செம்மொழி ஆய்வு நிறுவன துணைத்தலைவர் நியமனத்தில் சர்ச்சை
மத்திய செம்மொழி ஆய்வு நிறுவனத்தின் தற்போதைய துணைத் தலைவரை நீக்கிவிட்டு புதிய துணைத் தலைவரை நியமிக்கும் முயற்சி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

2004ஆம் ஆண்டில் மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டில் மத்திய செம்மொழி ஆய்வு நிறுவனம் உருவாக்கப்பட்டது.
அதம் துணைத் தலைவராக தற்போது செயல்பட்டுவரும் அவ்வை நடராஜன், நீக்கப்பட்டிருப்பதாகவும் சென்னை பச்சையப்பன் கல்லூரியின் ஓய்வுபெற்ற பேராசிரியர் பி. பிரகாசம் புதிய தலைவராக நியமிக்கப்பட்டிருப்பதாகவும் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் கடந்த 21ஆம் தேதி அறிவித்த்து.
இந்த உத்தரவை எதிர்த்து அவ்வை நடராஜன் உயர்நீதிமன்றத்தை அணுகி இடைக்காலத் தடையைப் பெற்றிருக்கிறார்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சிக் காலத்தில் தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்ட பிறகு, உயர் ஆய்வுகளுக்காக இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டது. உருவாக்கப்பட்டு சில வருடங்கள் மைசூரில் செயல்பட்டுவந்த இந்த அமைப்பு பிறகு சென்னைக்கு மாற்றப்பட்டது.
மாநில முதலமைச்சரே இந்த அமைப்பின் தலைவராக இருப்பார். நீண்ட காலமாக இந்த அமைப்பின் துணைத் தலைவராக மனித வள மேம்பாட்டுத் துறையின் இணை அமைச்சர்கள் செயல்பட்டுவந்தனர். ஆனால், ஏழு மாதங்களுக்கு முன்பாக, கடந்த பிப்ரவரி 25ஆம் தேதியன்று, அவ்வை நடராஜன் இதன் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
தலைவர் வராத நிலையில் கூட்டங்களுக்குத் தலைமை தாங்குவது மட்டுமே துணைத் தலைவரின் பணியாக இருந்தது என்று நியமன ஆணையில் குறிப்பிடப்பட்டிருந்ததாகக் கூறுகிறார் அவ்வை நடராஜன்.
அம்மாதிரி சில கூட்டங்களில் கலந்துகொண்ட நிலையில்தான் தனக்குப் பதிலாக வேறொருவர் நியமிக்கப்பட்ட உத்தரவு வெளியானதாகவும் 2017வரை தனக்குப் பதவிக்காலம் இருக்கும்போது, தன்னை ஏன் நடுவில் நீக்கினார்கள் என்றும் கேள்வியெழுப்புகிறார் நடராஜன்.
துணைத் தலைவரை நீக்குவதற்கென விதிகள் எதுவுமே தன் நியமன ஆணையில் குறிப்பிடப்படவில்லை என்கிறார் நடராஜன். மத்தியில் ஆட்சி மாற்றம் நடக்கும்போது, ஆளுநர்கள் மாற்றப்படுவதைப் போல இதைச் செய்யக்கூடாது என்கிறார் அவர்
தான் தி.மு.கவிற்கு நெருக்கமானவன் என்பது இதற்கு ஒரு காரணமாக இருக்க முடியாது என்கிறார் நடராஜன்.
தரமணியில் செயல்பட்டுவரும் அந்த ஆய்வு நிறுவனத்தில் தனக்கென அறையேதும் ஒதுக்கப்படவில்லையென்றும் இந்தப் பதவிக்கென ஊதியம் ஏதும் இல்லாத நிலையில், வாகனம் போன்ற வசதிகளும் தரப்படவில்லை என்றும் தெரிவிக்கிறார் அவ்வை நடராஜன்.
செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் பதிவாளரிடம் இந்த பதவி நீக்க உத்தரவு குறித்துக் கேட்டபோது, நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து இந்த சர்ச்சை முடிவுக்கு வந்துவிட்டது என்று மட்டும் தெரிவித்தார்.
3 வாரங்களுக்குள் அவ்வை நடராஜனை நீக்கியது ஏன் என்பது குறித்து பதிலளிக்கும்படி மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையின் செயலருக்கு நோட்டீஸ் அனுப்பும்படி சென்னை உயர்நீதிமன்றம் தனது இடைக்கால உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.












