தீபாவளி, பட்டாசு குறித்து அண்ணாமலை சொல்வது சரியா? ஒருநாள் பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு ஏற்படாதா?

தீபாவளி பட்டாசுகள்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், க. சுபகுணம்
    • பதவி, பிபிசி தமிழ்

தீபாவளி பண்டிகை என்று வந்துவிட்டாலே 90களில் பிறந்தோருக்கு முதலில் நினைவுக்கு வருவது பட்டாசுதான். ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் தீபாவளி என்று வந்துவிட்டாலே பட்டாசுடன் சேர்த்து காற்று மாசு என்ற சொல்லையும் மக்கள் கேட்டுப் பழகிவிட்டனர்.

திபாவளி நேரத்தில் பட்டாசு வெடித்தால் காற்று மாசு ஏற்படும் என்பதால் பட்டாசுகளைத் தவிர்க்க வேண்டுமென்று ஒரு தரப்பினர் வலியுறுத்துகின்றனர். இந்தியாவில் பல மாநிலங்களில் பட்டாசுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் பசுமை பட்டாசுகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பட்டாசுகளுக்கு முற்றிலுமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை, டெல்லி போன்ற நகரங்களில் தீபாவளி வாரம் தொடங்கியவுடனேயே பட்டாசு சத்தமும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில், 22ஆம் தேதியன்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பண்டிகைக்கான வாழ்த்துகளுடன் சேர்த்து பட்டாசுகள் குறித்தும் தன்னுடைய கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

அப்போது, "நிறைய பட்டாசுகளை வெடியுங்கள். சிவகாசி மக்கள் நிறைய கஷ்டப்படுகிறார்கள். அங்கு 8 லட்சம் பேர் இதை நம்பியுள்ளனர். எனவே அதிக பட்டாசுகளை வாங்கி வெடியுங்கள், பட்டாசு வெடிப்பது நம் கலாசாரம்.

சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு

ஒரு நாளில் எதுவும் ஆகப் போவதில்லை. ஆண்டு முழுவதும் ஓடும் வாகனங்களால் ஏற்படாத காற்று மாசு ஒரு நாளில் பட்டாசு வெடிப்பதிலா ஏற்படப் போகிறது. எனவே சிவகாசி வாழவும் தமிழகம் வாழவும் நிறைய பட்டாசுகளை வெடியுங்கள்," என்றார்.

பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு ஏற்படவில்லையா?

ஆனால், இந்தியாவின் தலைநகர் டெல்லியைப் பொறுத்தவரை தீபாவளி காலகட்டத்தில் பண்டிகை நாளுக்கு முன்னும் பின்னுமாகச் சேர்த்து 15 நாட்களுக்கான மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் தரவுகளைப் பகுப்பாய்ந்து பார்த்தால், 2020ஆம் ஆண்டில் வழக்கமான மாசுபாட்டு அளவை விட இரண்டு மடங்கு அதிக காற்று மாசு பதிவாகியிருப்பது தெரிகிறது.

2020ஆம் ஆண்டுக்கான தீபாவளி மற்றும் அதற்கு முன்னும் பின்னுமான காற்று, ஒலி மாசுபாடு குறித்த மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் அறிக்கை, "பட்டாசுகளை வெடிப்பதால் கந்தக மாசுபாடு ஏற்படுவது, டெல்லி, லக்னோ, போபால், வதோதரா ஆகிய நகரங்களின் காற்று மாசு தரவுகளின் மூலம் தெளிவாகத் தெரிகிறது," என்று குறிப்பிட்டது.

டெல்லியில் 2020ஆம் ஆண்டில் தீபாவளியின்போது சராசரி காற்று மாசுபாட்டுக்கான பிஎம்2.5 அளவு 618. அதுவே 2019ஆம் ஆண்டில் 512, 2018இல் 936 மற்றும் 2017 தீபாவளியின்போது 604.

மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியம்
படக்குறிப்பு, 2020ஆம் ஆண்டு தீபாவளியின்போது காற்று மாசு அளவு டெல்லியில் 618 ஆக இருந்தது என்று மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரிய தரவுகள் கூறுகின்றன

பொதுவாக தீபாவளிக்குப் பிறகான காலகட்டத்தில் காற்று மாசுபாட்டின் அளவு டெல்லியில் மட்டும் அதிகபட்சமாக 77% குறைகிறது.

அதுமட்டுமின்றி, இந்திய நகரங்களில் 2017ஆம் ஆண்டு முதல் பட்டாசு வெடிப்பதில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வரத் தொடங்கியதில் இருந்து 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் காற்றிலுள்ள அலுமினியம், பேரியம் ஆகியவற்றின் அளவு, பிஎம்2.5இன் அளவு போன்றவை சீரான வீழ்ச்சியைச் சந்தித்திருப்பதாகவும் மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரிய தரவுகள் தெரிவிக்கின்றன.

