நீங்கள் இணையத்தில் படம் பார்ப்பது சுற்றுச்சூழலை பாதிக்குமா?

பட மூலாதாரம், Getty Images
உங்களுக்கு பிடித்த தொடரை பார்ப்பது அல்லது உங்களுக்கு பிடித்த பாடல்களை கேட்பது என்பது தற்போது மிகவும் எளிதாகிவிட்டது.
படம், இசை, தொலைக்காட்சித் தொடர் என எவ்வளவு வேண்டுமானாலும் நம்மால் உடனடியாக பதிவிறக்கம் செய்ய முடியும்.
ஆனால் இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறதா?
இணையத்தில் இருந்து அவற்றை பதிவிறக்கம் செய்ய அதிகமான ஆற்றல் தேவைப்படுகிறது. மேலும், டிஜிட்டல் சேவைகளை நாம் நம்பியிருப்பது அதிகரித்து வருவதால், இதன் தேவையும் அதிகரிக்கும்.
இதற்கு தேவையான ஆற்றல் பலவகையில் உற்பத்தியாகிறது. இவற்றில் ஒரு சில வகைகள் மாசு விளைவிக்காதவை. ஆனால், பெரும்பாலும் ஆற்றல் என்பது, கார்பன் சார்ந்த புதைபடிவங்களை எரிப்பதன் மூலமே கிடைக்கிறது. உலகின் வெப்பம் அதிகமாவதற்கு இதுவும் ஒரு காரணம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
கார்பன் வெளியீட்டால் ஏற்படும் அபாயங்களின் அளவை தட்பவெட்ப ஆய்வாளர்களின் சமீபத்திய அறிக்கை நமக்கு உணர்த்துகிறது.

பட மூலாதாரம், AFP
"நமது டிஜிட்டல் கட்டமைப்புக்கு எவ்வறு மின்னாற்றல் அளிக்கிறோம் என்பது, குறிப்பிட்ட காலத்துக்குள் புவி வெப்பமையமாக்குதலை கட்டுப்படுத்த முடியுமா என்ற கேள்வியைத் தீர்மானிக்கும் அளவு முக்கியமானது" என்கிறார் கிரீன்பீஸில் உள்ள ஐ.டி துறை ஆய்வாளரான கேரி குக்.
நாம் இணையத்தில் செலவிடும் நேரத்தை குறைப்பதினால், ஆற்றல் நுகர்வு மற்றும் புவி வெப்பமாவதில் மாறுதல் ஏற்படுமா?
இணைய சர்வர்களுக்கு பயன்படுத்தும் ஆற்றல் முதல் ஸ்மார்ட் போன்களுக்கு சார்ஜ் போடுவது வரை தகவல் தொழில்நுட்பத்துறை பயன்படுத்தும் ஆற்றல் மூலம் வெளியாகும் கார்பன் அளவு, விமானப் போக்குவரத்துத் துறை வெளியிடும் ஆற்றல் அளவுக்கு சமமாக இருக்கிறது.
2030ல் உலகில் பயன்படுத்தும் மின்சக்தியில் 20 சதவீதத்தை தகவல் தொழில்நுட்பத் துறை பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஹ்வாவே தொழில்நுட்ப நிறுவனத்தை (Huawei Technologies) சேர்ந்த ஆண்டர்ஸ் ஆண்ட்ரே.


வீடியோ ஸ்ட்ரீமிங்க் செய்வது, உலகின் இணையப் போக்குவரத்தில் பெரும் பங்கு வகிக்கிறது.
வீட்டில் அமர்ந்து இணையத்தில் வீடியோ பார்ப்பது, பழங்கால மின்னிழை பல்புகள் இரண்டு-மூன்றினை பயன்படுத்துவதற்கு சமம் என்கின்றார்கள் ப்ரிஸ்டால் பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் துறையின் பேராசியர்களான க்ரிஸ் ப்ரீஸ்ட் மற்றும் டாக்டர் டேன் சீன்.
இந்த சாதனங்கள் பயன்படுத்தும் மின் சக்தியோடு, தரவுகளை விநியோகிக்கும் நெட்வர்க்குகளாலும் ஆற்றல் உறிஞ்சப்படுகிறது.
தொழில் நுட்பங்களுக்கு தேவை அதிகரிக்கும்போது தகவல்களை சேமிக்கவும், பகிரவும் அதிக ஆற்றல் செலவிடப்படும்.
பெரிய கட்டடங்களில் செயல்படும் இணையத் தரவு மையங்களே இணையப் போக்குவரத்தை நெறிப்படுத்தவும், விநியோகிக்கவும் செய்கின்றன. இங்குள்ள சர்வர்களை குளிர்விக்க பெரிய அளவில் ஆற்றல் தேவைப்படுகிறது.
உலகின் பெரும்பாலான இணையப் போக்குவரத்து இத்தரவு மையங்கள் மூலமே செல்கின்றன.நெட்ஃபிளிக்ஸ், பேஸ்புக் மற்றும் யூ டியூப் போன்ற ஸ்டிரீமிங் சேவைகள் இவற்றின் மூலமே நடைபெறுகின்றன.

