மத்திய அமெரிக்காவில் நடப்பது என்ன? -“எங்கள் எதிர்காலத்திற்காக இதை செய்துதான் ஆகவேண்டும்”

பட மூலாதாரம், Getty Images
மத்திய அமெரிக்க நாடுகளிலிருந்து அமெரிக்க நாட்டிற்குள் நுழைய ஆயிரக்கணக்கான மக்கள் ஊர்வலமாக சென்று கொண்டிருக்கின்றனர்.
எல்லை நகரமான சுயோடாட் இடால்கோவிலிருந்து வடக்கு நோக்கி அந்த மக்கள் நடந்து சென்று கொண்டிருக்கின்றனர்.
எங்கும் வறுமை, வன்முறை
முன்னதாக இவர்களை மெக்சிகோ அதிகாரிகள் மெக்சிகோ, குவாட்டமாலா இடையே உள்ள எல்லை பாலம் அருகே தடுத்து நிறுத்த முயற்சித்தனர்.
ஆனால் சிலர் சட்டத்திற்கு புறம்பாக படகுகள் மூலம் தப்பித்து தங்கள் ஊர்வலத்தை முன்னெடுத்தனர்.

பட மூலாதாரம், Reuters
இவர்களில் பெரும்பாலானவர்கள் மத்திய அமெரிக்க நாடான ஹோண்டியுரஸ் நாட்டை சேர்ந்தவர்கள்.
ஏன் அவர்கள் அமெரிக்காவுக்குள் செல்ல முயல்கிறார்கள்?
வறுமை, வன்முறை காரணமாக, அவற்றிலிருந்து தப்பிக்க அமெரிக்காவிற்குள் செல்ல முயல்வதாக அவர்கள் கூறுகிறார்கள்.

பட மூலாதாரம், Reuters
ஏறத்தாழ 2000 குடியேறிகள் இந்த பயணத்தில் இருப்பதாக அசோஸியேடட் பிரஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.
"வாருங்கள் ஒன்றாக நடப்போம்" மற்றும் "ஆம், நம்மால் முடியும்" என்கின்றனர் அவர்கள்.
மத்திய அமெரிக்கா நாடுகள் இடையேயான எல்லையை கடக்கும் போது, அதிகாரிகள் அவர்களை கைது செய்யவில்லை.
மெக்சிகோ மட்டுமே இவர்களை தடுத்து நிறுத்தி சிறு எண்ணிக்கையிலான மக்கள் ஊர்வலம் செல்வதற்கு அனுமதி மற்றும் 45 நாட்களுக்கான பார்வையாளர் அனுமதி வழங்கி உள்ளது,
எங்களுக்கு உதவுங்கள்
பிபிசியிடம் பேசிய செயற்கை கால் பொருத்தப்பட்ட ஒரு குடியேறி, தாம் அமெரிக்கா செல்வதில் தீர்மானமாக இருப்பதாக கூறி உள்ளார்.

பட மூலாதாரம், AFP/GETTY IMAGES
"எனது குழந்தைகளின் எதிர்காலத்திற்காக நான் அமெரிக்கா கண்டிப்பாக சென்றே ஆக வேண்டும். அது சிரமமான ஒன்றாக இருக்கலாம். ஆனால், விரும்பியது வேண்டுமென்றால் நீங்கள் போராடிதான் ஆக வேண்டும்" என்று தெரிவித்தார்.
"எங்களை போல மக்களுக்கு, வாழ வேண்டும் என்று விரும்பும் மக்களுக்கு டிரம்ப் உதவ வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்" என்கிறார்.
டிரம்ப் என்ன சொல்கிறார்?
டிரம்ப் தொடர்ந்து அவர்களை எச்சரித்து வருகிறார்.
குடியேறிகளை திரும்பி செல்ல கோரி உள்ளார். மேலும், இந்த ஊர்வலத்தை அனுமதிக்கும் நாடுகளுக்கான உதவிகள் நிறுத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

பட மூலாதாரம், AFP/GETTY IMAGES
மேலும் அவர் இந்த ஊர்வலத்தின் பின்னால் அரசியல் உள்நோக்கங்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த ஊர்வலம் ஜனநாயக கட்சிக்கான அவமானம். உடனடியாக குடியேறி சட்டங்களை மாற்றுங்கள் என்றும் டிரம்ப் கூறி உள்ளார்.
எல்லைகளில் என்ன நடந்தது?
மெக்சிகோ எல்லை பகுதியில் மட்டும்தான் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
ஆனாலும், குடியேறிகள் தடுப்புகளை உடைத்துவிட்டு முன்னேறி சென்றனர்.

பட மூலாதாரம், AFP/GETTY IMAGES
கற்களை கொண்டு தாக்கப்பட்டப் பின்பு டஜன் கணக்கான மெக்சிகோ போலீஸ் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
ஊடகவியலாளர்கள், குடியேறிகள், காவல்துறையினர் உட்பட பலர் இதில் காயம் அடைந்தனர்.
குடியேறிகள் சூட்சியாடே ஆற்றில் குதித்து தப்பி சென்றனர்.
முறையான கடவுச்சீட்டு, விசா வைத்திருப்பவர்கள் மெக்சிகோவிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என அந்நாடு கூறி உள்ளது.
பாதுகாப்பு தாருங்கள்
ஹோண்டியுரஸ் நாட்டின் அதிபர் கெளதமாலா நாட்டின் அதிபரிடம் ஊர்வலமாக செல்லும் தம் நாட்டினருக்கு பாதுகாப்பு கோரி உள்ளார்.

பட மூலாதாரம், AFP/GETTY IMAGES
மெக்சிகோ அதிபர் எல்லையில் ஏற்பட்ட தகராறு எதிர்பார்க்காத ஒன்று. சில குடியேறிகள் காவல்துறையினரை தாக்கியதாக குற்றஞ்சாட்டினார்.
ஊர்வலத்தை சரியாக கையாளவில்லை என அமெரிக்காவையும், மெக்சிகோவையும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
குடியேறிகள் கோருவது என்ன?
மோசமான பொருளாதார வாய்ப்புகளால்தான் வேறு நாட்டில் தஞ்சம் கோருவதாக கூறுகிறார்கள் குடியேறிகள்.

பட மூலாதாரம், EPA
எல் சல்வேடார், குவாட்டமாலா மற்றும் ஹோண்டியுரஸ் நாடுகளிலிருந்துதான் பலர் அமெரிக்காவிற்குள் செல்ல முயல்கின்றனர்.
உலகிலேயே இந்தப் பகுதிகளில்தான் அதிகளவில் கொலைகள் நடைபெறுகின்றன.
ஐ.நா தரவின்படி, ஹோண்டியுரஸ் நாட்டில் ஒரு லட்சத்திற்கு 63.75 என்ற அளவில் கொலைகள் நடைபெறுகிறது. இது எல் சல்வேடாரில் 108.64 என்ற கணக்கில் இருக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