சென்னையில் பட்டாசுகளின் விளைவு

சென்னையைப் பொறுத்தவரை, இப்போதே 23ஆம் தேதியின்படி ஆலந்தூர், மணலி கிராமம் போன்ற பகுதிகளில் காற்றில் பிஎம்2.5 அளவு 150 முதல் அதிகபட்சமாக 299 வரை காட்டுகிறது. கடந்த ஆண்டு தீபாவளி நாளான நவம்பர் 4ஆம் தேதிக்கு அடுத்த நாளின் மாசுபாட்டு அளவு தமிழகத் தலைநகரில் சராசரியாக 213 முதல் 500 வரை காணப்படுகிறது.

குறிப்பாக அரும்பாக்கம் போன்ற பகுதிகளில் தீபாவளி பண்டிகைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு 223 ஆக இருந்த காற்று மாசு அளவு, பண்டிகை முடிந்த அடுத்த நாளில் 500ஐ தாண்டியிருந்தது. 2020ஆம் ஆண்டு பண்டிகையின்போது சராசரி காற்று மாசு அளவு 376 முதல் 500க்கும் மேல் இருந்தது மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் தேசிய காற்று தர குறியீடு தரவுகளின் மூலம் தெரிகிறது.

பட்டாசு

பட மூலாதாரம், Getty Images

2019ஆம் ஆண்டு தரவுகளும் அதையே காட்டுகின்றன. சென்னையில் குறைந்தபட்சமாகவே பண்டிகைக்கு அடுத்த நாளில் பிஎம்2.5 அளவு 436 எனப் பதிவாகியுள்ளது. இதில் கவனிக்கத்தக்க அம்சம் என்னவென்றால், தீபாவளிக்கு அடுத்த நாளில் பதிவாகியுள்ள மோசமான காற்று மாசு அளவு, அதற்கு அடுத்த நாளில் குறிப்பிடத்தக்க அளவுக்கு குறைந்துள்ளது.

சான்றாக, 2019ஆம் ஆண்டு பண்டிகைக்கு அடுத்த நாளான அக்டோபர் 28ஆம் தேதியின் தரவுகள் மோசமான காற்று மாசுபாட்டைக் காட்டுகிறது. ஆனால், அதற்கு அடுத்த நாளில் அதிகபட்சமே 178 என்ற அளவில்தான் மாசுபாடு பதிவாகியுள்ளது. பண்டிகைக்கு மூன்று நாட்களுக்கு முன்பு இருந்த காற்று மாசு அளவைப் பார்க்கும்போதும் 88 என்ற அளவில் தான் இருந்துள்ளது.

அதேபோல், 2020ஆம் ஆண்டின் தரவுகளைப் பார்க்கும்போதும் பண்டிகை நாளான நவம்பர் 14ஆம் தேதிக்கு அடுத்த நாளில் 500ஐ தாண்டியிருந்த மாசுபாட்டு அளவு, இரண்டு நாட்கள் கழித்துப் பார்க்கையில் காற்று மாசு அளவு 311 ஆகக் குறைந்திருந்தது. பிறகு அதற்கு அடுத்த நாளே 173 ஆகக் குறைந்திருந்தது.

பண்டிகைக்கு மூன்று நாட்களுக்கு முன்னரும் நவம்பர் 11ஆம் தேதியின் மாசுபாட்டு அளவைப் பார்க்கையில் ஒரு சில இடங்களில் மட்டுமே 158, 192 எனப் பதிவாகியிருந்த பிஎம்2.5 அளவு, மற்ற இடங்களில் சராசரியாக 90 என்ற அளவிலேயே பதிவாகியிருந்தது.

பட்டாசு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2021ஆம் ஆண்டு தீபாவளிக்கு அடுத்த நாளான நவம்பர் 5ஆம் தேதியன்று டெல்லியின் சிக்னேச்சர் பாலத்தில் காற்று மாசு அளவு

2021ஆம் ஆண்டிலும் பண்டிகை நாளிலேயே பிஎம்2.5 அளவு 340ஐ தாண்டியிருந்தது. அதற்கு அடுத்த நாளின் தரவுகளைப் பார்க்கையில் குறைந்தபட்ச காற்று மாசு அளவே 303. ஆனால், பண்டிகையிலிருந்து மூன்றாவது நாளில் பார்க்கும்போது சராசரி மாசுபாட்டு அளவு 71 ஆக இருந்தது. பண்டிகை நாளுக்கு மூன்று நாட்கள் முன்னரும் சராசரி மாசுபாட்டு அளவு 95 ஆகவே இருந்தது.

தீபாவளி பண்டிகை நேரத்தில் காற்று மாசுபாடு குறிப்பிடத்தக்க அளவு உயர்வதை தமிழ்நாடு மாநில மாசுக்கட்டுப்பாடு வாரிய தரவுகள் மற்றும் மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரிய தரவுகளின் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது.

"தீபாவளிக்கு அடுத்த நாட்களில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கிறது"

பண்டிகை காலகட்டத்தில் ஏற்படும் காற்று மாசுபாடு காரணமாக ஒவ்வோர் ஆண்டும் சுவாசம் தொடர்பான பிரச்னைகளோடு நிறைய நோயாளிகள் வருவதைப் பார்க்கிறோம் என்கிறார் நுரையீரல் மருத்துவர் ஜெயராமன்.

