நடிகர்கள் அர்ஜூன், தியாகராஜன் மீது குற்றச்சாட்டு - தொடரும் பாலியல் புகார்கள் #MeToo

பட மூலாதாரம், Facebook/Twitter
நாளிதழ்களில் இன்று வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை தொகுத்து வழங்குகின்றோம்.
தினத்தந்தி: 'நடிகர் அர்ஜூன் மீது மேலும் ஒரு பாலியல் புகார்'
நடிகர் அர்ஜூன் மீது மேலும் ஒரு பாலியல் புகார் எழுந்துள்ளது. தனது தோழிகளிடம் தவறாக நடந்து கொண்டதாக துணை நடிகை ஒருவர் குற்றம்சாட்டி உள்ளார் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.
"நடிகர் அர்ஜூன் 'நிபுணன்' என்ற படத்தில் நடித்தார். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை சுருதி ஹரிகரன் நடித்தார். அந்த படப்பிடிப்பின்போது, அர்ஜூன் தனக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தார் என்று சுருதி ஹரிகரன் 'மீ டூ' இயக்கத்தின் மூலம் பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.
இந்த நிலையில் நடிகர் அர்ஜூன் மீது மேலும் ஒரு பாலியல் புகார் எழுந்துள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு படப்பிடிப்பில் அர்ஜூன் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக துணை நடிகை ஒருவர் கூறியுள்ளார்." என்கிறது அந்நாளிதழ்.
பெயர் குறிப்பிட விரும்பாத அந்ந நடிகை, "கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு 'அர்ஜூனடு' என்ற படத்தின் படப்பிடிப்பு மைசூருவில் நடந்தது. அந்த படத்தின் படப்பிடிப்பில் நான் 3 நாட்கள் கலந்து கொண்டு நடித்தேன். என்னுடன் 20 கல்லூரி மாணவிகள் பகுதிநேர அடிப்படையில் நடித்தனர். அந்த காட்சியில் மாணவிகள் குழுவாக சேர்ந்து நடித்தனர். அப்போது நடிகர் அர்ஜூன், என்னிடம் வந்து அந்த பெண்களின் தொலைபேசி எண்ணை கேட்டார்.
மேலும் அவர் ஒரு ரெசார்ட்டில் உள்ள அறை எண்ணை கொடுத்து, அங்கு வருமாறு என்னிடமும், எனது தோழிகளிடமும் கூறினார். எனது தோழிகள், பட வாய்ப்புக்காக அர்ஜூனின் அறைக்கு சென்றனர். அங்கு தோழிகளிடம் அர்ஜூன் தவறாக நடந்து கொண்டார்." என்று கூறியதாக விவரிக்கிறது அந்நாளிதழ்.
மறுப்பு
பாலியல் புகார் மூலம் நடிகை சுருதி ஹரிகரன் பணம் பறிக்க முயற்சிக்கிறார் என்றும், அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடருவோம் என்றும் நடிகர் அர்ஜூன் குடும்பத்தினர் கூறினர் என்கிறது அந்நாளிதழின் மற்றொரு செய்தி.
நடிகர் அர்ஜூன் பெண்களை மிகவும் மதிப்பவர். அவரிடம் இருந்து சுருதி ஹரிகரன் கற்க வேண்டியது நிறைய உள்ளது. அர்ஜூன் மீது அவர் கூறியுள்ள பாலியல் குற்றச்சாட்டு பொய்யானது. அவர் எப்படிப்பட்டவர் என்று எங்களுக்கு தெரியும். அவரை பற்றி தென்இந்திய சினிமா உலகிற்கு தெரியும். இந்த துன்புறுத்தல் நடந்தபோதே அவர் இதை பகிரங்கப்படுத்தி இருக்க வேண்டும் என்று அர்ஜூனின் மனைவி ஆஷா ராணி, மகள் ஐஸ்வர்யா கூறியதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.
அதுபோல, நடிகர் தியாகராஜன் மீதும் பாலியல் புகார் கூறப்பட்டுள்ளதாக விவரிக்கிறது தினமலர் நாளிதழ்.



‘அடுத்த ஐஸ்வர்யா ராய் என ஆசை காட்டினார்’
'அடுத்த ஐஸ்வர்யா ராய் ஆக்குகிறேன் என, ஆசை காட்டினார்' என, நடிகரும், இயக்குனருமான, தியாகராஜன் மீது, பெண் புகைப்பட கலைஞர் பிரித்திகா மேனன் பாலியல் புகார் தெரிவித்து உள்ளார் என்கிறது தினமலர் நாளிதழ்.
"பிரசாந்த், கதாநாயகனாக நடித்த, பொன்னர் சங்கர் படத்தில், நான் புகைப்பட கலைஞராக பணிஆற்றினேன். அப்படத்தின் இயக்குனரான தியாகராஜன், 'தாய்லாந்து நாட்டு பெண்கள், எனக்கு மசாஜ் செய்தனர்; அவர்களுடன் உல்லாசமாக இருந்தேன்' எனக்கூறி, சில புகைப்படங்களை, என்னிடம் காட்டினார்.இதை தொடர்ந்து, நள்ளிரவில் நான் தங்கி இருந்த, அறை கதவை தட்டி பயமுறுத்தினார். இரவு முழுவதும் துாங்காமல், பயத்துடன் இருந்தேன். ஷூட்டிங்கின் போது, ஆபாசமாக பேசுவார். என்னை, 'அடுத்த ஐஸ்வர்யா ராயாக மாற்றுகிறேன்' என்றார்." என்று பிரித்திகா மேனன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாக விவரிக்கிறது அந்நாளிதழ்.
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக மறுப்பு தெரிவித்துள்ளார் தியாகராஜன்.


