கேரளாவில் மோடி தெரிவித்த கருத்தால் சர்ச்சை

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சோமாலியா நாட்டுடன் கேரள மாநிலத்தை ஒப்பிட்டது, சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கேரளாவை சோமாலியாவுடன் ஒப்பிட்ட இந்தியப் பிரதமரின் கருத்தை மாநில முதலவர் கண்டித்துள்ளார்

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, கேரளாவை சோமாலியாவுடன் ஒப்பிட்ட இந்தியப் பிரதமரின் கருத்தை மாநில முதலவர் கண்டித்துள்ளார்

கேரளாவில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, கேரளாவில் வசிக்கும் பழங்குடியின மக்களின் மத்தியில் குழந்தை இறப்பு விகிதம் சோமாலியாவில் இருப்பதைவிட அதிகம் என்று குறிப்பிட்டார்.

மோடியின் இந்தக் கருத்துக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. ‪

பிரதமரின் கருத்துக்கள் ஆதாரமற்றவை என மாநில முதலமைச்சர் உம்மன் சாண்டி கூறியிருக்கிறார். இந்தக் கருத்துக்கு மன்னிப்புக் கேட்க வேண்டுமெனக் கோரி, பிரதமருக்கு உம்மன் சாண்டி கடிதம் ஒன்றையும் எழுதியிருக்கிறார்.

கேரளாவில் மே 16ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கவுள்ளது.

தொடர்ந்து காங்கிரஸ் கட்சியாலும் இடதுசாரிக் கூட்டணியாலும் ஆளப்பட்டுவரும் கேரள மாநிலத்தில் பாரதீய ஜனதாக் கட்சி கால் ஊன்றுவதற்குத் தீவிரமாக முயற்சித்துவருகிறது.

ஆனால்,மோடியின் சமீபத்திய பிரச்சாரம் இதற்கு பின்னடைவை ஏற்படுத்தியிருப்பதாகக் கருதப்படுகிறது.

ஊட்டச்சத்துக் குறைப்பாட்டால் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் சோமாலியாவும் ஒன்று.

ஆனால் இந்தியாவில் குழந்தைகள் இறப்பு விகிதம் மிகக் குறைவாக இருக்கும் மாநிலம் கேரளா.

எனவே "உண்மைக்குப் பொருந்தாத ஒரு கருத்தை நீங்கள் தெரிவித்திருக்கிறீர்கள். சோமாலியாவை கேரளாவுடன் ஒப்பிட்டிருக்கிறீர்கள். இது ஒரு பிரதமருக்கு அழகல்ல. இது பெரும் வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது" என உம்மன் சாண்டி தன் கடிதத்தில் கூறியிருக்கிறார்.