"பட்டாசு மாசுகளைச் சுவாசித்ததால் பல பேர் பாதிக்கப்படுவதை நடைமுறையில் பார்க்கிறோம். ஏற்கெனவே ஆஸ்துமா பிரச்னை இருப்பவர்கள் சிலர் இந்த காலகட்டத்தில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் அளவுக்குக்கூட செல்கின்றனர். சுவாசக் கோளாறு, மூச்சுக்குழல் அழற்சி, அலர்ஜி, ஆஸ்துமா, நாட்பட்ட நுரையீரல் தடை நோய்(COPD) போன்ற நுரையீரல் பாதிப்புகளால் அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர்.

தீபாவளி-காற்று மாசுபாடு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பண்டிகை காலகட்டத்தில் சுவாசக் கோளாறுகள் முதியவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக மருத்துவர் ஜெயராமன் கூறுகிறார்

ஏற்கெனவே நுரையீரல் பிரச்னை இருப்பவர்கள், நுரையீரல் பலவீனமானோர் ஆகியோரின் உடல்நிலை பட்டாசு தூசுகளால் மோசமடைகிறது. இத்தகைய பிரச்னைகள் இல்லாதவர்களுக்கு மூச்சுக்குழல் அழற்சி, நாசியழற்சி, தோல் அலர்ஜி போன்ற பாதிப்புகளை தீபாவளி மாசுபாட்டால் அனுபவிப்பவர்களை கண்கூடாகப் பார்க்கிறோம்."

அதுமட்டுமின்றி, எளிதில் பாதிக்கக்கூடிய வயது வரம்பில் இருப்போர், குறிப்பாக முதியவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுவது, ஏற்கெனவே காசநோய், நுரையீரல் வீக்க நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களின் நிலைமை மோசமடைவது போன்றவை நிகழ்வதாக அறிவியல் ஆதாரங்களின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது எனக் கூறுகிறார் மருத்துவர் ஜெயராமன்.

"பட்டாசுக்கு தடை விதித்தால் மாற்று வழி என்ன?"

பட்டாசுக்கு தடை விதிப்பதாக இருந்தால், முதலில் பட்டாசு உற்பத்தியைச் சார்ந்து நாடு முழுவதுமுள்ள கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கும் உற்பத்தியாளர்களுக்கும் மாற்று வழியை அரசு வழங்க வேண்டும் என்று கூறுகிறார் சிவகாசியைச் சேர்ந்த பட்டாசு உற்பத்தியாளர் ஏ.ஆர்.ஜெயராஜன்.

பட்டாசு உற்பத்தியாளர்கள்

பட மூலாதாரம், Getty Images

ஒவ்வோர் ஆண்டும் மாநில அரசுகள் பட்டாசு வெடிக்கக் கூடாது என்று தடைகளையும் கட்டுப்பாடுகளையும் விதித்துக் கொண்டேயிருக்கின்றன. ஆனால், பட்டாசு வெடிக்கக்கூடாது என்று தடை, கட்டுப்பாடு போன்றவை விதிக்கப்படும் அதேவேளையில், ஒவ்வோர் ஆண்டும் பட்டாசு உற்பத்தியும் நாடு முழுக்க நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில், அதன் உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் மக்களுக்கு உரிய மாற்றை வழங்காதபோது அதை எப்படி கைவிட முடியும் என்று கேள்வியெழுப்புகிறார் ஜெயராஜன்.

"எவ்வளவோ நூற்றாண்டுகளாக இந்த கொண்டாட்டம் இருந்து வருகிறது. ஆண்டு முழுக்க மாசுபாடு இந்தியாவில் இருந்துகொண்டு தானே இருக்கிறது. இந்த ஒரு நாளின் மாசுபாட்டால் தான் நிலைமை மிகவும் மோசமாகிவிடுமா! தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதை நிறுத்திவிட்டால் காற்று மாசு சரியாகிவிடுமா!

சிவகாசியில் மட்டும் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் எட்டு முதல் பத்து லட்சம் பேர் பட்டாசு உற்பத்தியைச் சார்ந்து வாழ்கின்றனர். உற்பத்தி மட்டுமின்றி சரக்கு போக்குவரத்து, விற்பனை தொழிலாளர்கள் என்று இதன்மூலம் பல பேருக்கு வருமானம் கிடைக்கிறது.

அவர்களுக்கு ஒரு வழி காட்டிவிட்டு தடை செய்தால் நன்றாக இருக்கும். அதைச் செய்யாமல் பட்டாசுகள் வெடிப்பதற்கு மட்டும் தடை விதிப்பது சரியா?," என்கிறார் ஜெயராமன்.

Banner
காணொளிக் குறிப்பு, அழிந்து வரும் இனமான வரி வால் குரங்கு - நான்கு இரட்டையர்களை பெற்றெடுத்த ‘ஜீயஸ்’

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: