இஸ்ரேல் விவசாயிகளால் ஜோர்டானில் இனியும் விவசாயம் செய்ய முடியுமா?

பட மூலாதாரம், Getty Images
இஸ்ரேல் ஜோர்டான் இடையேயான அமைதி உடன்படிக்கையின் போது அதன் ஒரு ஷரத்தாக இஸ்ரேலுக்கு குத்தகைக்குவிடப்பட்ட இரண்டு இடங்கள் தொடர்பான ஒப்பந்தத்தை ரத்து செய்ய திட்டமிட்டுள்ளது ஜோர்டான்.
வடக்கில் உள்ள நஹாரயிம் மற்றும் தெற்கில் உள்ள ஜோஃபர் ஆகிய இடங்கள் இவை. இந்த இடங்கள் அரபியில் காமர் மற்றும் அல் பக்கூரா என்று அழைக்கப்படுகிறது.
25 ஆண்டுகளுக்கு அந்த இடம் குத்தகைக்கு விடப்பட்டது.
பேச்சுவார்த்தை நடத்துவோம்
இந்த குத்தகையை நீடிக்க பேச்சுவார்த்தை நடத்துவோமென இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு கூறியுள்ளார்.
குத்தகைக்கு விடப்பட்ட இந்த ஆயிரம் ஏக்கர் நிலத்தில் இஸ்ரேலிய விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.
முன்னதாக ஜோர்டான் அரசர் அப்துல்லாஹ் இந்த குத்தகையை முடிக்க விரும்புவதாக கூறி இருந்தார்.

பட மூலாதாரம், AFP
அந்த பகுதி எப்போதும் ஜோர்டானுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இருந்து வருகிறது.
அமைதி உடன்படிக்கை என்ன சொல்கிறது?
ஒப்பந்தம் முடியும் ஓராண்டுக்கு முன்பே இந்த ஒப்பந்தம் தொடர்பான தங்கள் கருத்தை இரு நாடுகளும் தெரிவிக்காமல் இருந்தால், இந்த ஒப்பந்தமானது தானாகவே நீட்டிக்கப்படும் என்கிறது இந்த அமைதி உடன்படிக்கை.
ஒப்பந்தம் முடிய இன்னும் ஓராண்டு இருக்கும் சூழலில் ஜோர்டான் இந்த ஒப்பந்தம் தொடர்பான தன் முடிவை கூறி உள்ளது.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு இந்த அமைதி ஒப்பந்தமானது இருநாடுகளுக்கும் முக்கியத்துவம் மற்றும் மதிப்புமிக்க ஒன்று என்று கூறி உள்ளார்.
ஜோர்டான் ரத்து செய்ய விரும்புவது ஏன்?
ஜோர்டான் இந்த ஒப்பந்தத்தை நீடிக்க விரும்பாததற்கு ஜோர்டான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜோர்டான் மக்கள் தரும் அழுத்தம்தான் முக்கிய காரணம் .

இந்த ஒப்பந்தத்தை நீடிக்கக் கூடாது என 87 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு மனு அளித்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை ஜோர்டான் தலைநகர் அம்மானில் பொது மக்களும் இதுதொடர்பான போராட்டம் நடத்தினர்.
ஜெருசலேம் தொடர்பாக இரு நாட்டிற்கும் அண்மையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