தினமணி: 'துணை ராணுவப் படையில் 61,000 காலிப் பணியிடங்கள்'

பட மூலாதாரம், Getty Images
நாட்டில் உள்ள 6 துணை ராணுவப் படைகளில், மத்திய துணை ராணுவப் படையில் சுமார் 61,000 காலிப் பணியிடங்கள் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சக புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன என்கிறது தினமணி நாளிதழ்.
"நாட்டின் மிகப்பெரிய துணை ராணுவப் படையான மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (சிஆர்பிஎஃப்), கடந்த மார்ச் 1-ஆம் தேதி வரையில் 18,460 காலிப் பணியிடங்கள் உள்ளன. அதே தேதியில், எல்லை பாதுகாப்புப் படையில் (பிஎஸ்எஃப்) 10,738 பணியிடங்கள் காலியாக உள்ளன.
சஷாஸ்திர சீமா பல் (எஸ்எஸ்பி) படைப் பிரிவில் 18,942 வீரர்களுக்கான தேவை உள்ளது. இந்தோ- திபெத் எல்லை காவல் படையில் 5,786 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதேபோல், அஸ்ஸாம் ரைஃபிள் படைப் பிரிவில் 3,840 பணியிடங்களும், மத்திய தொழிலக பாதுகாப்புப் படையில் (சிஐஎஸ்எஃப்) 3,812 பணியிடங்களும் காலியாக உள்ளன. பணி ஓய்வு, ராஜிநாமா, மரணம், புதிய பணியிடங்கள் மற்றும் படைப் பிரிவுகள் உருவாக்கம் ஆகிய காரணங்களால் இந்த காலிப் பணியிடங்கள் ஏற்பட்டுள்ளன. இவை நேரடி ஆள்சேர்ப்பு முறையிலும், பதவி உயர்வு மற்றும் பணியிடமாற்றம் மூலமாகவும் நிரப்பப்பட்டு வருகின்றன" என்று மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாக விவரிக்கிறது அந்நாளிதழ்.

இந்து தமிழ்: 'சரிதா நாயர் பலாத்கார புகார்: உம்மண் சாண்டி கைது செய்யப்படுவாரா?'

பட மூலாதாரம், Getty Images
கடந்த 2013-ம் ஆண்டு, சோலார் பேனல் தகடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சரிதா நாயர் அளித்த பாலியல் புகார் அடிப்படையில் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மீதும், காங்கிரஸ் தலைவர் கே.சி வேணுகோபால் மீதும் போலீஸார் பலாத்கார வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்கிறது இந்து தமிழ் நாளிதழ்.
"திருவனந்தபுரம், தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று போலீஸாரால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அதில் சரிதா நாயரின் சோலார் தகடு நிறுவனத்தை ஊக்கப்படுத்தும் வகையில், அவரிடம் சட்டத்துக்கு புறம்பான வகையில் பாலியல் தொடர்பு வைத்திருந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் முதல்தகவல் வெளியே தெரியாத நிலையில் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
சோலார் பேனல்களை பொருத்திக் கொடுக்கும் நிறுவனம் நடத்திய சரிதா நாயகர், பண மோசடி செய்து விட்டதாக கைது செய்யப்பட்டார். அதன்பின் ஜாமீனில் வெளியேவந்த சரிதா நாயர் பல்வேறு புகார்கள் அப்போதைய முதல்வர் உம்மன் சாண்டி, காங்கிரஸ் தலைவர் கே.சி.வேணுகோபால் மீது சுமத்தினார்.
சோலார் பேனல் பொருத்தும் பணியைத் தனது நிறுவனத்துக்கு வழங்குவதற்குப் பலருக்கும் பணம் லஞ்சமாக கொடுத்ததாகவும், பணத்திற்குப் பதில் சிலர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறினார்.
சோலார் பேனல் பொருத்தும் பணி தொடர்பாக தான் பலமுறை உம்மன் சாண்டியை சந்தித்து பேசியுள்ளதாகவும், அப்போது உம்மன் சாண்டியும் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தினார். .
தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை உம்மன்சாண்டி மறுத்தார். இதேபோல கே.சி.வேணுகோபாலும் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்தார்." என்று விவரிக்கிறது இந்து தமிழ் நாளிதழ்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா: 'கோலி, ரோகித் அதிரடியில் வென்றது இந்தியா'

பட மூலாதாரம், BCCI/Twitter
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே கெளஹாத்தியில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வென்றுள்ளது குறித்த செய்தியை டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் வெளியிட்டுள்ளது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 322 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் இளம் வீரர் ஹெட்மேயர் 78 பந்துகளில் 106 ரன்கள் எடுத்தார்.
323 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் காலத்தில் இறங்கிய இந்தியா தொடக்கத்தில் தவானின் விக்கெட்டை சொற்ப ரன்களில் இழந்தது.
பின்னர் களமிறங்கிய கோலி ரோகித்துடன் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டார். 107 பந்துகளில் 140 ரன்களை அவர் எடுக்க, இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ரோகித சர்மா 117 பந்துகளில் 152 ரன்கள் எடுத்தார்.
இறுதியில் 42.1 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டிய இந்தியா 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வென்றது. ஆட்ட நாயகனாக கோலி அறிவிக்கப்பட்டார் என்பதையும் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