இந்த தரவு மையங்கள் ஆண்டிற்கு உலகின் 1 சதவீத மின்சக்தியை தற்போது பயன்படுத்துகின்றன. இது வருங்காலத்தில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இவை உலகில் வெளியாகும் கரியமில வாயுவில் 0.3 சதவீதத்தை வெளியிடுகின்றன.
உலகெங்கிலும் உருவாக்கப்படும் தரவு மையங்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் செயல்பட வேண்டும். அப்படி செய்யப்படும்பட்சத்தில் கார்பன் வெளியேற்றத்தை குறைக்க முடியும் என்கிறார் ஆண்ட்ரே.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருக்கும் தரவு மையங்கள், 2014ஆம் ஆண்டை விட 2017ல் 25 சதவீதம் அதிக சக்தியை பயன்படுத்தியுள்ளன என ஐரோப்பிய கமிஷன் நிதியில் செயல்படும் யூரேகா திட்டம் கண்டறிந்துள்ளது.


2017ஆம் ஆண்டு வெளியான ஸ்பெயினின் புகழ்பெற்ற Despacito பாடலை 5 பில்லியன் மக்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். இதற்கு செலவான மின்சாரம் சாட், கினியா பிசௌ, சோமாலியா, சியரா லியோன் மற்றும் மத்திய ஆஃபிரிக்க குடியரசு ஆகிய நாடுகளின் ஓராண்டு மின்சாரப் பயன்பாட்டுக்கு இணையாகும் என்று பிரபல விஞ்ஞானியான ரபி பஷ்ரூஷ் கணக்கிட்டுள்ளார்.
நம்மால் என்ன செய்ய முடியும்?
ஒவ்வொரு முறையும் இணையத்தில் ஏதேனும் கேட்க அல்லது பார்க்க நீங்கள் அமரும்போது, அதற்கு பயன்படுத்தப்படும் ஆற்றல் மாறுபடலாம்.
ஆண்டனா மூலம் ஒளிபரப்பு செய்யப்படும் தொலைக்காட்சியை பார்ப்பது, தற்போதுள்ள ஒளிபரப்பு தொழில்நுட்பங்களை விட சிறந்தது என்கிறார் பேராசிரியர் ப்ரீஸ்ட்.
அதே போல, டிவி மற்றும் லேப்டாப் உறிஞ்சும் ஆற்றலைவிட, மொபைல் போன்கள் பயன்படுத்தும் ஆற்றல் குறைவானதே.
இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்பதையும் பொறுத்தே இது இருக்கும். மொபைலில் Wi-fi மூலம் பாடல்கள் அல்லது படங்கள் பார்ப்பது, 3ஜி அல்லது 4ஜி இணைப்பைவிட குறைந்த ஆற்றலையே பயன்படுத்தும்.
வீட்டில் Wi-fi ஆன் செய்துவிட்டு, அதை பயன்படுத்தாமல் இருந்தால்கூட, அது ஆற்றலை உறிஞ்சும் என்கிறார் பேராசிரியர் ப்ரீஸ்ட். "ஆகவே, வீட்டில் அனைவரும் தொழில்நுட்ப சாதனங்களை 24 மணி நேரமும் உபயோகிக்க, இதில் அதிக ஆற்றல் பயன்படுத்தப்படுகிறது."
சில தரவு மையங்கள் மற்றவற்றைவிட திறமையாக நடத்த முடியும். குளிர்ச்சியான இடங்களில் அவற்றை அமைப்பது, உதாரணமாக பூமிக்கு அடியில் அமைப்பது குளிரூட்டுவதற்குத் தேவையான ஆற்றல் அளவைக் குறைக்கலாம்.

பட மூலாதாரம், AFP
பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் சில, அவர்கள் எவ்வளவு திறமையாக ஆற்றலை பயன்படுத்துகிறார்கள் என்பது குறித்து வெளிப்படையாகவே இருக்கின்றன.
பேஸ்புக் நிறுவனம், சிங்கப்பூரில் அமைக்கப்பட்டுள்ள அதன் புதிய தரவு மையமானது, 100% புதுப்பிக்கத்தக்க சக்தி மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கிறது. இதை தங்களிடம் உள்ள உலகளாவிய வசதிகளால் ஏற்கனவே செய்துவிட்டதாக ஆப்பிள் நிறுவனம் கூறுகிறது.
மற்ற பல தொழில்நுட்ப நிறுவனங்களும் இதனை இலக்காக வைத்துள்ளனர்.
"சிறிய நிறுவனங்கள் மற்றும் அதன் ஆற்றல் உபயோகம் எவ்வாறு இருக்கிறது என்பது குறித்து கண்காணிக்க முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்" என விஞ்ஞானி ரபி பஷ்ரூஷ் தெரிவிக்கிறார்.
"சிறியளவிலான தரவு மையங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதுவே நாம் ஆற்றலை சேமிப்பதற்கான அடுத்த பெரிய வாய்ப்பு. பெரிய நிறுவனங்கள் இவர்களை ஒப்பிடும்போது அவ்வளவு மோசமாக இல்லை" என்றும் அவர் கூறுகிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












