்ந்துள்ளனர்.

Banner image reading 'more about coronavirus'
Banner

இதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் - கடந்த புதன்கிழமையன்று, சஹ்ரானின் சகோதரர் ஒருவருக்கு 2018ஆம் ஆண்டில் மருத்துவ உதவி வழங்கினார் எனும் குற்றச்சாட்டில், காத்தான்குடியைச் சேர்ந்த நபர் ஒருவரை அதே பிரதேசத்தில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர்.

வெடி விபத்தொன்றில் 2018ஆம் ஆண்டு சிக்கிய சஹ்ரானின் சகோதரர்களில் ஒருவரான முகம்மட் றிழ்வான் என்பவர், தனக்கேற்பட்ட காயத்துக்கு - ஒல்லிக் குளம் எனும் பகுதியில் அமைந்திருந்த அவர்களின் முகாம் ஒன்றில் இருந்தவாறு சிகிச்சை பெற்று வந்ததாகவும், அதன்போது றிழ்வானுக்கு மேற்படி காத்தான்குடியைச் சேர்ந்த நபர் மருத்துவ உதவி செய்ததாகவும் குற்றம்சாட்டியே, பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் அவரைக் கைது செய்ததாகத் தெரியவருகிறது.

இவ்வாறு கைதானவர் அரச உத்தியோகத்தர் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதி

பட மூலாதாரம், Getty Images

மேற்படி றிழ்வான் எனும் சஹ்ரானின் சகோதரர், ஈஸ்டர் தினத் தாக்குதலின் பின்னர், அம்பாறை மாவட்டத்திலுள்ள சாய்ந்தமருது பிரதேசத்தில் தனது குழுவினர் மற்றும் குடும்பத்தவர்களுடன் வீடு ஒன்றில் மறைந்திருந்த போது, பாதுகாப்பு தரப்பினர் சுற்றி வளைத்த நிலையில், குண்டுகளை வெடிக்கச் செய்து பலியானார்.

அதன்போது றிழ்வான் உள்ளிட்ட சஹ்ரானின் இரு சகோதரர்கள், சஹ்ரானின் தாய், தந்தை உட்பட 15 பேர் உயிரிழந்தனர்.

இருந்தபோதும், அந்தக் குண்டு வெடிப்பு இடம்பெற்ற வீட்டிலிருந்த சஹ்ரானின் மனைவியும், அவரின் சிறுவயது மகளும் உயிர் தப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: